தனி அலுவலர்கள் நியமனத்தில் நடந்த , கவனிப்பு!
இஞ்சி டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''நீறுபூத்த நெருப்பா இருக்குதுங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''என்ன விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''ஈரோடு எஸ்.பி., ஆபீஸ்ல பணியாற்றும் அமைச்சு பணியாளர்கள் ஏழு பேரை, போன டிசம்பர் மாசம் திடீர்னு, 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்க... 'இந்த இடமாறுதலை ரத்து செய்யணும், பெண் பணியாளர்கள் அளித்த பாலியல் புகார்களில், விசாகா கமிட்டி அமைக்கணும்'னு கேட்டு, அமைச்சு பணியாளர்கள் ரெண்டு நாள் போராட்டத்துல ஈடுபட்டாங்க...''அமைச்சு பணியாளர் சங்க நிர்வாகிகளுடன், போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி, போராட்டத்தை வாபஸ் பெற வச்சாங்க... ஆனாலும், இதுவரைக்கும் ஏழு பேரின் இடமாறுதல் ரத்தாகல... சும்மா, நிறுத்தி மட்டும் வச்சிருக்காங்க... ''இதனால, வெறுத்துப் போன அமைச்சு பணியாளர்கள், இந்த வருஷம் எஸ்.பி., ஆபீஸ் வளாகத்துல சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடலைங்க... போலீஸ் அதிகாரிகளும் இதை சீரியசா எடுத்துக்கல... ரெண்டு தரப்புக்கும் இடையில் மோதல் தொடருதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''இந்த போலீஸ் கதையையும் கேளுங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்துல வர்ற ஸ்டேஷன்கள்ல இருக்கிற போலீசார் பலரை, லோக்சபா தேர்தல் முடிஞ்சதும் டிரான்ஸ்பர் செஞ்சாங்க... ஆனா, உத்தரவு போட்டு பல மாசம் ஆகியும், அவங்க யாருமே புதிய இடங்களுக்கு போகல பா...''கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட எஸ்.ஐ., ஏட்டு கள், போலீஸ் எல்லாரும், புதிய இடத்துக்கு போகாம, பழைய இடத்துலயே நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்காங்க... அந்தந்த ஸ்டேஷன் உயர் அதிகாரிகளுக்கு அனுசரணையா இவங்க நடந்துக்கிறதால, இவங்களை, 'ரிலீவ்' பண்ணி அனுப்புறதுல அதிகாரிகளும் ஆர்வம் காட்டலை பா...'' என்றார், அன்வர்பாய்.''என்கிட்டயும் ஒரு டிரான்ஸ்பர் சங்கதி இருக்குல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''தயவு செஞ்சு போலீஸ் ஸ்டோரி போதும் ஓய்...'' என, சிரித்தார் குப்பண்ணா.''அது இல்ல... உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரி 5ம் தேதியோட முடிஞ்சு போயிட்டுல்லா... இப்ப, தனி அலுவலர்கள் கட்டுப்பாட்டுல தான், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் நடக்கு வே...''உதாரணத்துக்கு ஒன்றிய சேர்மனுக்கு பதிலா, கமிஷனர் கையில தான் முழு அதிகாரமும் இருக்கு... தனி அலுவலர்கள் இல்லாத இடங்கள்ல, உடனே நியமிக்கும்படி அரசாங்கம் உத்தரவு போட்டுச்சு வே...''ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாம, அதிகாரிகள் சுதந்திரமா செயல்படலாம்கிறதால, இந்த பதவிகளுக்கு கடும் போட்டி நடந்துச்சு... அதுலயும், 'பசை'யான இடங்களின் தனி அலுவலர் பதவிகளை பிடிக்க, ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் மற்றும் துறையின் உயர் அதிகாரிகளை செமத்தியா கவனிச்சிருக்காவ... இந்த கவனிப்பின் அடிப்படையில தான், தனி அலுவலர்கள் நியமனங்கள் நடந்திருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''அது சரி... இப்படி கொட்டிக் கொடுத்துட்டு, பதவிக்கு வர்ற தனி அலுவலர்கள், மோட்டு வளையை பார்த்துண்டா இருப்பா... போட்டதை விட பல மடங்கு அள்ளிடுவாளே...'' என, சலித்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.