உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மனித உரிமை மீறலில் ஈடுபடும் மகளிர் போலீசார்!

மனித உரிமை மீறலில் ஈடுபடும் மகளிர் போலீசார்!

நாளிதழை மடித்தபடியே, ''அரசியல் இல்லாம புது சமாச்சாரம் ஏதாவது சொல்லும் வே...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.''சரி சரி... ஒரு விஷயத்தை சொல்றேன்...'' என, பழைய விஷயத்தை புதிதாக பேசத் துவங்கிய அன்வர் பாய்... ''இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஓனர் யார் தெரியுமா...'' என, புதிர் போட்டார்.''என்ன சந்தேகம்... என்.சீனிவாசன் தான்...'' என, பதில் அளித்தார் குப்பண்ணா.''விஷயத்தை கேளுங்க பா... இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை சீனிவாசனின் அப்பா, டி.எஸ்.நாராயணசாமி துவக்கினார்ன்னு சொல்வாங்க... ஆனா, அந்த நிறுவனத்தை துவக்கியவர், எஸ்.என்.என்.சங்கரலிங்க அய்யர்...''அவர், 'இந்தோ கமர்ஷியல் பேங்க்'ன்னு ஒரு வங்கியை துவக்கினார்... அதுல, முதன்மை கேஷியரா வேலை பார்த்தவர், டி.எஸ்.நாராயணசாமி... சங்கரலிங்கம் எங்கே போனாலும், நாராயணசாமியை கூட்டிட்டு போவாரு... பிறகு, தன் பேத்தியை நாராயணசாமியின் மகன் சீனிவாசனுக்கு கட்டிக் கொடுத்தாரு பா...'' என்றார், அன்வர் பாய்.'ஓ...' என, நண்பர்கள் மூவரும் கோரசாய் குரல் கொடுத்தனர். ''அறிவாலயத்தை கைப்பற்றணும்னு சொல்றாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''என்ன ஓய் சொல்றீர்...'' என, அதிர்ச்சியாக கேட்டார் குப்பண்ணா.''அவசரப்படாதீங்க... நான் சொல்ல வந்தது, விழுப்புரத்துல இருக்கிற அறிவாலயத்தை... தி.மு.க., மாவட்ட அலுவலகமான இந்த கட்டடம், விழுப்புரம் மத்திய மாவட்டத்துல இருக்குதுங்க...''இப்ப, மத்திய மாவட்ட தி.மு.க., செயலரா இருக்கிற, எம்.எல்.ஏ., லட்சுமணனிடம் ஒப்படைக்காம, இன்னும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கட்டுப்பாட்டுலயே வச்சிருக்காருங்க...''இதனால, மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் எல்லாம், 'அறிவாலயம் கட்சி சொத்து... ஆனா, அதை லட்சுமணனிடம் ஒப்படைக்காம பொன்முடி போக்கு காட்டிட்டு இருக்காரு. இது என்ன அவர் வகித்த அமைச்சர் பதவியா; வலுக்கட்டாயமா வைத்துக்கொள்ள... அதை மீட்டே ஆகணும்'னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''மனித உரிமை மீறல்ல ஈடுபடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''எந்த ஊர் போலீசாரை சொல்றீங்க...'' என, பட்டென கேட்டார் அன்வர்பாய்.''சேலம் மாவட்டம், சங்ககிரியில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு... பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பாலியல் சீண்டல், புருஷன் - பொண்டாட்டி தகராறுன்னு ஏகப்பட்ட புகார்கள் வருது வே...''இது சம்பந்தமா, விசாரணைக்கு ஸ்டேஷனுக்கு வர்ற ஆண்கள், பெண்கள், முதியோர்னு யாரையும் பெண் போலீசார் உட்கார வச்சு விசாரிக்க மாட்டேங்காவ... நிற்க வச்சே விசாரிக்காவ வே...''சில நேரங்கள்ல, ரெண்டு, மூணு மணி நேரம் கூட நிற்க வச்சு விசாரிக்காவ... முதியோர் எல்லாம் ரொம்பவே சிரமப்படுதாவ வே...''இதனால, 'மனுஷங்களை மதிக்க தெரியாத சங்ககிரி மகளிர் போலீசார் எல்லாரையும் கூண்டோடு மாத்தணும்'னு பாதிக்கப்பட்டவங்க எல்லாம் புலம்புதாவ வே...''இது சம்பந்தமா முதல்வர், டி.ஜி.பி., மனித உரிமை ஆணையத்துக்கும் சிலர் புகார் அனுப்பியிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.அரட்டை முடிய, நண்பர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூன் 03, 2025 00:16

Yes. மதிக்க தெரியாத சங்ககிரி மகளிர் போலீசார். Chair போட வேண்டாம். Atleast bench. ??


D.Ambujavalli
ஜூன் 02, 2025 18:44

எப்படியோ சுற்றி சுற்றி ஸ்ரீனிவாசனின் தகப்பனாரும், அவர் பின் மகனும் credit ஐ சம்பாதித்துக்கொண்டு விட்டார்கள் இதெல்லாம் அரசியல் போல விளையாட்டிலும் சகஜமப்பா


சமீபத்திய செய்தி