மேலும் செய்திகள்
கடலில் மாயமான பள்ளி மாணவர் பலி
14-Mar-2025
எண்ணுார், எண்ணுார், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் ரவி; கட்டுமான தொழிலாளி. இவரின் மகன் சாய்மோனிஷ், 11, தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்தார்.நேற்று முன்தினம் மதியம் முதல் சிறுவனை காணவில்லை. இதுகுறித்து, சிறுவனின் படத்துடன், 'வாட்ஸாப்' குழுக்களில் தகவல் பரவியது.இதை பார்த்த சிலர், நேற்று மாலை, வீட்டின் அருகே உள்ள நண்பர்களுடன், தாழங்குப்பம் கடற்கரைக்கு சாய்மோனிஷ் சென்றதை பார்த்ததாக கூறியுள்ளனர். இது பற்றி விசாரிக்கவே, நண்பர்களுடன் தாழங்குப்பம் கடலில் குளிக்க சென்ற சாய்மோனிஷ், அலையில் சிக்கி மாயமாகிய நிலையில், பயத்தில் உடன் சென்ற சிறுவர்கள் வீட்டிற்கு ஓடி வந்து விட்டது தெரிந்தது.இதனிடையே, சிறுவன் கடல் அலையில் சிக்கி மாயமானது குறித்து, பெற்றோர் எண்ணுார் காவல் நிலையத்தில், நேற்று காலை புகார் அளித்தனர்.இந்நிலையில், நேற்று மாலை அதே பகுதியில், சாய்மோனிஷ் உடல் கரை ஒதுங்கியது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சிறுவன் சாய்மோனிஷ், கடலில் மூழ்கி மாயமான சம்பவம் குறித்து, எண்ணுார் எஸ்.ஐ., திருவேங்கடம், நேற்று மதியம் தாழங்குப்பம் கடற்கரையில் விசாரணை மேற்கொண்டார்.அப்போது, அதே பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த, எண்ணுார், காமராஜர் நகரைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக்கும் ஹரிஹரன், 12, என்ற சிறுவன் அலையில் சிக்கி தத்தளித்தார்.இதை பார்த்த எஸ்.ஐ., அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் உதவியுடன் சிறுவனை மீட்டு, முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தார்.இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால், எஸ்.ஐ., திருவேங்கடத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன.
14-Mar-2025