''நடிகருக்கு சீட் உறுதின்னு சொல்லுதாவவே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''கமலை சொல்றீரா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''இல்ல... தி.மு.க., கூட்டணியில, இப்ப ராமநாதபுரம் எம்.பி.,யா இருக்கிறவர், முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி... இவருக்கு மறுபடியும் சீட் தர, அவரது கட்சியிலயே கடும் எதிர்ப்பு கிளம்பிட்டு வே...''இதனால, இந்த முறை தி.மு.க.,வே இங்க களம் இறங்க போவுதாம்... தொகுதியில, முஸ்லிம் மற்றும் தேவர் சமுதாய ஓட்டுகள் அதிகம் இருக்கு வே...''இந்த ஓட்டுகளை கவரும் விதமா, தேசிய தலைவர் படத்துல முத்துராமலிங்க தேவரா நடிச்ச பஷீரை நிறுத்த, ஆளுங்கட்சி திட்டமிட்டிருக்கு... 'சின்னவர்' ஆதரவும் இருக்கிறதால, அவருக்கே ராமநாதபுரத்தை குடுப்பாங்கன்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''பணிகள்ல குறைபாடு இருக்காம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த பணிகளை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணி பல வருஷமா நடக்கறதோல்லியோ... இந்த திட்டத்துல, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட இருக்கு ஓய்...''மொத்தம், 1,652 கோடி ரூபாய் மதிப்பிலான இதன் கட்டுமான பணிகளை, 'எல் அண்ட் டி' நிறுவனம் பண்றது... இதுவரைக்கும், ஆறு நீரேற்று நிலையங்கள் கட்டியிருக்கா ஓய்... ''அதோட, 1,046 கி.மீ., நீளத்துக்கு குழாய் பதிக்க இருக்கா... இதுல, நாலு மற்றும் ஐந்தாவது நீரேற்று நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் குழாய் பதிக்கறது உள்ளிட்ட பணிகளை, அ.தி.மு.க., ஆட்சியிலயே உள் ஒப்பந்த அடிப்படையில, ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருந்தா ஓய்...''ஆனா, அந்த நிறுவனம் செய்த பணிகள்ல சில குறைபாடுகளை அதிகாரிகள் கண்டுபிடிச்சிருக்கா... இது, சீக்கிரமே பெரிய பிரச்னையா வெடிக்கும்னு சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ஊழலுக்கு வழிவகுக்கும்னு சொல்றாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''ஊரக வளர்ச்சி துறையில கோலோச்சும் உயர் அதிகாரி மீது, பேட்டரி வாகன நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் கடும் அதிருப்தியில இருக்காங்க...''அதாவது, தமிழகம் முழுக்க, 40 மாவட்ட பஞ்சாயத்துகள்ல குப்பை அள்ள, 10,000 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டமிட்டிருக்காங்க பா... இதுல, ஒரு வாகனத்துக்கு அதிகபட்ச விலை நிர்ணயிச்சிருக்கிற இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு, 4,000 வாகனங்கள் வாங்குறதுக்கு, மாவட்டங்களுக்கு உயர் அதிகாரி தரப்புல வாய்மொழி உத்தரவு குடுத்திருக்காங்க...''ஆனா, குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்துள்ள நிறுவனங்களிடம், 600 - 700 வாகனங்கள் தான் வாங்கணும்னு சொல்லியிருக்காங்க பா...''அதிக எண்ணிக்கையில வாகனங்கள் வழங்குற நிறுவனத்தின் மேல ஏற்கனவே புகாரும், வழக்கும் நிலுவையில இருக்குது... அதே நிறுவனத்திற்கு, கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலும், இந்த உயர் அதிகாரி நிறைய, 'டெண்டர்'களை கொடுத்திருக்காரு பா...''இப்படி, அந்த நிறுவனத்துக்கு அதிகாரி ஓவரா முக்கியத்துவம் தர்றதால, நிறுவனமே உயர் அதிகாரியின், 'பினாமி'யா இருக்குமோன்னு சந்தேகப்படுறாங்க... அதனால, 'பேட்டரி வாகனங்கள் வாங்குற டெண்டரை ஒளிவு மறைவில்லாம, வெளிப்படையா நடத்தணும்'னு, துறையின் செயலருக்கு சில ஒப்பந்ததாரர்கள் மனு அனுப்பியிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.