உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பாண்டியராஜனுக்கு செக் வைக்கும் ராஜேந்திர பாலாஜி!

பாண்டியராஜனுக்கு செக் வைக்கும் ராஜேந்திர பாலாஜி!

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “நெப்போலியன் மகனை பார்த்துட்டு வந்திருக்காங்க...” என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. “நடிகர் நெப்போலியனை தானே சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய். “ஆமா... மாற்றுத்திறனாளியான தன் மகன் தனுஷுக்காக, அமெரிக்காவின் டென்னசி மாகாணத்துல நெப்போலியன் நிரந்தரமா குடியேறிட்டாரே... தமிழக நடிகர் -- நடிகையர், தி.மு.க., முக்கிய புள்ளிகள் அமெரிக்கா போனா, நெப்போலியன் வீட்டுக்கும் போய், அவரது மகனை பார்த்துட்டு தான் வருவாங்க... “சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த உலக காவலர் மற்றும் தீயணைப்போருக்கான தடகள போட்டியில், வேலுார் எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில், 15 போலீசார் கலந்துக்கிட்டாங்க... நெப்போலியன் அழைப்பை ஏற்று, இவங்களும் டென்னசி போய், அவரது மகனை பார்த்து பேசி உற்சாகப் படுத்திட்டு வந்திருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி. “இடைத்தேர்தல் பொறுப்பு குடுத்திருக்கா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “தெலுங்கானா மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி நடக்கறதோல்லியோ... ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதியின், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி எம்.எல்.ஏ., இறந்து போயிட்டதால, சீக்கிரமே இங்க இடைத்தேர்தல் நடக்க போறது ஓய்... “போன வருஷம் நடந்த சட்டசபை தேர்தல்ல, காங்., சார்பில் இங்க போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன், 17,000 ஓட்டுகள் வித்தியாசத்துல தோற்று போயிட் டார்... அநேகமா, இடைத் தேர்தல்லயும் அவர் தான் களம் இறங்குவார்னு சொல்றா ஓய்... “இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க, காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.,யும், அகில இந்திய காங்., செயலருமான விஸ்வ நாதனை மேலிடம் நியமிச்சிருக்கு... இவரது தலைமையில், அம்மாநில அமைச்சர்கள் மூணு பேர் குழுவுல இருக்கா ஓய்... “ஏற்கனவே, ஹைதரா பாத் கன்டோன்மென்ட் மாநகராட்சி தேர்தலுக்கும் விஸ்வநாதன் பொறுப்பாளரா இருந்து, காங்.,கை ஜெயிக்க வச்சிருக்கார்... அதனா லயே, ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் பணியிலயும் அவரை களமிறக்கி விட்டிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா. “முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு, 'செக்' வைக்கிறாரு பா...” என்றார், அன்வர்பாய். “விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்தா வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. “ஆமா... இந்த மாவட்ட அ.தி.மு.க., வில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜிக்கும், பாண்டிய ராஜனுக்கும் எப்பவும் அக்கப்போர் தான்... சமீபத்தில் ஒரு கூட்டத்துல ராஜேந்திர பாலாஜி பேசுறப்ப, 'போன முறை சிவகாசியில் நான் தோற்று போயிட்டாலும், வர்ற தேர்தல்லயும் அங்க தான் போட்டியிடுவேன்'னு கண்ணீர் விட்டாரு பா... “அதாவது, விருதுநகர் அல்லது சிவகாசியை, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், தலைமையிடம் கேட்டுட்டு இருக்கிற தகவல் கிடைச்சு தான் இப்படி சிவகாசிக்கு, 'துண்டு' போட்டிருக்காரு... அதே நேரம், விருதுநகரும் பாண்டியராஜன் கைக்கு போயிடக் கூடாதுன்னும் ராஜேந்திர பாலாஜி நினைக்கிறாரு பா... “இதுக்காக, நடிகர் சரத்குமாரை போன வாரம் சந்திச்சு பேசியிருக்காரு... அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், 2021ல் விருதுநகரில் பா.ஜ.,தான் போட்டி யிட்டது... அதே மாதிரி இந்த முறையும் இந்த தொகுதியை, பா.ஜ.,வுக்கு ஒதுக்கி, அங்க சரத்குமாரை நிற்க சொல்றாரு... 'இப்படி எல்லா பக்கமும் அணை கட்டினா, என்ன பண்றது'ன்னு பாண்டிய ராஜன் புலம்புறாரு பா...” என முடித்தார், அன்வர்பாய். பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை