உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குவாரிகளிடம் ரூ.15 கோடி கட்டிங் கேட்ட அதிகாரிகள்!

குவாரிகளிடம் ரூ.15 கோடி கட்டிங் கேட்ட அதிகாரிகள்!

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''காலியிடங்களை நிரப்பணும்னு கேட்கிறாங்க பா...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய். “எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''பள்ளிக்கல்வி துறையின் கீழ் வர்ற, மாநில உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம், கடந்த மே மாசத்துல இருந்தே கா லியா கிடக்கு... மாவட்ட உடற்கல்வி இயக்குநர்கள், இந்த ஆய்வாளர் கட்டுப்பாட்டுல தான் வருவாங்க பா... ''இது தவிர, கன்னியாகுமரி, தென்காசி உட்பட நாலு மாவட்டங்கள்ல, உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களும் காலியா கிடக்கு... அந்தந்த மாவட்டங்கள்ல இருக்கிற சீனியர் உடற்கல்வி ஆய்வாளர்கள் தான், கூடுதல் பொறுப்பா இதை கவனிக்கிறாங்க பா... ''இதனால, அவங்க கூடுதல் பணிப்பளுவால தவிக்கிறாங்க... 'விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் துணை முதல்வர் உதயநிதி, இந்த காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கணும்'னு அவங்க கேட்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''நிதி ஒதுக்காம, பராமரிப்பு செய்ய சொல்லுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''திருவள்ளூர் மாவட்டத்துல இருக்கிற அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை பொதுப் பணித் துறையினர் தான் பராமரிக்காவ... பள்ளிகள்ல குடிநீர் வசதி செய்றது, காம்பவுண்ட் சுவர் கட்டுறது, சேதமான வகுப்பறைகள், ஆய்வகங்கள், மைதானங்களை சீரமைக்கிறது எல்லாத்தையும் இவங்க தான் செய்யுதாவ வே... ''ஆனா, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகள் பராமரிப்புக்கு சரியா நிதி ஒதுக்குறது இல்ல... ஆனாலும், 'வகுப்பறைகள், பள்ளி கட்டடங்களை பழுது பாருங்க'ன்னு கலெக்டர் மூலமா, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி தர்றாவ வே... ''ஒவ்வொரு வருஷமும் பள்ளிகள் பராமரிப்புக்குன்னு, மாவட்டத்துக்கு தலா, 5 கோடி ரூபாயை கல்வித்துறை ஒதுக்கீடு செய்யுது... ஆனா, இந்த வருஷம், 1 கோடி ரூபாயை மட்டும் பொதுப்பணித் துறைக்கு குடுத்துட்டு, 3 கோடி ரூபாய் மதிப்புக்கு பராமரிப்பு பணிகளை, திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறையினர் ஒதுக்கியிருக்காவ... இதனால, பொதுப்பணித் துறை அதிகாரிகள் முழி பிதுங்கிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''மேலிடம் பெயர்ல கட்டிங் கேட்டிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா. ''பெரம்பலுார் மாவட்டத்தில் இருக்கிற கல்குவாரி, 'கிரஷர்'கள்ல, சென்னையில இருந்து வந்த, 14 பேர் அடங்கிய புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் குழு சமீபத்துல ஆய்வு செஞ்சாங்க... ''குவாரிகள்ல வெட்டி எடுத்த கற்களின் அளவுகளை, 'ட்ரோன்' மூலமா அளவீடு செஞ்சாங்க... கடைசியா, 13 குவாரிகள்ல விதிகளை மீறி கற்களை வெட்டி எடுத்ததை கண்டுபிடிச்சாங்க... ''ஆய்வை முடிச்சிட்டு சென்னைக்கு போன அதிகாரிகள், கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களை கூப்பிட்டு, 'மொத்தமா, 15 கோடி குடுத்துடுங்க... உயர் அதிகாரிகளுக்கு, 5 கோடி போக, மீதம் 10 கோடியை மேலிடத்துக்கு குடுக்கணும்'னு சொல்லியிருக்காங்க... இதை கேட்டு, குவாரி உரிமையாளர்கள் அதிர்ச்சியில இருக் காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Palanisamy T
நவ 04, 2025 20:51

கட்டிங் கேட்ட அதிகாரிகள் மிக மிக குறைவாக கேட்டிருக்கின்றார்கள், அதுவும் கைச் செலவுக்காக கேட்டிருக்கின்றார்கள், தாராளமாக கொடுத்திருக்கலாமே. தேர்தல் நெருங்கிவரும் இவ்வேளையில் இதில் ஏன் இவ்வளவுக் கஞ்சத்தனம்


duruvasar
நவ 04, 2025 15:12

ரொம்ப சீபா இருக்குங்க. 5 கொடிய 14 ஆள் வகுத்தால் தலைக்கு 35 சொச்சம் லட்சம்தான் வரும் . மேலிடத்தை விடுங்க 10b கோடி என்பது அரை நாள் வரும்படி


சமீபத்திய செய்தி