உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போக்குவரத்து நெரிசல் நேரங்களில் ஒருவழியாகிறது பல்லாவரம் பாலம்

போக்குவரத்து நெரிசல் நேரங்களில் ஒருவழியாகிறது பல்லாவரம் பாலம்

பல்லாவரம், டிச. 10-பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., - குன்றத்துார் சாலை சந்திப்பை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, அந்த சந்திப்பில், 'பீக் அவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது.பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்லாவரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது. குரோம்பேட்டையில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி செல்லும் வகையில், இரு பாதைகள் கொண்ட ஒரு வழி மேம்பாலமாக கட்டப்பட்டது.அதே நேரத்தில், கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல் ஜி.எஸ்.டி., சாலை வழியாகவே சென்று வந்தன. அப்படி இருந்தும், அங்கு நெரிசல் குறையவில்லை. இதற்கு தீர்வாக, பல்லாவரம் மேம்பாலம் இருவழி போக்குவரத்தாக மாற்றப்பட்டது. கிண்டியில் இருந்து வரும் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி இறங்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.கனரக வாகனங்கள் ஜி.எஸ்.டி., சாலையிலேயே செல்கின்றன. இந்த நிலையில், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், தென் மாவட்டங்களுக்கு செல்வோர் சென்னைக்கு திரும்பும் போது, பல்லாவரம் மேம்பாலத்தில் இருவழி போக்குவரத்தால் நெரிசல் ஏற்படுகிறது.அதனால், சென்னைக்குள் வாகனங்கள் அதிகளவில் நுழையும் போது, நெரிசலை கருத்தில் கொண்டு, பல்லாவரம் மேம்பாலத்தில் தற்காலிகமாக இருவழி போக்குவரத்து மூடப்பட்டு, ஒருவழி போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.பின், நெரிசல் குறைந்ததும், வழக்கம் போல் இருவழி போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை