மேலும் செய்திகள்
பொறுப்பு அதிகாரி அடாவடியால் போலீசார் வெறுப்பு!
03-Nov-2025
இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “பதவி உயர்வு இல்லாம புலம்புறாங்க...” என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. “யாருப்பா அது..” என கேட்டார், அன்வர்பாய். “சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்கள்ல சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு தனித்தனியா இன்ஸ்பெக்டர்கள் இருக்காங்க... திருட்டு மற்றும் கொள்ளை தொடர்பான வழக்குகளை குற்றப்பிரிவு போலீசார் தான் விசாரிப்பாங்க... “அதே நேரம், மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்கள்ல குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனியா இல்லாததால, நகை, பணம் திருட்டுன்னு பல வழக்குகள் தேங்கி கிடக்குது... குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாம பல வழக்கு பைல்களை மூடிடுறாங்க... “கடந்த 2011ல் எஸ்.ஐ.,யா பணியில் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர், 10 வருஷம் முடிச்சதும், இன்ஸ்பெக்டர் சம்பளம் வாங்கினாலும், எஸ்.ஐ., வேலையை தான் செய்றாங்க... இதே மாதிரி, 2016 பிப்ரவரியில் பணியில சேர்ந்த 1,034 எஸ்.ஐ.,க்கள், வர்ற 2026 பிப்ரவரியில், 10 வருஷத்தை முடிக்கிறாங்க... “இவங்க எல்லாம், 'மாவட்டங்கள்ல குற்றப்பிரிவுக்கு புதிய இன்ஸ்பெக்டர் பணியிடங்களை உருவாக்கி, எங்களுக்கு பதவி உயர்வு தரணும்'னு சொல்றாங்க...” என்றார், அந்தோணிசாமி. “டாக்டராவே செயல்படுறாரு பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... “திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கால்நடை மருத்துவமனையில், மருத்துவ உதவியாளரா இருக்கிறவர் தான், கால்நடைகளுக்கு வைத்தியம் பார்க்கிறார்... இங்க, தனியா டாக்டர் இருந்தாலும், உதவியாளர் தான் சிகிச்சை தர்றாரு பா ... “அதுவும் இல்லாம, அவரே மருந்து சீட்டு எழுதி குடுத்து, அதையும் குறிப்பிட்ட கடையில் தான் வாங்க சொல்றாரு... அப்படி வாங்காம விட்டா, அடுத்த முறை வர்றப்ப அவங்களை திட்டி, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் செய்றாரு பா... “இவர், பல வருஷங்களா இங்க இருக்கிறதால, எந்த டாக்டர் வந்தாலும், இவரை பகைச்சுக்க மாட்டேங்கிறாங்க... டாக்டர் இல்லாத நேரத்துல, கால்நடைகளை சிகிச்சைக்கு அழைச்சிட்டு வர்றவங்களிடம் பணமும் வசூல் பண்றாரு பா...” என்றார், அன்வர்பாய். “தென்னவன், தள்ளி உட்காரும்...” என்ற குப்பண்ணாவே, “அடாவடியா வசூல் பண்றார் ஓய்...” என்றார். “யாருவே அது...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. “கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., இருக்கோல்லியோ... இங்க, சதுர அடிக்கு இவ்வளவுன்னு, 'கட்டிங்' வசூல் நடக்கறது ஓய்... “அதேபோல, முன்னாடி எல்லாம், 1 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட பெரிய கட்டடங்களின் பணி நிறைவு சான்றுக்கு தான், 'கட்டிங்' வசூல் பண்ணுவா... இந்த பொறுப்பில் இருந்த பெண் அதிகாரி விடுப்பில் போயிருக்கறதால, தற்காலிகமா ஒரு அதிகாரி வந்திருக்கார்... இவர், 1 லட்சம் சதுர அடியை, 50,000 சதுர அடின்னு குறைச்சிட்டார் ஓய்... “இதன்படி, 50,000 சதுர அடிக்கு மேல கட்டறவா, இவருக்கு கட்டிங் வெட்டுனா தான் பணி நிறைவு சான்றிதழ் தரார்... யாரும் பணம் தர மறுத்தா, 'உங்க கட்டடத்துக்கு பிரச்னை வரும்'னு பகிரங்கமாவே மிரட்டறார் ஓய்...” என முடித்தார், குப்பண்ணா. “சரி, சபாபதி... நாளைக்கு பார்க்கலாம் பா...” என, நண்பரிடம் அன்வர்பாய் விடை பெற, மற்றவர்களும் கிளம்பினர்.
03-Nov-2025