கழுத்தறுத்து தாய் கொலை சொத்து தகராறில் மகன் வெறி
புதுச்சேரி: புதுச்சேரியில், சொத்து தகராறில், தாயின் கழுத்து அறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, அன்னை நகரை சேர்ந்தவர் லோகநாயகி, 70; கணவர் இறந்து விட்டதால், அவரது மகன்கள் ராஜ்குமார், 45, சந்தானம், 42, ஆகியோருடன் வசித்தார். இவர்களுக்கு சொந்தமாக பிள்ளைச்சாவடியில் காலிமனை, தவளக்குப்பத்தில், 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதை பிரித்து கொடுப்பது தொடர்பாக, தாய், மகன்களிடம் பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம், மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜ்குமார், லோகநாயகியிடம், சொத்தை தனக்கு எழுதி தரும்படி கேட்டுள்ளார். லோகநாயகி மறுத்ததால், ஆத்திரமடைந்த ராஜ்குமார், வீட்டில் இருந்த கத்தியால் லோகநாயகியின் கழுத்தை அறுத்தார். தடுக்க வந்த சந்தானத்தை, ராஜ்குமாரின், 17 வயது மகன் கத்தியால் வெட்டினார். லோகநாயகி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். காலாப்பட்டு போலீசார் ராஜ்குமார், அவரது மகனை கைது செய்தனர்.