உள்ளூர் செய்திகள்

டீ கடை பெஞ்சு

எம்.எல்.ஏ., குற்றச்சாட்டுக்கு, தவித்த மந்திரி!''ஆளுங்கட்சி, ஒரு முடிவோட தான் இருக்காம் வே...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''இப்படி மொட்டையா சொன்னா எப்படி... புரியற மாதிரி சொல்லு பா...'' என்றார் அன்வர்பாய்.''தி.மு.க.,வுல இருக்கற அனிதா ராதாகிருஷ்ணன் விவகாரத்துல தான், இப்படியொரு முடிவை ஆளுங்கட்சி எடுத்திருக்கு வே...முந்தைய ஆட்சியில, ஆறுமுகநேரி நகர, தி.மு.க., செயலர் சுரேஷ், கத்தியால குத்துப்பட்டார்... அப்ப, வழக்கு எதுவும் பதிவாகல... ஆட்சி மாறினதும், சுரேஷிடம் நடத்தின விசாரணையில, 'எல்லாத்துக்கும் அனிதா தான்காரணம்'னு, சொல்லிட்டார்... உடனே, அனிதாவை கைது செஞ்சாவ...''அப்புறம், கடந்த மே மாசத்துல, தி.மு.க., தேர்தல் அலுவலகம் எரிச்ச வழக்கு, டாஸ்மாக் பார் மேல குண்டு வீசுன வழக்கும், அனிதா மேல பாய்ஞ்சது... இந்நிலையில, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் கலவரத்திலும் அனிதாவுக்கு தொடர்பு இருக்கறதா ஒரு புகார் நிலுவையில இருக்காம்... அந்த வழக்குல, அனிதாவை கைது செய்யலாமான்னு ஆலோசனை நடந்துட்டு இருக்கு வே... ஒரு வழக்குல ஜாமின் கிடைச்சா, அடுத்த வழக்குல கைது செய்யணும்ங்கறது தான், போலீசோட திட்டமாம்...''அனிதா குடும்பத்தினர் மேல இருந்த சொத்துக்குவிப்பு வழக்கை வாபஸ் வாங்கறதுக்கு, முந்தைய அரசு முடிவு செய்திருந்தது வே... அந்த வழக்கை திரும்பவும் விசாரிக்க, அ.தி.மு.க., அரசு முடிவு செஞ்சிருக்காம்...'' என, மூச்சுவிடாமல் கூறி முடித்தார் அண்ணாச்சி.''போலீசார் புலம்பல் அதிகமாயிடுத்து ஓய்...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் குப்பண்ணா.''என்ன விஷயம்...'' என்றார் அந்தோணிசாமி.''சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரா இருந்த ஜாங்கிட்டுக்கும், இப்ப இருக்கற கமிஷனர் ராஜேஷ்தாசுக்கும் சுத்தமா ஆகாதாம்... இதனால, ஜாங்கிட்டுக்கு நெருக்கமா இருந்த உதவி கமிஷனர்கள் எட்டு பேரை, வெளி மாவட்டவங்களுக்கு, 'டிரான்ஸ்பர்' பண்ண, கமிஷனர் பரிந்துரை பண்ணிருக்கார்... அதை ஏத்துண்டு, எட்டு பேரையும், 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டா ஓய்...''புறநகர் கமிஷனர் அலுவலகம், சென்னை போலீசுடன் இணைக்கப்படும்னு, முதல்வர் அறிவிச்சதுக்கு அப்பறம் தான், இந்த, 'டிரான்ஸ்பர்' நடந்திருக்கு ஓய்... அதோட, இன்ஸ்பெக்டர்களை தூக்கி அடிக்கவும் இப்ப வேலைகள் நடந்துண்டு இருக்கு... ரெண்டு பேருக்குள்ள நடக்கற மோதலுக்கு, நம்மை பலிகடா ஆக்கறாளேன்னு, அதிகாரிகள் புலம்பறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''சென்னை அண்ணா பல்கலை நடத்தற கிண்டி இன்ஜினியரிங் கல்லூரியில, ஒதுக்கப்பட்டிருக்கற இடங்களை விட, அதிக மாணவர்களை சேர்த்திருக்காங்களாம்... இந்த விஷயத்தை, இந்திய கம்யூனிஸ்ட், எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், சட்டசபையில போட்டு உடைச்சிட்டாருங்க... ஆனா, அதுக்கு பதில் சொல்ல முடியாம, உயர்கல்வித்துறை அமைச்சர் தவிச்சிட்டாருங்க...'' என, நேரடியாக விஷயத்தை கூறிவிட்டு, அந்தோணிசாமி கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி