உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஈரோட்டில் இம்முறை, ம.தி.மு.க., கொடி பறக்குமா?

ஈரோட்டில் இம்முறை, ம.தி.மு.க., கொடி பறக்குமா?

டபராவில் பில்டர் காபியை ஆற்றியபடியே, ''தேர்தல் நடத்தி, புது நிர்வாகிகளை நியமிக்க போறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''காங்கிரஸ் தொழிற்சங்கமான, ஐ.என்.டி.யு.சி.,யின் தலைவர் சஞ்சீவ ரெட்டி, இதுவரை தமிழக, ஐ.என்.டி.யு.சி.,க்கு தேர்தலே நடத்தாம தொடர்ந்து ஆறு முறையா, நிர்வாக கமிட்டியை தான் நியமிச்சிருக்கார் ஓய்...''அந்த கமிட்டியின் தலைவர் ஜெகநாதன், பொதுச்செயலர் பன்னீர்செல்வத்தின் பதவிக்காலம் முடிய ஒரு மாசம் தான் இருக்கு... சமீபத்துல, பன்னீர்செல்வம் பிறந்த நாளன்னைக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள, ஐ.என்.டி.யு.சி., அலுவலகத்துல, அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தியிருக்கா ஓய்...''அப்ப, 'பிரிந்து கிடக்கிற அனைத்து தொழிற்சங்க கோஷ்டி களையும் ஒருங்கிணைத்து, சட்டரீதியா தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கணும்'னு முடிவு பண்ணியிருக்கா... அதுவும் இல்லாம, ஐ.என்.டி.யு.சி.,க்கு சொந்தமான, 500 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்க, குழு அமைக்கவும் முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''டிரான்ஸ்பர்ல போகாம அடம் பிடிக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''கடந்த, 2019ம் வருஷமே, கூட்டுறவு சங்க செயலர்களை, 'காமன் கேடர்'ல கொண்டு வந்துட்டாவ... இதன்படி, 'மூணு வருஷத்துக்கு மேலா ஒரே இடத்துல இருக்கிறவங்களை இட மாறுதல் செய்யணும்'னு சமீபத்துல பதிவாளர் உத்தரவு போட்டாரு...''அதுவும் இல்லாம, 'செயலர்கள், உதவி செயலர்கள் சொந்த ஊர்ல பணியில் இருக்கக் கூடாது... மே 31க்குள்ள இட மாறுதல்களை முடிச்சு அறிக்கை சமர்ப்பிக்கணும்'னு அந்த உத்தரவுல சொல்லியிருந்தாரு வே...''கோவை மாவட்டத்துல, 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இருக்கு... இதுல, நிறைய செயலர்கள், 20 - 25 வருஷமா சொந்த ஊர்லயே வேலை பார்க்காவ வே...''பணி மாறுதலே இல்லாம, அதிகாரிகள் துணையுடன் பந்தாவா வலம் வர்றாவ... இதனால, 'பதிவாளர் உத்தரவுக்கு மதிப்பே இல்லையா'ன்னு துறைக்குள்ளயே பலரும் முணுமுணுக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''ஈரோட்டுல ஒரு தொகுதி கேட்க போறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''ஈரோட்டில் சமீபத்துல, ம.தி.மு.க., பொதுக்குழு நடந்துச்சு... இதுக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ, அவரது மகன் துரை எம்.பி., ஆகியோர், மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி இருக்காங்க...''ம.தி.மு.க.,வின் முக்கிய தலைவரா இருந்து, மறைந்த கணேசமூர்த்தி, மொடக்குறிச்சியில் ஒரு முறை எம்.எல்.ஏ.,வாகவும், பழனி மற்றும் ஈரோடு தொகுதியில் மூணு முறை, எம்.பி., யாகவும் இருந்திருக்காருங்க... இதனால, 'வர்ற சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., கூட்டணியில் ஈரோட்டுல ஒரு தொகுதி வாங்கணும்... எந்த தொகுதியை கேட்கலாம்'னு நிர்வாகி களிடம் அப்பாவும், மகனும் யோசனை கேட்டிருக்காங்க...''நிர்வாகிகளோ, 'ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய மூணுல ஒண்ணை கேட்டு வாங்குங்க... மத்த தொகுதிகள் தந்தா வேண்டாம்... அவை எல்லாம், அ.தி.மு.க., வுக்கு சாதகமான தொகுதிகள்'னு சொல்லியிருக்காங்க... 'கண்டிப்பா ஒரு, 'சீட்' வாங்கிடுறோம்... நீங்களும் தயாரா இருங்க'ன்னு சொல்லிட்டு போயிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 30, 2025 18:48

பத்துப்பேரைக் கூட்டிப் பேசிவிட்டால் அப்படியே போய் திமுகவிடம் கேட்டதும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தூக்கிக் கொடுத்து விடுவார்களா? தங்களது செல்வாக்கு, , பலம் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்


கண்ணன்
ஜூன் 30, 2025 11:38

நினைப்புத்தான் ஐயா பிழைப்பைக் கெடுக்குது! தந்தை மகனைச் சொன்னேன்


புதிய வீடியோ