உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  ரூ.3 கோடியை வாங்க மறுத்து வருத்தப்படும் முக்கிய புள்ளி!

 ரூ.3 கோடியை வாங்க மறுத்து வருத்தப்படும் முக்கிய புள்ளி!

பெஞ்சில் அமர்ந்ததுமே, “பாலியல் புகார் மீது விசாரணை துவங்கிடுத்து ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்த குப்பண்ணாவே தொடர்ந்தார்... “கூட்டுறவு துறையின் கீழ் இயங்கற, திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்கம் என்ற டி.யூ.சி.எஸ்., சார்பில், 'காஸ் ஏஜன்சி'கள் நடத்தறால்லியோ... ''தி.மு.க., ஆட்சியில், சென்னை தாம்பரம் ஏஜன்சியில் வேலை பார்த்த ஒரு பெண் டைப்பிஸ்ட்டுக்கு தி.மு.க., நிர்வாகி ஒருத்தர் பாலியல் தொல்லை குடுத்திருக்கார் ஓய்... “இது சம்பந்தமான மொபைல் போன் உரையாடல்களுடன், தி.மு.க., தொழிற்சங்க மாநில நிர்வாகியிடம் அந்த பெண் புகார் குடுத்தாங்க... ஆனா, தி.மு.க., நிர்வாகி தனக்கு வேண்டியவர் என்பதால, அந்த புகாரை தொழிற்சங்க நிர்வாகி மூடி மறைச்சிட்டார் ஓய்... “இப்ப, ஆட்சி மாறிட்டதால தனக்கு நீதி கேட்டு, அந்த பெண், டி.யூ.சி.எஸ்., பெண் அதிகாரியிடம் புகார் குடுத்திருக்காங்க... பாலியல் தொல்லை குடுத்தவர், அவர் மீது நடவடிக்கை எடுக்காதவர்னு ரெண்டு பேர் மீதும் சீக்கிரமே நடவடிக்கை எடுக்க போறா ஓய்...” என்றார் குப்பண்ணா. “சங்கர், இப்படி உட்காருங்க... ராஜன் சுவாமிநாதன் இப்பதான் கிளம்பினாரு...” என்ற அந்தோணிசாமியே, “இடமாறுதல்ல ஏகத்துக்கும் சம்பாதிக்கிறாங்க...” என்றார். “எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய். “காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய அலுவலகத்துல ஒரு ஆண் அதிகாரியும், பெண் அதிகாரியும், 'கட்டிங்' கூட்டணி அமைச்சிருக்காங்க... ''அதாவது, ஊராட்சி செயலர்களிடம் பல லட்சம் ரூபாயை வாங்கிட்டு, அவங்க விரும்பிய பஞ்சாயத்துக்கு இடமாறுதல் போடுறாங்க... “இந்த ரெண்டு பேரும், தேர்தல் நேரத்தில் பல ஊராட்சி செயலர்களுக்கு இடமாறுதல் போட்டது பெரிய சர்ச்சையாகிடுச்சு... அதை மூடி மறைக்க, மாவட்ட உயர் அதிகாரியின் நேர்முக உதவியாளர் மகனுக்கு விலை உயர்ந்த மொபைல் போனை வாங்கி குடுத்திருக்காங்க... “இவங்க ரெண்டு பேர் மீதும் யாராவது புகார் குடுத்தா, அவங்க மீது அவதுாறு பரப்பி சமூக வலைதளங்கள்ல செய்திகள் போடுறதுக்கு சில டுபாக்கூர் பத்திரிகையாளர்களை கையில வச்சிருக்கிறதால, இவங்களை பார்த்தாலே உயர் அதிகாரிகள் பயப்படுறாங்க...” என்றார் அந்தோணிசாமி. “வாரும் முத்துகணபதி... ஊர்ல தமிழரசி சவுக்கியமா வே...” என விசாரித்த பெரியசாமி அண்ணாச்சி, “வந்த பணத்தை விட்டுட்டோமேன்னு வருத்தப்படுதாரு வே...” என்றபடியே தொடர்ந்தார்... “தமிழக போக்குவரத்து துறையின் முக்கிய புள்ளியை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எல்லாம் சமீபத்தில் மரியாதை நிமித்தமா பார்த்திருக்காவ... வெறும் கையோட போகக் கூடாதுன்னு, பலரிடமும் வசூல் நடத்தி, 3 கோடி ரூபாயை முக்கிய புள்ளியிடம் குடுத்திருக்காவ வே... “பதறி போன முக்கிய புள்ளி, 'அய்யய்யோ... அதெல்லாம் வாங்க மாட்டேன்'னு மறுத்துட்டாராம்... சில நாட்கள் கழிச்சு முக்கிய புள்ளி, தன் உதவியாளரை கூப்பிட்டு, 'அந்த பணம் என்னய்யா ஆச்சு'ன்னு கேட்டிருக்காரு வே... “அவரும் விசாரிச்சு பார்த்துட்டு, 'அதிகாரிகள், அதை வசூல் பண்ணியவங்களிடமே திருப்பி குடுத்துட்டாங்க'ன்னு பதில் தந்திருக்காரு... ஆனா அது உண்மையா, பொய்யான்னு தெரியாம முக்கிய புள்ளி தவிச்சிட்டு இருக்காரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. “வாங்க தமிழன் பார்த்திபன்...” என நண்பரிடம் குப்பண்ணா கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

D.Ambujavalli
ஜூலை 01, 2026 19:15

அந்த அதிகாரியின். உதவியாளர். அவர்களை. அழைத்து, இப்படியா. ஓபனாக. கொடுப்பீர்கள்? நாசுக்காக கொடுக்கக்கூட. தெரியலையே. உங்களுக்கு என்று. கூறி. அவரே. அமுக்கியிருப்பார்


வில்லிபுத்தூரான்
ஜூலை 01, 2026 18:01

எந்த ஆட்சி வந்தாலும் இலஞ்சம் ஊழல் மாறாது


Anantharaman Srinivasan
ஜூலை 01, 2026 21:05

எப்படி மாறும்.? மத்த கட்சி ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் புதிய தூய ஆட்சியை கெடுக்க படையெடுக்கிறார்களே..?


duruvasar
ஜூலை 01, 2026 14:39

விடுங்க வரும் காலங்களில் மூணு முப்பதா வரப்போகுது. கொண்டுபோனது போதாது என குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். அவங்களும் புரிச்சிக்கிட்டிருப்பாங்க. எல்லாம் ஒரு டீலுதான் .


duruvasar
ஜூலை 01, 2026 14:34

சாதாரணமாக தமிழன் ஏமாற மாட்டானே. ?புள்ளியின் வீட்டில் புழக்கடை, மாட்டு கொட்டகை இப்படி எதுவுமே இல்லையா ?


JeevaKiran
ஜூலை 01, 2026 12:37

இப்ப புரியுதா? விஜய் சொன்ன பிறர் பணத்தை தொடமாட்டேன் என்று அப்போ தொடுவேன் என்று அர்த்தம்.


VSMani
ஜூலை 01, 2026 10:51

ஒரு முக்கிய நபரை பார்க்க செல்லும்போது வெறும் கையோடே போகக்கூடாது என்று மலர் செண்டு பூங்கோத்து இனிப்பு வாங்கிட்டு போவார்கள் அதற்காக 3 கோடி பணத்துடனா போவார்கள். அப்படி என்றால் அந்த புள்ளி ஏற்கெனவே லஞ்சம் வாங்கி அனுபம்மிக்கவராகத்தான் இருப்பார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையே.


புதிய வீடியோ