உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்

சபரிமலை:மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. சாலக்கயம், பம்பை வழியாக வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், பெருவழிப்பாதை வழியாக வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அழுதை, கரிமலை உள்ளிட்ட செங்குத்தான பாதைகளில் ஏறி, இறங்கி, தளர்ச்சியுற்று வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதி வருவதற்கு மேலும், 14 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.

பக்தர்கள் மீது தாக்குதல்

மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வரை, 10 மணி நேரம் 'ெஷட்'களில் அடைத்து போடப்படுகின்றனர். இங்கே இவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் என எந்த வசதியும் இல்லை.ஆவேசமடைந்த பக்தர்கள், கேரள அரசு மற்றும் தேவசம் போர்டிற்கு எதிராக கோஷமிடுகின்றனர். பொறுமை இழந்தவர்கள் கம்பி வேலிகளை உடைத்தும் அதன்மேல் ஏறியும் குறுக்குப்பாதைகளில் ஓடுகின்றனர். இவர்களை போலீசார் துரத்தி அடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.நேற்று முன்தினம் சன்னிதி அருகே, 'யு' வளைவு பகுதியில் வரிசையில் இருந்து வெளியேறிய பக்தர்களை, போலீசார் தாக்கிய படங்கள் வெளியாயின.தன் குழந்தையுடன், 18 படிகளில் வேகம் குறைவாக ஏறியதற்காக, பெங்க ளூரை சேர்ந்த ராஜேஷ் என்ற பக்தரை தாக்கியது பற்றி விசாரணை நடத்த சன்னிதி எஸ்.பி., சுதர்சன் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பக்தர்களை, 18 படிகளில் ஏற்றும் பொறுப்பை, மத்திய அரசின் அதிவிரைவு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேண்டுதலுடன் வரும் பக்தர்கள் மன உளைச்சலுடன் திரும்புகின்றனர்.

திணறும் போலீசார்

கட்டுக்கடங்காத கூட்டத்தால், போலீசார் செய்வதறியாது திணறுகின்றனர். வரும், 13 வரை 80,000 பேரும், 14-ல், 50,000 பேரும், 15-ல், 40,000 பேரும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.இதனால் ஜன., 14, 15ல் கூட்டம் சற்று குறைய வாய்ப்புள்ளதாக, போலீசார் நம்புகின்றனர். ஆனால், இன்று முதல், வரும் பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திற்கு சன்னிதானத்தில் தங்குவர் என்பதால், நெரிசல் குறைய வாய்ப்பில்லை எனவும் தெரிய வந்துள்ளது.நிலைமையை எதிர்கொள்ள போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை