ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''நடிகை பிரச்னையை சுமுகமா முடிச்சு வச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''யாருங்க அந்த நடிகை...'' என, ஆர்வமாக கேட்டார் அந்தோணிசாமி.''நடிகை சோனா, தன் வாழ்க்கை கதையை மையமா வச்சு, 'ஸ்மோக்' என்ற பெயர்ல, 'வெப்' தொடரை இயக்கி இருந்தாங்க... இந்த தொடரின், 'ஹார்ட் டிஸ்க்'கை, அவங்க மேனேஜர் எடுத்துட்டு போயிட்டார்னும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான, 'பெப்சி'யில் புகார் குடுத்து, நடவடிக்கை எடுக்கலைன்னும், அந்தஆபீஸ் முன்னாடி, சோனா தர்ணா போராட்டம் நடத்துனாங்களே பா...''சோனாவை தொடர்பு கொண்ட நடிகர் கருணாஸ், 'நடிகர் சங்கத்துல புகார் குடும்மா'ன்னு ஆலோசனை சொல்லியிருக்காரு... சோனாவும், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான, பூச்சி முருகனிடம் புகார் குடுத்திருக்காங்க பா...''அவரும், உடனே சங்கத்தின் மற்ற நிர்வாகிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுத்திருக்காரு... 'பெப்சி' தரப்பிடம் பேச்சு நடத்தி, சோனாவின் ஹார்ட் டிஸ்க்கை வாங்கி குடுத்துட்டாரு... ''கடும் மன அழுத்தத்துல இருந்த சோனா, 'ரிலாக்ஸ்' ஆகி, நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு, வீடியோ மூலமா உருக்கமா நன்றி தெரிவிச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''உதவித்தொகையில மோசடி நடந்துட்டு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு மாசம், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குதாங்கல்லா... தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தபால் அலுவலகங்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மூலம், இந்த தொகையை அனுப்புதாங்க வே...''ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில், கடந்த அஞ்சு வருஷமா இந்த உதவித்தொகையில் நிறைய முறைகேடு நடந்திருக்கு... இறந்தவங்க பெயர்ல எல்லாம் பணம் எடுத்திருக்காவ வே...''நிறைய பேரின் வங்கி கணக்குக்கு போக வேண்டிய பணம், அரசின் தற்காலிக பணியாளர் ஒருவரின் வங்கி கணக்குக்கு போயிருக்கு... வங்கிகள்ல நடந்த தணிக்கையில, இதை கண்டுபிடிச்சு கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு போயிருக்காவ வே...''கலெக்டர் ஆபீஸ் சார்புல, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் குடுத்திருக்காவ... 'விசாரணையில, பெரிய முறைகேடுகள் அம்பலத்துக்கு வரும்'னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''மின் திருட்டுக்கு துணை போறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, பிரமாண்டமா ஒரு வணிக வளாகம் கட்டிண்டு இருக்கா... முறையான அனுமதி எதுவும் வாங்காம தான் இதை கட்டறா ஓய்...''மின் வாரியத்திடம் இருந்து தற்காலிக மின் இணைப்பும் வாங்கல... பக்கத்து நகை கடையில் இருந்து சட்டவிரோதமா மின் இணைப்பு எடுத்து, கட்டுமான பணிகளை செய்யறா ஓய்...''தகவல் கிடைச்சு மின் வாரிய அதிகாரிகள் விசாரிக்க போனப்ப, ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளி ஒருத்தர், அதிகாரிகளை திட்டி அனுப்பிட்டாராம்... ''தேர்தல் நேரத்துல தனக்கு உதவிய தொழிலதிபருக்கு கைமாறா, சட்டவிரோத மின் இணைப்புக்கு முக்கிய புள்ளியே ஒத்தாசையா இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.''அண்ணாச்சி... மார்க்கண்டேயன் மாதிரி, வயசே ஆகாம இருக்க என்ன செய்யணும்...'' என, திடீரென அந்தோணிசாமி கேட்க, பேசியபடியே பெரியவர்கள் நடையை கட்டினர்.