உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  தலா ஒரு தொகுதிக்கு துண்டு போடும் காங்., அணிகள்!

 தலா ஒரு தொகுதிக்கு துண்டு போடும் காங்., அணிகள்!

''எ ன்ன பண்றதுன்னு தெரியாம முழிக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தீபம் ஏத்த விடாம தி.மு.க., அரசு தடுத்துட்டுல்லா... இது சம்பந்தமா, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் ஆலோசனை நடத்தி, ஒரு முடிவெடுத் திருக்காவ வே... ''அதாவது, வர்ற மார்ச் 2ம் தேதி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை திரட்டி, திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வர திட்டமிட்டிருக்காவ... இதை, உளவுத்துறை மூலமா மோப்பம் பிடிச்சிட்ட ஆளும் தரப்பு அதிர்ச்சியில இருக்கு வே... ''ஏற்கனவே, தீபம் விவகாரத்துல ஹிந்துக்கள் அதிருப்தியில இருக்காவ... இப்ப, கிரிவலத்தையும் தடுத்தா, தேர்தல் நேரத்துல பெரிய பின்விளைவை ஏற்படுத்துமே... அதனால, 'இதை எப்படி சமாளிக்கிறது'ன்னு ஆளுங்கட்சி மேலிடம் கவலையில இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி. ''சீட் வாங்க கடும் போட்டி நடக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கூடலுார்னு மூணு சட்டசபை தொகுதிகள் இருக்கு... இதுல, 'சீட்' வாங்க அ.தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில கடும் போட்டி நிலவுது பா... ''இப்ப, கூடலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கிற பொன் ஜெயசீலன், மக்களிடம் தனக்கு ஆதரவு இருக்குன்னும், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாதங்வேலு, கடந்த காலங்கள்ல, தான் செஞ்ச தீவிரமான கட்சி பணிகளை சுட்டிக்காட்டியும், மேலிடத்திடம் சீட் கேட்கிறாங்க பா... ''ஊட்டி தொகுதிக்கு மாவட்ட செயலர் வினோத், 'மாஜி' அமைச்சர் புத்திசந்திரன் கடுமையா முட்டி மோதுறாங்க... குன்னுார் தொகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, முன்னாள் மாவட்ட செயலர் பாலநந்தகுமார்னு ரெண்டு பேர் கடுமையா போராடுறாங்க... ''இவங்க எல்லாருக்குமே கட்சி மேலிடத்தில் செல்வாக்கு இருக்கிறதால, இதுல யாருக்கு சீட் கிடைக்கும்னு, கட்சியினர் மத்தியில பட்டிமன்றமே நடக்குது பா...'' என்றார், அன்வர்பாய். ''எங்களை, 'டம்மி'யாவே வச்சிருக்காளேன்னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து, காங்., கட்சி சார்பில் சமீபத்தில் டில்லியில் ஆலோசனை கூட்டம் நடந்துச்சோல்லியோ... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்துல, தமிழக காங்., முன்னாள் தலைவர்கள், தேசிய செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்னு, 41 பேர் கலந்துண்டா ஓய்... ''இந்த கூட்டத்துக்கு கட்சியில் இருக்கற மகளிர் அணி, மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகளுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கல... இதனால, 'கட்சி வளர்ச்சிக்கு நாங்களும் தான் கடுமையா உழைக்கறோம்... ஆனாலும், எங்களை கறிவேப்பிலை மாதிரி தான் பயன்படுத்திக்கறா'ன்னு அவாள்லாம் புலம்பறா ஓய்... ''அதே நேரம், மேற்கண்ட அணி நிர்வாகிகள், 'வர்ற தேர்தல்ல எங்க அணிக்கு தலா ஒரு சட்டசபை தொகுதியை ஒதுக்கி தரணும்'னு மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கா... அவா கேட்டது கிடைக்குமான்னு தெரியல ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

venkat
ஜன 25, 2026 12:47

இந்து விரோத போக்கு, ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் நன்மை தராது.. சிறுபான்மையினர் என்று ஓட்டுக்காக செய்யும் அரசியல் அப்பட்டமாக தெரிகிறது.. இவர்கள் செயலில் சமத்துவமும் இல்லை, சமூக நீதியும் இல்லை. ஓட்டு வெறி மட்டுமே உள்ளது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை