உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஆசிரியர்கள் விடுதியில் அடேங்கப்பா தில்லுமுல்லு!

ஆசிரியர்கள் விடுதியில் அடேங்கப்பா தில்லுமுல்லு!

''போலீசாரையே மிரட்டி, 'கட்டிங்' வாங்கறார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''யாருங்க அந்த கில்லாடி...'' என கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை அண்ணாநகர் ஏரியாவுல, இணை கமிஷனரின் உளவுத்துறை போலீஸ்காரர் ஒருத்தர் இருக்கார்... இவர், வசூல்ல அதிகாரிகளை விட அதிகமா வாங்கி குவிக்கறார் ஓய்...''இவரது வசூல் டெக்னிக்கே புதுசா இருக்கும்... அதாவது, கடைகள்ல லோக்கல் போலீசார் மாமூல் வாங்கறதை, வீடியோ எடுத்து வச்சுக்கறார்... அப்பறமா அதை காட்டி, போலீசாரிடம் மாமூல் கேக்கறார் ஓய்...''இப்படி, தன் மொபைல் போன்ல, 200க்கும் மேற்பட்ட மாமூல் வீடியோக்களை வச்சிருக்கார்... அண்ணாநகர் போலீஸ் அதிகாரி ஒருத்தரும் இவருக்கு ஒத்தாசையா இருக்கார் ஓய்...''அவரது ஆதரவுல, பெரிய பெரிய பில்டர்களை மிரட்டி, 'ஓசி'யில செங்கல், மணல், சிமென்ட் எல்லாம் வாங்கி, வீடு கட்டிண்டு இருக்கார்... 'நான் உளவுப் பிரிவுக்கு வந்ததே, அதிகமா சம்பாதிக்க தான்'னு அசால்டா சொல்றார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''வினோத், ஜெயபிரகாஷ் வர்றாங்க... இஞ்சி டீ குடுங்க...'' என்ற அன்வர்பாயே, ''கிரிமினல்களுக்கு எல்லாம் பதவி தந்திருக்காங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்.''எந்த கட்சியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''தர்மபுரி மாவட்ட தி.மு.க., இளைஞர் அணியில், மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்புகள்ல சமீபத்துல நியமிக்கப்பட்ட சில நிர்வாகிகள் மீது, கள்ளச்சாராய விற்பனை, அடிதடி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கு... ''இதை பத்தி எல்லாம் தீர விசாரிக்காம, அவங்களுக்கு கட்சியில பதவி குடுத்திருக்காங்க பா...''இதனால, 'தேர்தல் வர்ற நேரத்துல, இப்படி கிரிமினல்களுக்கு பதவி தந்தா, நம்ம கட்சி மீது பொதுமக்களுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடும்'னு மூத்த நிர்வாகிகள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''ஆசிரியர் விடுதியில ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''சென்னை சைதாப்பேட்டை, தாடண்டர் நகர்ல இருக்கிற ஆசிரியர் விடுதியில, மொத்தம், 64 அறைகள் இருக்கு... இதுல, பள்ளிக்கல்வித் துறை ஆணையரக வளாகத்தில் புணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் முதல், இணை இயக்குநர்கள் வரை தங்கியிருக்காவ வே...''இதனால, வெளியூர்ல இருந்து வரும் ஆசிரியர்கள் தங்க இடமில்லாம தவிக்காவ... இங்க தங்குறதுக்கு ஒரு நாள் வாடகையே, 100 ரூபாய் தான்... ஆனா, இங்க தங்கியிருக்கிற அலுவலக உதவியாளர்களிடம் மாசத்துக்கு, 1,000 முதல் 1,600 ரூபாய் வரை தான் வாங்குதாவ வே...''இந்த வாடகையையும் சரியா கணக்குல காட்ட மாட்டேங்காவ... வாங்கிய பணத்துக்கு ரசீது தராமலும், அதை பதிவேட்டில் பதியாமலும் மோசடிகள் நடக்கு வே...''வாட்ச்மேன், துாய்மை பணியாளர்னு 10 பேர் இருந்த இடத்துல, இப்ப ரெண்டு பேர் மட்டுமே இருக்கிறதால, விடுதி முறையான பராமரிப்பு இல்லாம கிடக்கு... 'அங்க தங்கியிருக்கிற ஆசிரியர் அல்லாதவங்களை வெளியேத்திட்டு, பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் ஒருத்தர் அல்லது ஓய்வுபெற்ற ஆசிரியரை விடுதி காப்பாளரா நியமிக்கணும்'னு, ஆசிரியர்கள் எல்லாம் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 30, 2025 06:31

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற 64 ‘கலைகளிலும் ‘ கைதேர்ந்தவர்கள்தான் சட்டமன்றம், பாராளுமன்றம் செல்ல தகுதியானவர்கள் என்பதுதானே இக்கட்சியின் முழுமுதல் தகுதி நிர்வாகிகள் level இல் இருந்தே ஆரம்பிக்க வேண்டாமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை