உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பெண் ஊழியர்களை நள்ளிரவு வரை வேலை வாங்கும் அதிகாரி!

பெண் ஊழியர்களை நள்ளிரவு வரை வேலை வாங்கும் அதிகாரி!

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''பதவியை, பணத்துக்கு விற்பனை பண்ணியிருக்காங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''எந்த பதவியை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''சென்னை, துறைமுகம் தொகுதியில், 57வது வார்டு இருக்கு... அ.தி.மு.க., வுல இந்த வார்டு நிர்வாகியா, சமீபத்துல ஒருத்தரை நியமிச்சிருக்காங்க... இவர், கட்சிக்கு பெரிய அளவுல எந்த பங்களிப்பும் செஞ்சதே இல்ல பா... ''அதுவும் இல்லாம, கந்துவட்டி தொழில் வேற பண்ணிட்டு இருக்காரு... 'இவருக்கு எப்படி பதவி குடுத்தாங்க'ன்னு துறைமுகம் தொகுதி நிர்வாகிகள் ஆச்சரியப்படுறாங்க பா... ''விசாரிச்சதுல, பதவி வாங்கிய கந்துவட்டிக்காரர் பெரிய கில்லாடி யாம்... மாவட்ட நிர்வாகி கள் ரெண்டு பேருக்கு, மொத்தமா, 7 லட்சம் ரூபாயை வெட்டி தான் இந்த பதவியை வாங்கியிருக்காரு பா... ''இதனால, 'கட்சிக்காக உழைச்சவங்களுக்கு பதவி தராம, இப்படி பணம் குடுத்தவங்களுக்கு பதவி குடுத்தா, தேர்தல்ல ஜெயிச்ச மாதிரிதான்'னு அ.தி.மு.க., தொண்டர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''சத்தியநாராயணன் தள்ளி உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “தனியார் பார்களை கண்டுக்கிறது இல்ல வே...” என்றார். ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. “டாஸ்மாக் மது கடைகளின் எண்ணிக்கையை குறைக்கிறோம்னு, பல இடங்கள்ல மூடியிருக்காவ... ஆனா, அதுக்கு போட்டியா மனமகிழ் மன்றம் என்ற பெயர்ல, நிறைய தனியார் பார்களுக்கு அனுமதியை வாரி வழங்கியிருக்காவ வே... “இந்த பார்களை, பெரும்பாலும் ஆளுங்கட்சி புள்ளிகள், அவங்க உறவினர்கள் தான் நடத்துதாவ... இங்க, மது விற்பனையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கு வே... “இந்த இடங்கள்ல சோதனை நடத்த டாஸ்மாக் அதிகாரிகள், போலீசாருக்கு அதிகாரம் இல்லையாம்... கலால் துறையினர் தான் கண்காணிக்கணும்... அவங்களோ, 'நாங்க நடவடிக்கை எடுத்தாலும், அடுத்த நிமிஷமே ஆளுங்கட்சி புள்ளிகளிடம் இருந்து போன் வருது... அதனால, தனியார் பார்களையே தலைமுழுகிட்டோம்'னு விரக்தியா சொல்லுதாவ வே...” என்றார், அண்ணாச்சி. உடனே, “பூட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டத்தின் மகளிர் திட்ட அதிகாரி அடாவடியை கேளுங்கோ ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “தன்னை ரொம்பவே நேர்மையானவர் போல காட்டிண்டாலும், பெரிய தொகையா இருந்தா, 'டீலிங்' பேசி காரியத்தை முடிக்கறார்... ஏகப்பட்ட தில்லுமுல்லு கணக்கு எழுதி, மகளிர் திட்ட நிதியில் கணிசமான தொகையை பாக்கெட்டுல போட்டுக்கறார் ஓய்... “பெரும்பாலும் ராத்திரி, 7:00 மணிக்கு தான் ஆபீஸ் வரார்... 'அந்த பைலை எடுங்க, இந்த பைலை எடுங்க'ன்னு பெண் ஊழியர்களை ராத்திரி, 11:00 மணி வரைக்கும் வேலை வாங்கறார் ஓய்... “கர்ப்பிணி ஊழியர் ஒருவர் இதை தட்டி கேட்க, அவங்களுக்கு, 'மெமோ' குடுத்துட்டார்... சமீபத்துல அதிகாலை, 1:00 மணி வரைக்கும் மீட்டிங் நடத்தி, பெண் ஊழியர்களை மன உளைச்சல்ல தள்ளிட்டார் ஓய்... “சில பெண் ஊழியர்களை, தனக்கு எதிர்ல உட்கார வச்சு வெட்டி கதை பேசி ஜொள்ளு விடறார்... இந்த பூனைக்கு யார் மணி கட்டறதுன்னு தெரியாம, பெண் ஊழியர்கள் தவிக்கறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா. “சதீஷ்பாபு வர்றாரு... சுக்கு காபி குடுங்க...” என்றபடியே அந்தோணி சாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathya Gold
ஆக 10, 2025 17:18

இது போன்று ஒழுங்கீன பேச்சுக்களால் தங்களை தாங்களே கேவலப்படுத்தி கொள்ளும் அதிகாரிகளை முச்சந்தியில் நிற்க வைக்க வேண்டும்


Kanns
ஆக 09, 2025 06:13

Public Service& Equality Demands Equal Works incl Day& Night Works.Many Works esp Women SHG/Collection Works etc Begins Only after Completion of theur Works i.e. AN/Evenings. Those Not Liking Must Resign & Take Rest in Homes


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை