உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / லஞ்ச பொறியாளரை காப்பாற்றிய அதிகாரிகள்!

லஞ்ச பொறியாளரை காப்பாற்றிய அதிகாரிகள்!

''பா.ஜ., மாநில நிர்வாகியின் உயிருக்கு ஆபத்துன்னு எச்சரிக்கைவிடுத்திருக்காங்க வே...''என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''விளக்கமா சொல்லுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''கோவையை சேர்ந்த, பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்ல இருக்கிற குறிப்பிட்ட மதவாத கட்சியை தடை செய்யக் கோரி, பல போராட்டங்களை நடத்தினாரு... இதனால, 'அவரது உயிருக்கு ஆபத்து இருக்கு'ன்னு சொல்லி, தமிழக போலீஸ் பாதுகாப்பு குடுத்திருக்காவ வே... ''இந்த சூழல்ல, வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வழியா, இந்தியாவுக்குள் ஊடுருவிய சில வாலிபர்களை, போலீசார் சமீபத்துல கைது பண்ணி விசாரணைநடத்தியிருக்காவ... அவங்க தந்த தகவல்படி, 'எதுக்கும் உஷாரா இருங்க'ன்னு முருகானந்தத்துக்கு மத்திய உளவுத்துறையிலஇருந்து எச்சரிக்கை தகவல் வந்திருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''மேய்ச்சல் நிலத்தை, 'ஆட்டைய' போட்டுட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...''துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, தென்னம்பட்டிகிராமத்தில், 25 ஏக்கர் நிலத்தை கால்நடைகளின்மேய்ச்சலுக்காக ஒதுக்கிஇருந்தாங்க... இப்ப, அந்த இடத்துல தென்னந்தோப்பு அமைச்சு, சுற்றியும் வேலியும் போட்டுட்டாங்க பா...''இது பத்தி, கோவில்பட்டி வருவாய் அதிகாரியிடம் விவசாயிகள் புகார் தெரிவிச்சிருக்காங்க... ஆனா, எந்த நடவடிக்கையும் இல்ல பா...''விசாரிச்சப்ப, ஒட்டப்பிடாரம் தொகுதி ஆளுங்கட்சி முக்கிய புள்ளியும், அவரது சகோதரர் குடும்பத்தினரும்நிலத்தை அபகரித்து, அவங்க பெயருக்கு ஆவணங்களை மாத்திட்டது தெரிய வந்துச்சு...இதனால தான், நடவடிக்கை எடுக்க முடியாம கால்நடைமற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கையை பிசைஞ்சிட்டு இருக்காங்க பா...''இதனால, 'இந்த விவகாரத்தை தோண்டி துருவினா, இந்த மாதிரி இன்னும் நிறைய ஆக்கிரமிப்பு விவகாரம் அம்பலத்துக்கு வரும்'னு விவசாயிகள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''எப்.ஐ.ஆர்., போட்டும், நடவடிக்கை இல்லை ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார், குப்பண்ணா.''யார் மேல எப்.ஐ.ஆர்.,போட்டுருக்காங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''கோவை மாநகராட்சியில், இளநிலை பொறியாளரா பணியாற்றிய அதிகாரியிடம் கணக்கில்வராத பணம், 1 லட்சத்து,2,000 ரூபாயை சமீபத்துல லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தா... இது சம்பந்தமா, பணம் குடுத்தவரிடம் வாக்குமூலமும் வாங்கி, எப்.ஐ.ஆரும் பதிவு பண்ணிட்டா ஓய்...''வழக்கமா அரசு அதிகாரி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்தாலே, துறை ரீதியா நடவடிக்கை எடுக்கறது வழக்கம்... இந்த வாக்குமூலத்துல, யார் யாரிடம் எவ்வளவு பணம் குடுத்தேன்னு சம்பந்தப்பட்டவரே தெளிவா சொல்லிஇருக்கார் ஓய்...''அப்படி இருந்தும், 'லஞ்ச ஒழிப்பு துறையில்இருந்து இன்னும் ஸ்டேட்மென்ட் வரல'ன்னு சொல்லி, பொறியாளர் மீது மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல... அதுவும் இல்லாம, பொறியாளரும் சத்தமில்லாம கடலுார் மாநகராட்சிக்கு இடம் மாறி போயிட்டார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
அக் 08, 2024 23:04

தேர்தல் ஆணையம் போல் லஞ்ச ஒழிப்புத்துறையும் ஆளும் கட்சி கைப்பாவை தானோ..??


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 08, 2024 10:32

இன்றைக்கு குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அனைவரும் வருகிறார்கள். ஏனென்றால் எல்லோரும் அதற்க்கு உடந்தை. ஒட்டுமொத்த சமூகமும் குற்ற சமூகமாக மாறி வருகிறது. லஞ்ச ஊழல் செய்வது சாதாரணம், தப்பில்லை என்ற மனப்பான்மை உருவாகி வருகிறது. இதெற்க்கெல்லாம் காரணம், நேர்மையற்ற ஊழல் தலைமைதான். அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.


சாண்டில்யன்
அக் 09, 2024 05:43

மோடியின் தேர்தல் நிதிபத்ர ஊழல் பணம் மட்டும் பத்ரமாயிடுச்சி மோடின்னா தப்பில்லை அதற்கு இது போன்ற கைப்பிள்ளைகள் ஒத்து ஊதுவார்கள்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 10, 2024 09:53

சாண்டியன் மோடியின் தேர்தல் பத்திர ஊழலும் தப்புதான் என்பதை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன். தப்பு யார் செய்தாலும் தப்புதான். நன்றாக பார்த்துவிட்டு பதிவிடுங்கள்.


R.RAMACHANDRAN
அக் 08, 2024 07:48

இந்த நாட்டில் அரசு அங்கங்களில் உள்ள குற்றவாளிகள் ஒருவர் மற்றவரை காப்பாற்றும் பணிகளை மட்டுமே செய்கின்றனர்.இதனால் அவர்கள் குற்றங்கள் அதிகரிப்பதால் தீவிரவாதம் தலை தூக்குகின்றது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை