பெஞ்சில் அமர்ந்ததுமே, ''சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதியின் தேர்தல் செலவுகளுக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி செலவு தொகை விடுவிக்காம இருக்கிறதா பேசியிருந்தோமுல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''ஆனா, சோழிங்கநல்லுார் தொகுதியில் வர்ற மாநகராட்சியின், 20 வார்டுகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கியிருக்கோம்... இதுல, ஓட்டுச்சாவடிகள்ல சாய்வு தளம், குடிநீர், கழிப்பறை வசதிகள், மோட்டார் பம்ப் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நடந்துட்டு இருக்கு... ''இதுபோல, தாம்பரம் தாலுகாவுல இருக்கும் ஏழு பஞ்சாயத்துகள்ல வர்ற ஓட்டுச்சாவடிகள்லயும், எல்லா அடிப்படை வசதிகளையும் செஞ்சிட்டு இருக்கோம்னு தொகுதியின் தேர்தல் அதிகாரி திருநாவுக்கரசு விளக்கியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி. உடனே, ''போலீஸ்ல புகார் குடுத்திருக்காரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''பெரம்பலுார் மாவட்டம், குன்னம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளரா அமைச்சர் சிவசங்கரும், அ.தி.மு.க., கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சியின் சரண்யாவும் போட்டியிடுறாங்க பா... ''சரண்யா, 'நீட் தேர்வில் தோல்வியடைந்த அரியலுார் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு அமைச்சர் சிவசங்கர் தான் காரணம்... அனிதாவை அவர்தான் கொலை பண்ணிட்டார்'னு, சமூக வலைதளங்கள்ல பிரசாரம் செஞ்சாங்க பா... ''இதனால கடுப்பான சிவசங்கர், குன்னம் போலீஸ் ஸ்டேஷனில், சரண்யா மீது புகார் குடுத்துட்டாரு... அவங்க மன்னிப்பு கேட்காட்டி, நீதிமன்றத்தை நாடவும் முடிவு பண்ணியிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய். ''நிறைய விதிமீறல்கள் நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''எங்கங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் இருக்கறதால, பாறைகளை உடைக்க தடை இருக்கு... குன்னுார் தொகுதியில், அரசு நுாலகம் அமைக்கற பணிகள் நடக்கறது ஓய்... ''இதுக்காக, நிலச்சரிவு அபாய பட்டியல்ல இருக்கற தனியார் இடத்துல மண் மேடுகளை அகற்றியும், பாறைகளை உடைச்சும், கட்டுமான பணிகளை செய்றா... குன்னுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமசந்திரன் ஆதரவுல இந்த பணிகள் நடக்கறதால, நடவடிக்கை எடுக்காம அதிகாரிகள் வேடிக்கை பார்க்கறா ஓய்... ''அதோட, பிருந்தாவன் பகுதியில் புதிய தீயணைப்பு நிலைய பணிகளுக்கு நிறைய மண்ணை தோண்டி எடுக்கறா... 'அஞ்சு வருஷமா எந்த திட்டங்களையும் தொகுதிக்கு எம்.எல்.ஏ., கொண்டு வரலன்னாலும், இந்த மாதிரி விதிமீறல்களுக்கு துணையா இருக்காரே'ன்னு தொகுதி மக்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''தேர்தல் பணிகள்ல ஈடுபடாம, 'டிமிக்கி' குடுக்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''வழக்கமா அரசு ஊழியர்கள், ஆசிரியர் களை தேர்தல் பணிகள்ல ஈடுபடுத்துவாங்க... மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பில் இருக்கிறவங்க, ஓய்வு வயதை நெருங்குறவங்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாட்டாங்க... ''ஆனா, இந்த தேர்தல்ல மகப்பேறு விடுப்பில் இருக்கிறவங்க தவிர, மற்ற எல்லாரையும் ஈடுபடுத்தியிருக்காங்க... அதே நேரம், சென்னையில் இருக்கிற கல்லுாரி கல்வி இணை இயக்குநர் அலுவலக பணியாளர் ஒருத்தர் கூட தேர்தல் பணிக்கான விண்ணப்பத்தை இன்னும் சமர்ப்பிக்காம இருக்காங்க... ''இதனால, 'இவங்க மட்டும் தேர்தல் பணியில் ஈடுபடாம இருந்தா என்ன அர்த்தம்'னு மற்ற பணியாளர்கள் எல்லாம் புலம்புறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.