உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  முக்கிய பதவிகளில் நீடிக்கும் தி.மு.க., ஆதரவு அதிகாரிகள்!

 முக்கிய பதவிகளில் நீடிக்கும் தி.மு.க., ஆதரவு அதிகாரிகள்!

மெதுவடையை கடித்தபடியே, “விதிகளை மீறி பணியில் நீடிக்கறா ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா. “எந்த துறையில வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. “சிவகங்கை மாவட்டத்தில் ஒன்பது தாலுகா ஆபீஸ்கள், சமூக பாதுகாப்பு, வழங்கல் துறை, தேர்தல் பிரிவுல நிறைய தாசில்தார்கள் வேலை பார்க்கறா... இதுல, தாலுகா ஆபீஸ் தாசில்தார்களை ஒரு வருஷத்துல மாத்திட்டு, வேற ஒருத்தருக்கு வாய்ப்பு தரணும் ஓய்... “ஆனா, பெரும்பாலான தாலுகா ஆபீஸ்கள்ல, பல வருஷங்களா ஒரே தாசில்தாரே பணியில நீடிக்கறா... இந்த மாவட்டத்தில், ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துடுத்து ஓய்... “இது சம்பந்தமா, சில தாசில்தார்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தா... இதனால, தாலுகா ஆபீஸ் தாசில்தார் பணிக்கு வரவே மற்ற பிரிவு தாசில்தார்கள் தயங்கறா... அதனால, இப்ப இருக்கற தாசில்தார்கள் ஒரே இடத்துல பல வருஷங்களா இருந்து, 'கல்லா' கட்டிண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா. “அமைச்சர் உத்தரவால அதிகாரிகள் புலம்புறாங்க...” என்றார் அந்தோணிசாமி. “எந்த அமைச்சரை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா, ஓடகரை பகுதியில் எம்.எல்.ஏ., நிதியில் கட்டிய பயணியர் நிழற்குடையை, தி.மு.க., - எம்.பி., கனிமொழி சமீபத்தில் திறந்து வச்சாங்க... அந்த பகுதி மக்கள், 'இங்க டவுன் பஸ்கள் நிற்கவே மாட்டேங்குது'ன்னு புகார் சொன்னாங்க... “உடனே கனிமொழி, 'இப்ப எங்க ஆட்சி இல்லையே'ன்னு நழுவிட்டாங்க... மறுநாள் அங்க, மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆய்வுக்கு போயிருக்காருங்க... “அவரிடமும் மக்கள் குறை சொல்ல, உடனே, 'டவுன் பஸ்கள் மட்டும் இல்லாம விரைவு பஸ்களும் இங்க நிற்கணும்'னு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுட்டாரு... “சென்னை, கோவை, சேலம், திருச்சியில் இருந்து வரும் பஸ்கள் துாத்துக்குடிக்கு அடுத்து திருச்செந்துார்ல தான் நிற்கும்... 'இப்படி ஒவ்வொரு நிறுத்தத்துலயும் நின்னு போனா லேட்டாகும்... அதுக்கு பயணியர் கோவப்படுவாங்க... நாங்க யார் பேச்சை கேட்கிறது'ன்னு போக்குவரத்து துறை அதிகாரிகள் புலம்புறாங்க...” என்றார் அந்தோணிசாமி. “என்கிட்டயும் அதிகாரிகள் தகவல் ஒண்ணு இருக்குது பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... “த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும், நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டாங்களே... இதுல, 'வணிகவரி துறையில் நிறைய ஊழல்கள் நடந்துச்சு... அதனால, ஜி.எஸ்.டி., வரி வசூல் குறைஞ்சது'ன்னும் குற்றம் சாட்டியிருந்தாங்க பா... “தி.மு.க., ஆட்சியில், அந்த கட்சி மேலிடத்துக்கு வேண்டிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்புல ஈடுபட்டாலும், அந்த நிறுவனங்கள் மீது வணிகவரி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல... ஆட்சி மாறிய சூழல்ல, வணிகவரி துறையில் பல அதிகாரிகளுக்கு இடமாறுதல் போட்டாங்க பா... “அதே நேரம், கடந்த ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கைக்கு ஆளான பெண் அதிகாரி உட்பட பல உயர் அதிகாரிகள், இன்னும் அதே பதவியில் நீடிக்கிறாங்க... 'இதுதான் த.வெ.க., அரசு சொன்ன மாற்றமா'ன்னு அந்த துறை ஊழியர்களே புலம்புறாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய். ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “ஸ்வப்னா மேடம்... சொல்லுங்கோ...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

baala
ஜூலை 09, 2026 12:21

விதிமுறை மீறி பணியாற்றினால் அரசால் ஒன்னும் செய்ய இயலாதா?


duruvasar
ஜூலை 04, 2026 12:01

அரசாங்க ஆபீசுகளில் லஞ்சம் இல்லாமல் பண்ணிடுவாள் என்பதெல்லாம் வெறும் ஸ்வப்னம் தான் ஓய்


duruvasar
ஜூலை 04, 2026 11:56

பொதுமக்களை பொறுத்தவரை அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லை என்பது வெறும் ஸ்வப்னம் தான் ஓய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை