உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பருவமழை முன்னெச்சரிக்கை பணியில் அதிகாரி அலட்சியம்!

பருவமழை முன்னெச்சரிக்கை பணியில் அதிகாரி அலட்சியம்!

பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், “அலுவலகத்தை தன் வீடு மாதிரியே மாத்திட்டாரு வே...” என, அரட்டைக்கு பிள்ளையார் சுழி போட்டார் பெரியசாமி அண்ணாச்சி. “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி. “சென்னை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறையின் இயக்குநர் சமீபத்துல ஓய்வுல போனாரு... அவருக்கு மறுபடியும் பல்கலைக்கழகத்துல பேராசிரியர் பதவி குடுத்திருக்காவ வே.. . “சேத்துப்பட்டில் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான மைதானமும், அலுவலகமும் இருக்கு... இந்த அலுவலகத்துல தான் பேராசிரியர் பெரும்பாலும் தங்கியிருக்காரு... ‘தன் வீடு மாதிரியே அலுவலகத்தை பயன்படுத்திட்டு இருக்கார்’னு, ஊழியர்கள் எல்லாம் புலம்புதாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. உடனே, “மின் தடை பின்னணியில் சதி இருக்குன்னு சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா. “அப்படியா... விளக்கமா சொல்லுங்க பா...” என கேட்டார் அன்வர்பாய். “இடைத்தேர்தல்ல வெற்றி பெற்ற ரெண்டு த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களும், சமீபத்துல தலைமை செயலகத்துல சபாநாயகர் அறையில், எம்.எல்.ஏ.,க்களா பதவி ஏத்துண்டால்லியோ... அப்ப, அமைச்சர்கள் பலரும் நின்னுண்டு இருக்க, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் மட்டும், சபாநாயகருக்கு எதிர்ல இருந்த நாற்காலியில ஜம்முன்னு உட்கார்ந்துண்டார் ஓய்... “இது, இன்னொரு அமைச்சருக்கு எரிச்சலை குடுத்திருக்கு... அடுத்த சில மணி நேரங்கள்ல, தலைமை செயலகம் முழுக்கவே மின் தடை ஏற்பட்டது ஓய்... “இதனால, மின் துறை அமைச்சரை பலரும் வறுத்தெடுத்தா... ஆனா, ‘நிர்மல்குமார் உட்கார்ந்துட்டு இருந்ததால, கடுப்பான அமைச்சர் ஏற்பாட்டுல செயற்கையா மின் தடை செய்யப்பட்டது’ன்னு, கோட்டை ஊழியர்கள் மத்தியில பேசிக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா. “அதிகாரி மீது அதிருப்தியில இருக்காங்க பா...” என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய். “எந்த துறையில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “தமிழகத்துல வடகிழக்கு பருவமழை துவங்கிடுச்சே... இந்த மழையை எதிர்கொள்றது சம்பந்தமா, போன மாசமே முதல்வர் விஜய் தலைமையில ஆலோசனை கூட்டம் நடந்துச்சு பா... “இதுல, ‘மழை நீர் தேங்குவதை தடுக்க, நீர்நிலைகள், வடிகால்களை துார்வாரணும்... வெள்ள மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களை தயார் நிலையில வச்சிருக்கணும்’ என்பது உட்பட பல அறிவுரைகளை முதல்வர் குடுத்தாரு பா... “இந்த கூட்டத்துல, நீர்வளத் துறையின் உயர் அதிகாரியும் கலந்துக்கிட்டாரு... ஆனாலும், தன் துறை சம்பந்தமா செய்ய வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்கு, அரசாணை பிறப்பிக்காம அசால்டா இருக்காரு பா... “இது, ஆளுங்கட்சியினருக்கு அதிர்ச்சியை குடுத்திருக்கு... ‘எல் நினோ தாக்கத்தால, இந்த வருஷம் வடகிழக்கு பருவமழை அதிகமா பெய்யும்னு வானிலை ஆய்வாளர்கள் எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க... அப்படி மழை பெய்ஞ்சு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டா, த.வெ.க., அரசுக்கு தானே கெட்ட பெயர் வரும்... இது அதிகாரிக்கு தெரியாதா’ன்னு, த.வெ.க.,வினர் எல்லாம் புலம்பிட்டு இருக்காங்க பா...” என முடித்தார் அன்வர்பாய். “பிரசாந்த், இப்படி உட்காருங்க...” என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
அக் 16, 2026 12:37

நீர் வள துறை அமைச்சருக்கு முதல்வர் எங்க போனாலும் பின்னாடி குடை பிடிச்சுக்கிட்டு போகவே நேரம் சரியா இருக்கு. வெள்ள பாதிப்பு பற்றியெல்லாம் கவலை பட அவருக்கு நேரம் எங்க இருக்கு.


சமீபத்திய செய்தி