திருப்போரூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. திருப்போரூரில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி, சூரசம்ஹார வைபவம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சஷ்டி விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, இரவு நேரங்களில் ஆட்டுக்கிடா, புருஷாமிருகம், கிளி, பூதம், வெள்ளி அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் கந்தபெருமான் எழுந்தருளி வீதி உலா வந்தார். அசுரபொம்மை ஊர்வலமும் நடந்தது. பிரதான விழாவான சூரசம்ஹார வைபவம் நேற்று மாலை 6:00 மணிக்கு கோவில் கிழக்கு முகப்பில் விமர்சையாக நடைபெற்றது. நேற்று, அதிகாலை 3:00 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பகல் 12:00 மணிக்கு சரவணப்பொய்கையில் தீர்த்தவாரி நடந்தது. இதில், கந்தப்பெருமான் எழுந்தருளி குளத்தில் நீராடினார். தொடர்ந்து படித்துறையில் காத்திருந்த பக்தர்களும் சரவணப்பொய்கையில் நீராடி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். மாலை 6:00 மணிக்கு மேல் வெள்ளி குதிரை வாகனத்தில் தங்கவேல் கொண்டு போர்க்கோலத்தில் எழுந்தருளிய கந்தப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிழக்கு மாடவீதி வரை விரட்டி சென்று கெஜமுகன், பானுகோபன், அஜமுகி, தாருகன், சிங்கமுகன் ஆகியோரை வீரபாகு வேடமனிந்த குழுவினர், வதம் செய்தனர். தொடர்ந்து, கந்தபெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை விரட்டிச்சென்று வதம் செய்தார். பின், தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூரசம்ஹாரம் விழா ஒட்டி 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் குழுவினர் செய்திருந்தனர். மற்ற கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும் போது, ஒரே ஒரு உடல் அமைப்புடன் தலையை மட்டும் மாற்றி சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், இக்கோவிலில் மட்டும், தனித்தனியே ஆறு தலை, ஆறு உருவ பொம்மைகளுடன் சூரசம்ஹாரம் நடை பெறுவது சிறப்பு. l செய்யூர் பஜார் பகுதியில் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு நேற்று மாலை, 4:30 மணிக்கு, முருகப்பெருமான் அலங்காரத்துடன், அம்பாளிடம் வேல் பெற்று, வதத்திற்கு புறப்பட்டார். மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கியது. முருகப்பெருமான் படை சூழ, யானை, ஆடு, உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை, வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. 5:30 மணிக்கு சூரசம்ஹார விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. சித்தாமூர் அடுத்த பெருக்கரணையில் அமைந்துள்ள மரகத தண்டாயுதபாணி கோவில் மற்றும் காவனுார் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பெரும்பேர் கண்டிகையில் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலமாக உள்ளது. கடந்த 21 ல், கந்த சஷ்டி விழா மஹா அபிஷேகம், வேல் பூஜை, சத்ரு சம்ஹார அர்ச்சனை, சக்தி வேலாயுத அர்ச்சனையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, நேற்று, காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகம், நண்பகல் 12:00 மணிக்கு வேல் பூஜை, மாலை 5:00 மணிக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை, சக்தி வேலாயுத அர்ச்சனையுடன் மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது. மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெற்றது. பெரும்பேர் கண்டிகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.