உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தி.மு.க., – எம்.பி.,க்கள் நிறுவனங்களிடம் கூடுதல் மது கொள்முதல்!

தி.மு.க., – எம்.பி.,க்கள் நிறுவனங்களிடம் கூடுதல் மது கொள்முதல்!

மெ து வடையை கடித்தபடியே, “பல பணியிடங்கள் காலியா கிடக்கு ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா. “எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய். “சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்துல விபச்சார தடுப்பு பிரிவு இருக்கு... இதுல, எட்டு மாசமா இன்ஸ்பெக்டர் பதவி காலியாவே கிடக்கு... இன்ஸ்பெக்டர் பணியை, உதவி கமிஷனர் தான் கவனிக்கறார் ஓய்... “அதேபோல, செவ்வாப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகள்ல நிறைய குற்றச் சம்பவங்கள் நடக்கும்... ஆனா, செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பதவி, ஒரு மாசமா காலியா கிடக்கு ஓய்.. . “ஆவடி கமிஷனரகத்தில், 30 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... இங்க இருக்கற இன்ஸ்பெக்டர்கள் எல்லாம், தினமும் ராத்திரி ரோந்து போய், அதை படம் எடுத்து பதிவு செய்யணும்... ஆனா, சிலர் இதை செய்யாம, வீட்டுக்கு போய் துாங்கிடறா ஓய்...” என்றார் குப்பண்ணா. “பதவி வந்ததும் கண்டுக்க மாட்டேங்கிறார்னு புலம்புறாரு பா...” என்றார் அன்வர்பாய். “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி. “த.வெ.க., வேலுார் மேற்கு மாவட்ட செயலரா இருக்கிறவர் வேல்முருகன்... இவர், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியா இருந்து அரசியலுக்கு வந்தாரு பா... “சட்டசபை தேர்தல்ல, அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்டு தோத்து போயிட்டாரு... வேலுார் தொகுதியில, த.வெ.க., சார்பில் வினோத் கண்ணன் என்பவர் ஜெயிச்சிருக்காரு பா... “ஜெயிக்கிற வரைக்கும் வேல்முருகனை சுத்தி சுத்தி வந்த இவர், இப்ப அவரை ஏறெடுத்தும் பார்க்கிறது இல்ல... சமீபத்துல, ரெண்டு தொகுதி இடைத்தேர்தல்ல த.வெ.க.,வுக்கு கிடைச்ச வெற்றியை கொண்டாடலாம்னு, வினோத் கண்ணனுக்கு வேல்முருகன் போன் போட்டிருக்காரு பா... “ஆனா, அவர் போனையே எடுக்கல... ‘தேர்தல் நேரத்துல கட்சிக்கு வந்துட்டு, பழைய ஆட்களை மதிக்க மாட்டேங்கிறாங்களே’ன்னு வேல்முருகன் புலம்பிட்டு இருக்காரு பா...” என்றார் அன்வர்பாய். “ஆட்சி மாறினாலும் வியாபாரத்துல எந்த பாதிப்பும் இல்ல வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... “த.வெ.க., ஆட்சிக்கு வந்த மே மாசம், தி.மு.க.,வின், ‘உலகை ஆளும்’ எம்.பி.,யின் மதுபான ஆலையில் இருந்து, 2,700 பெட்டி மதுபானங்களை தான், ‘டாஸ்மாக்’ நிறுவனம் வாங்குச்சு... ஆனா இது, ஆகஸ்ட் மாசத்துல 1.23 லட்சம் பெட்டிகளா ஏறிட்டு வே... “இந்த எம்.பி.,யின் மகன், சமீபத்துல த.வெ.க.,வுல சேர்ந்துட்டாரு... அதனால கூட கொள்முதல் கூடியிருக்கலாம்னு சொல்லலாம்... ஆனா, த.வெ.க.,வை கடுமையா எதிர்க்கும், ‘மில்க்’ எம்.பி.,யின் நிறுவனம் மே மாசம் 1.87 லட்சம் பெட்டி மதுபானங்களையும், ஆகஸ்ட்ல 3.11 லட்சம் பெட்டி மதுபானங்களையும் டாஸ்மாக்கிற்கு வித்திருக்கு வே... “அதேபோல, ஜெயலலிதாவுக்கு நிழலா இருந்த பெண் தலைவரது குடும்பம் நடத்தும் ஆலையிடம், மே மாசம் ஒரு பெட்டி கூட வாங்கல... அப்புறம் யாரை பிடிச்சாங்களோ தெரியல... அடுத்தடுத்து கொள்முதல் உயர்ந்து, ஆகஸ்ட்ல 2.44 லட்சம் பெட்டிகள் மதுபானங்களை வித்துட்டாவ வே... “இதை பார்த்துட்டு, ‘இந்த கொள்முதல்ல ஏகப்பட்ட மர்மங்கள் ஒளிஞ்சிருக்கு’ன்னு, டாஸ்மாக் ஊழியர்கள் எல்லாம் புலம்புதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “ஜெகத், பாலு இப்படி உட்காருங்க... சசிகலா சவுக்கியமாங்க...” என, நண்பர்களிடம் அந்தோணிசாமி விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S.L.Narasimman
அக் 15, 2026 07:16

இவர்கள் எதிர்கட்சியை மிரட்டுவது சப்ளையில் பங்கு தங்களுக்கு குறையில்லாமல் கிடைக்க செய்வதற்கே. தற்குறிகளுக்கு புரியவா போகிறது.


D.Ambujavalli
அக் 14, 2026 19:21

எந்த. ஆட்சியிலும். எதிர்க்கட்சியை. சும்மா. 'அடிக்கிறாப்பல. அடிக்கிறேன், அழறாப்பல அழு'. என்ற. அளவில்தான். எதிர்ப்பு. இருக்கும் மற்றபடி லஞ்சம், கமிஷன். தங்களது. லாபத்தை. நிலைநிறுத்த. எல்லா. உத்திகளும். மறைமுகமாக. நடக்கும் பாமர மக்கள்தான். ஏமாந்து. நிற்பார்கள்


Anantharaman Srinivasan
அக் 14, 2026 19:14

ஜெகத்ரட்சகன் , பாலு சசிகலா கம்பெனிகளில் லட்க்கணக்கில் சரக்கு வாங்குவது தீயசக்தியை ஒழித்தே தீருவேன் என்ற தூயநாயகன் விஜய்க்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.


மாக்கான்
அக் 14, 2026 18:11

1000 பெட்டிகள் 1,00,000மாய் மாறிடுச்சு...? அவங்க ஆட்சியிலேயே 1000 பெட்டிகள்தான், ஆனால்... தூயசக்தியின் ஆட்சியில்... எதிரிகளின் கம்பெனிக்கு 1,40,000மாய் மாறிடுச்சு... அத்தனையும் காசு...பணம்...டப்பு... டப்பு...மணி...? இதுல வேற இவனுங்க... ஊழலை ஒழிக்கப் போறேன்..னு கூவுறது...? இப்பவும் சொல்றேன்.... நீ என்ன... உன்ன படைச்ச அந்த ஆண்டவரே வந்தாலும், ஊழலை ஒழிக்க முடியாது... இதையும் நம்புது பார்... ஒரு நடிகர் பின்னாடியே ஓடும் தற்குறிக் கூட்டம்.


Kalyanaraman Subramaniam
அக் 14, 2026 08:23

உலகைக் காக்கும் அப்படின்னு தானே இருக்கவேண்டும்


S.V.Srinivasan
அக் 14, 2026 08:09

அரசியல் வேறு கமிஷன் வேறு என்பதை நிரூபித்து விட்டது த வெ க. மதுபான கொள்முதலில் பாரபட்சிமில்லாம கோடி கணக்குல மக்கள் வரி பணத்தை செலவிட்டு அதில் கமிஷன் அடிக்கிறாங்க. த வெ க மூன்றாவது திராவிட மாடல் என்பது மீண்டும், மீண்டும் நிரூபணமாகிறது.


Lakshminarasimhan
அக் 14, 2026 07:59

ஆதவ் அர்ஜுனா கருத்தான த வெ க வும் அதிமுகவும் ஒன்று என்கிற தகவல் தவறுன்னு இதன் மூலம் நிரூபணம் ஆகிறது எப்படின்னா த வெ க வும் திமுகவும் ஒன்றே என்பது