உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  வரவு - செலவு கணக்கு வெளியிட தயங்கும் மின்வாரியம்!

 வரவு - செலவு கணக்கு வெளியிட தயங்கும் மின்வாரியம்!

பி ல்டர் காபியை பருகியபடியே, ''பணம் இல்லாம, வேலை கிடைக்கலன்னு புலம்பறா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையில், ஏற்கனவே உதவி இயக்குநர்கள் பதவி உயர்வுக்காக, பல லட்சங்களை வசூல் பண்ணிட்டதா புகார்கள் எழுந்தது... இது அடங்கறதுக்குள்ள, அடுத்த புகார் கிளம்பிடுத்து ஓய்... ''அதாவது, அலுவலக உதவியாளர் பணிக்காக, 30க்கும் மேற்பட்டவா விண்ணப்பிச்சா... இவாளுக்கு, 'இன்டர்வியூ'வும் நடத்தினா ஓய்... இதுல இருந்து, நாலு பேரை திரும்பவும் கூப்பிட்டு, இன்டர்வியூ பண்ணியிருக்கா... அவாள் ட்ட, தலா 7 லட்சம் ரூபாயை உயர் அதிகாரியின் ஊழியர் ஒருத்தர் வாங்கிண்டு, வேலையை உறுதி பண்ணியிருக்கார் ஓய்... ''அதே நேரம், இந்த வேலைக்கு விண்ணப்பிச்சிருந்த, கணவரை இழந்த சில பெண்கள், '7 லட்சம் ரூபாய் இல்லாம, எங்களுக்கு வேலை கிடைக்காம போயிடுத்தே'ன்னு புலம்பிண்டு இருக்காங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''அருள், முருகானந்தம் தள்ளி உட்காருங்க...'' என்றபடி வந்த அன்வர்பாயே, ''குட்கா பொருட்களை பறிமுதல் பண்ணி, பேரம் பேசியிருக்காங்க பா...'' என்றார். ''எந்த ஊர் போலீசாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''சென்னை வானகரம் போலீசார், போன வாரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில ஈடுபட்டிருந்தாங்க... அப்ப, ஒரு லோடு வேன்ல சோதனை நடத்தினாங்க பா... ''அதுல, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 'குட்கா' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்துச்சு... வேன்ல இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, குட்கா பொருட்களை வாங்க, கோயம்பேட்டில் காத்துட்டு இருந்த முஸ்டாக் அகமதுன்னு ரெண்டு பேரை பிடிச்சாங்க பா... ''வேன்ல இருந்த, 433 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செஞ்சாங்க... முஸ்டாக் வீட்டில், 5 லட்சம் ரூபாயை பறிமுதல் பண்ணிய போலீசார், அதை கணக்குலயே காட்டல பா... ''அதுவும் இல்லாம, முஸ்டாக்கின் அப்பாவுக்கு போலீசார் போன் போட்டு, மகனை வழக்கில் இருந்து விடுவிக்க, 10 லட்சம் ரூபாய் பேரம் பேசியிருக்காங்க... அவர், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதை தெரிவிக்க, அப்புறமா வழக்கு பதிவு பண்ணி, ரெண்டு பேரையும் கைது பண்ணியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''வரவு - செலவு கணக்கை வெளியிட பயப்படுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''தமிழக மின்வாரியத்தில், மின் வினியோகம் செய்ற பகிர்மான கழகம் தான் முக்கிய நிறுவனமா இருக்கு... இதுக்கு மின் கட்டணத்தால வருவாய் கிடைக்கு வே... ''ஆனாலும், செலவு அதை விட அதிகமா இருக்கிறதால, வருஷத்துக்கு, 10,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் வருது... மின் பகிர்மான கழகத்தின் வரவு - செலவு கணக்கை, அந்த நிதியாண்டு முடிஞ்ச ஆறு மாசத்துக்குள்ள தணிக்கை செஞ்சு, ஏழாவது மாசம் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிடணும் வே... ''ஆனா, தணிக்கையை சரியான நேரத்துக்கு முடிச்சாலும், இணையதளத்தில் வெளியிடாம அதிகாரிகள் இழுத்தடிக்காவ... ஏன்னா, மின்சாரம் கொள்முதல், கடன், வட்டி உள்ளிட்ட விபரங்கள் பொதுமக்களுக்கு தெரிஞ்சிடக் கூடாதுன்னு அதிகாரிகள் நினைக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி . பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை