இணைப்பு சாலையில் கும்மிருட்டு வழிப்பறி பீதியில் வாகன ஓட்டிகள்
மணலி, மணலியின் முக்கிய இணைப்பு சாலையான நெடுஞ்செழியன் தெருவில், தெருவிளக்குகள் எரியாததால் வழிப்பறி அச்சம் நிலவி வருகிறது. சென்னை, மணலி மண்டலத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள், மாதவரம் விரைவு சாலைக்கு செல்ல, நெடுஞ்செழியன் தெரு இணைப்பு சாலை ஒன்றே பிரதானம். இதன் காரணமாகவே இச்சாலையில், போக்குவரத்து மிகுதியாக இருக்கும். இங்கு, 1.80 கோடி ரூபாய் செலவில் மழைநீரில் மூழ்காதபடி இருக்க, கான்கிரீட் சாய்வுதளம் அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட, 200 மீட்டர் தொலைவில் இருக்கும், 10க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் மட்டும், ஒரு மாதமாக எரியவில்லை. இதனால், இரவு வேளையில் இணைப்பு சாலை முழுதும், கும்மிருட்டாக மாறிவிடுகிறது. அவ்வழியே செல்வோர் வழிப்பறி அச்சத்தில் உள்ளனர். தெருவிளக்குகள் இல்லாததால், இந்த இணைப்பு சாலையில் ஓராண்டிற்கு முன், பைக்கில் சென்ற முதியவர் மாட்டின் மீது மோதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. எனவே, மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் கவனித்து, தெருவிளக்குகள் பழுது பார்த்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.