“மு தல்வர் கண்ணில் படாம மூடிய பிரச்னைக்கு, 'மாஜி' எம்.எல்.ஏ.,வால தீர்வு கிடைச்சிட்டு வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. “என்ன விவகாரம் பா...” என கேட்டார், அன்வர்பாய். “மதுரையில, செல்லுார் பந்தல்குடி கால்வாய், சென்னை கூவம் மாதிரி சாக்கடையா மாறிட்டுல்லா... போன மாசம் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தப்ப, அவர் கண்ணுல இது படக்கூடாதுன்னு, கால்வாயை திரை போட்டு மறைச்சாவ... இது, மீடியாக்கள்ல வெளியாகி பரபரப்பாச்சு வே... “இந்த சூழல்ல, அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன், அந்த கால்வாயை போய் பார்த்திருக்காரு... அப்ப, கால்வாய் கரையில் பொது கழிப்பறைக்கான தடுப்புச்சுவர் கட்டவும், குடிநீர் குழாய்களுக்கு தளம் அமைக்கும் பணிகளை செய்யவும், தன் சொந்த பணத்துல ஏற்பாடு செஞ்சிருக்காரு வே... “இந்த பணிகளை, அந்த பகுதி இளைஞர் குழு மூலமாகவும் செய்ய வச்சிருக்காரு... எதிர்க்கட்சி பிரமுகர் பெயரை தட்டிட்டு போயிட்டா அதிகாரிகளுக்கு சிக்கல் வந்துடுமுல்லா... “மறுநாளே கலெக்டர் அங்கன ஆஜராகி, 'மாஜி எம்.எல்.ஏ., தரப்புல எந்த பணியும் செய்ய வேண்டாம்... அரசு தரப்புலயே எல்லாத்தையும் செஞ்சு குடுங்க'ன்னு அதிகாரி களுக்கு உத்தரவு போட்டுட்டாரு வே...” என்றார், அண்ணாச்சி. “கருப்பாடுகளால தப்பிச்சிட்டாருங்க...” என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் ஈட்டி மரங்களை வெட்டியது தொடர்பா, கான்ட்ராக்டர் ஒருத்தர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செஞ்சாங்க... “அவரை கைது பண்றது சம்பந்தமா, வன அலுவலர் தலைமையிலும், சேரம்பாடி போலீஸ் ஸ்டேஷன்லயும், தனித்தனியா ஆலோசனை நடத்தியிருக்காங்க... இந்த தகவலை, கான்ட்ராக்டருக்கு சில கருப்பு ஆடுகள் சொல்லிட்டாங்க... “உஷாரான கான்ட்ராக்டர், தலைமறைவாகி முன்ஜாமின் வாங்கிட்டாரு... இப்ப, வனத்துறையினர் மற்றும் போலீசார் முன்னாடி காலரை துாக்கி விட்டுட்டு நடக்கிறாருங்க...” என்றார், அந்தோணிசாமி. “வெற்றிக்கு வேட்டு வச்சிடுவார்னு சொல்லியிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா. “யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய். “சென்னை பெரம்பூர் தொகுதி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 460க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கு... இந்த வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர், மின் இணைப்பு, 'லிப்ட்' உள்ளிட்ட வசதிகளை செய்து தர, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் குடுத்திருக்கா ஓய்... “இந்த நிறுவன உரிமையாளர், ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்புல இருக்கார்... அதுவும் இல்லாம, தொகுதி ஆளுங்கட்சி புள்ளிக்கும் பினாமியா இருக்கார் ஓய்... “இவர், எந்த அடிப்படை வசதிகளையும் குடியிருப்புல செய்து தராம விட்டுட்டதால, அங்க வசிக்கற மக்கள் ரொம்பவே சிரமப்படறா... அதனால, சமீபத்துல திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆளுங்கட்சிக்கு எதிரா கோஷம் போட்டிருக்கா ஓய்... “இதனால, 'தொகுதி புள்ளியின் செயல்பாடுகளால, பெரம்பூர் தொகுதி வெற்றிக்கு ஆபத்து வரும்'னு மேலிடத்துக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பியிருக்கு ஓய்...” என முடித்தார், குப்பண்ணா. “வேதாச்சலம், சேகர் வர்றாவ... சுக்கு காபி குடும் நாயரே...” என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.