விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை பணி விரைவாக முடிக்க அரசு முயற்சி: அமைச்சர் வேலு
சென்னை, ''விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலைப்பணியை விரைவாக முடிக்க, அரசு முயற்சிகள் எடுக்கும்,'' என, அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:காங்., - பிரின்ஸ்: கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுதுார் கடை முதல் கருங்கல் வரையுள்ள சாலையை, விரிவுப்படுத்த அரசு முன்வருமா?அமைச்சர் வேலு: இச்சாலையில், 5 கி.மீ., இரு வழி சாலையாக உள்ளது. மீதமுள்ள பகுதி, இந்த நிதியாண்டில் விரிவாக்கம் செய்யப்படும்.பிரின்ஸ்: இச்சாலை, 5 மீட்டர் அகலம் உள்ளது. இதை 7 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்க வேண்டும். அமைச்சர் வேலு: தற்போது, 5.5 மீட்டர் அகலம் சாலை போடப்படுகிறது. விரிவாக்கம் செய்ய, நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.பிரின்ஸ்: எஸ்.எச்., 91 சாலை, அரசேரி - புதுக்கடை சாலை, குறுகலாக உள்ளது. விரிவாக்கம் செய்ய வேண்டும். அமைச்சர் வேலு: இரணியல் - திங்கள் நகர் சந்திப்பு, ஒரு கி.மீ., நீளமுள்ள நகரப்பகுதி. அதை விரிவுப்படுத்த, நிலம் எடுக்க வேண்டியுள்ளது. நிலம் எடுத்ததும் சாலை அகலப்படுத்தப்படும்.தி.மு.க., - ஏ.ஆர்.ஆர்.ரகுராமன்: சாத்துார் தொகுதியில், ஏழாரமன்னை, மாதாங்கோவில் பட்டி கிராமங்களில், குறுகிய சாலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.அமைச்சர் வேலு: அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்: விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, ஒப்பந்ததாரர்கள் மாறி மாறி 'டெண்டர்' எடுத்தும், இன்னும் பணி செய்யவில்லை.அதற்கு பின் துவக்கப்பட்ட சாலைப்பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே, இச்சாலையை விரைவாக முடிக்க வேண்டும்.அமைச்சர் வேலு: உண்மை தான். நீண்ட நாளாக பணி நடந்து கொண்டிருக்கிறது.ஒப்பந்ததாரர் பணி செய்யாததால், மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது.புதிய நிறுவனம் பணி செய்ய முன்வந்துள்ளது. விரைவாக சாலை அமைக்க, அரசு முயற்சி எடுக்கும்.தி.மு.க., - பிரகாஷ்: ஓசூர் - தளி சாலை, இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இடையில் 5 கி.மீ., சாலை போடப்படாமல் உள்ளது. இந்த ஆண்டு, அந்த சாலை போடப்படுமா?அமைச்சர் வேலு: இந்த ஆண்டு எடுத்து கொள்ளப்படும்.அ.தி.மு.க., - சேவூர் ராமச்சந்திரன்: கண்டமங்கலம் - ஆரணி சாலையில், 1.2 கி.மீ., நான்கு வழிச்சாலையாக உள்ளது. மீதி, 16 கி.மீ., இருவழிச் சாலையாக உள்ளது. அதை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும்.அமைச்சர் வேலு: விதிகளுக்கு உட்பட்டிருந்தால், பணி செய்யப்படும்.தி.மு.க., - சுதர்சனம்: மாதவரம் ரவுண்டானா முதல் சோழவரம் டோல்கேட் வரை, உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு ஜி.எஸ்.டி., வரியை தவிர்க்க வேண்டும் என, மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.முதல்வர் மற்றும் அமைச்சர், மத்திய அரசுடன் பேசி, மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் வேலு: மத்திய அரசை பொறுத்தவரை, பல திட்ட அறிக்கை தயார் செய்துள்ளனர். ஒன்றன் பின் ஒன்றாக நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த ஆண்டு வலியுறுத்தி பாலப்பணியை துவக்க முயற்சி எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.