உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஐந்து இலக்கத்தில் லஞ்சம் கேட்கும் போலீஸ் அதிகாரி!

ஐந்து இலக்கத்தில் லஞ்சம் கேட்கும் போலீஸ் அதிகாரி!

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''அடுத்து அம்பேத்கரா நடிக்க போறாரு பா...'' என்றார், அன்வர்பாய்.''யாரு, கமல்ஹாசனாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''இல்ல... முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்ற, தேசிய தலைவர் என்ற படத்துல, தி.மு.க., சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த, ஜெ.எம்.பஷீர் தேவரா நடிச்சிருக்காரு... இந்த படத்தின் வெளியீடு, பல பஞ்சாயத்துகளால தாமதம் ஆகிட்டே போகுது பா...''ஜெ.எம்.பஷீர் அடுத்து, அம்பேத்கர் படத்துல அம்பேத்கரா நடிக்க போறாருங்க... பழனிவேல் என்பவர் தயாரிப்புல, செந்தில்குமார்னு ஒருத்தர் இயக்க போறாரு...''அம்பேத்கர் பிறந்த ஊரான, மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ், அவர் வாழ்ந்த புனே, மும்பை, டில்லி, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட இடங்கள்ல படப்பிடிப்பு நடத்த இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''கமிஷனர் இல்லாததை பயன்படுத்திக்க பார்க்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கமிஷனரா இருந்தவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீகாந்த்... இவரை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியா நியமிச்சிருக்கா ஓய்...''இதனால, கமிஷனர் பொறுப்பை, உதவி கமிஷனர் டிட்டோ கவனிக்கறார்... இங்க இருக்கற அனுமேப்பள்ளி அக்ரஹாரத்தில், 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 14 வருஷமா சொத்து வரி கட்டாம, 'டிமிக்கி' குடுத்துண்டு இருந்துது ஓய்...''இதை கமிஷனர் ஸ்ரீகாந்த் கண்டுபிடிச்சு, 110க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் விபரங்களை கம்ப்யூட்டர்ல ஏத்தி, சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுத்தார்... சொத்து வரியை கம்மியா நிர்ணயம் பண்றதுக்கு, லஞ்சம் கேட்ட பில் கலெக்டர் ஒருத்தரை, 'சஸ்பெண்ட்' செய்தார் ஓய்...''இப்ப, ஸ்ரீகாந்த் ஈரோடுக்கு போயிருக்கற நேரத்துல, சஸ்பெண்டான பில் கலெக்டருக்கு மறுபடியும் பணி வழங்க முயற்சி நடக்கறது... அதுவும் இல்லாம, சொத்து வரி கட்டாத தொழிற்சாலைகளின் விபரங்களை கம்ப்யூட்டர்ல இருந்து நீக்கவும், சிலர் முயற்சி பண்றதா மாநகராட்சி வட்டாரத்துல புலம்பல்கள் கேக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.''லஞ்சத்தை அஞ்சு இலக்கத்துல வாங்குறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''கோவை மாவட்டம், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு அதிகாரி இருக்காருங்க... லாட்டரி, சேவல் சண்டை, சூதாட்டம், அடிதடி போன்ற வழக்குகள்ல பிடிபடுறவங்க மற்றும் அவங்க வாகனங்களை விடுவிக்க, குறைந்தபட்சம் ஐந்து இலக்கத்துல, அதாவது 10,000 ரூபாய்க்கு மேல, 'கட்டிங்' கேட்கிறாருங்க...''சமீபத்துல, 70 வயது விவசாயி ஒருத்தர், துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிச்சிருக்காரு... அதுக்கு அதிகாரி, 25,000 ரூபாய் கேட்டிருக்காருங்க...''விவசாயியோ, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லன்னு கையை விரிச்சிருக்காரு... உடனே, 'இந்த பணத்தை கூட குடுக்க முடியாத நீ, துப்பாக்கி வாங்கி, ராணுவத்துல சேரப் போறியா அல்லது போலீஸ்ல சேரப் போறியா'ன்னு அதிகாரி எகத்தாளமா கேட்டிருக்காரு... ''நொந்து போன விவசாயி, 'அய்யா, எனக்கு துப்பாக்கி லைசென்சே வேண்டாம்'னு கும்பிடு போட்டுட்டு போயிட்டாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''குமார் இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
பிப் 05, 2025 06:22

When the is away, the rats will play' அவர் தேர்தல் பணி முடிந்து வருவதற்குள் ஆனமட்டும் 'அள்ளிக்கொள்ளலாமே' என்ற அவசரம்தான்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 02, 2025 09:58

மற்றவர்கள் இலஞ்சம் வாங்கினால் அதுவும் நூறு இருநூறு ஐநூறு என்றால் மட்டுமே தண்டனை. இலஞ்சம் மற்றும் அனைத்து குற்றச்செயல்களில் இருந்தும் காவல் துறையினருக்கு மாடல் அரசில் விலக்கு நிறையவே இருக்கிறது.


R.RAMACHANDRAN
பிப் 02, 2025 08:23

இப்படிப் பட்ட லஞ்சம் இன்றேல் சேவை இல்லை எனும் குற்றவாளிகளுக்கு மத்திய நிதி நிலை அறிக்கையில் வாரி வழங்கி உள்ளனர். அடுத்து எட்டாவது ஊதிய குழு பரிந்துரை எனும் பெயரில் வாரி வழங்க உள்ளனர். இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ வரி மேல் வரி விதித்து மக்களை வதைக்கின்றனர்.


அப்பாவி
பிப் 02, 2025 08:00

5 லக்கம் தானே. குடுத்துருங்க. வருமான வரி கிடையாது. 12 லட்சம் வரை வரி கிடையாது.