குப்பை நகரமான மணவாளநகர் தொற்று நோய் பரவும் அபாயம்
மணவாளநகர், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாள நகர். இங்குள்ள 15 வார்டுகளில், 25க்கும் மேற்பட்ட நகர்களும், 200க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. இப்பகுதியில் 40,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் இல்லாததால், தினமும் சேகரமாகும் 3 டன் குப்பையை முறையாக அகற்ற முடிவதில்லை. மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டமும் செயல்பாட்டில் இல்லாததால், நெடுஞ்சாலையோரம் மற்றும் கூவம் ஆற்றுப்பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அதேபோல், இப்பகுதியில் உள்ள திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோரம் குப்பை அகற்றப்படாமல் குவிந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையோரம் உள்ள குப்பையை உண்ண வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள், மணவாளநகர் பகுதியில் தினமும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.