கற்பனையை அள்ளித்தரும் கடல் நத்தை!
மெல்லுடலி விலங்கின பிரிவை சேர்ந்த உரியினம் நத்தை. இதன் மீது சுருள் வடிவில் அமைந்த ஓடு காணப்படும். இதில் கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என பல இனங்கள் உண்டு. ஓடு இல்லாத இனங்களும் உலகில் உள்ளன. பால்மோநட்டா என்ற ஒருவகை நத்தை, நுரையீரலால் சுவாசிக்கிறது. பாராபைலி என்ற வகை செவுளால் சுவாசிக்கும். வண்ணங்கள் நிறைந்த விநோத கடல் நத்தைகள் சிறுவர், சிறுமியரின் கற்பனை திறனை வளர்க்கும். இந்த அபூர்வ உயிரினம் குறித்து பார்ப்போம்... இலை செம்மறி! இ தன் அறிவியல் பெயர் கோஸ்டாசியெல்லா குரோஷிமே. ஓடு இல்லாத கடல் நத்தை இனம். கோஸ்டாசியெல்லிடே விலங்கினக் குடும்பத்தை சேர்ந்தது. சிறிய இலை மற்றும் குட்டி செம்மறி ஆடு போல் காட்சியளிக்கும். கிழக்காசிய நாடான ஜப்பான், குரோஷிமா தீவின் கடற்கரையில், 1993ல் கண்டறியப்பட்டது. ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா கடற்பகுதியிலும் உள்ளது. வெப்பமண்டல பகுதிகளில் வாழும். இதன் நீளம், 10 மி.மீ., வரை இருக்கும். உடல் முழுதும் வரிசையாக இலை போன்ற அமைப்பு காணப்படும். இது 'செராட்டா' எனப்படுகிறது. இதன் உதவியால் தாவரம் போல் ஒளி சேர்க்கையால் உணவை உருவாக்கி உடலில் சேமிக்கிறது. இந்த அமைப்பு சுவாசிக்கவும் உதவுகிறது. கடல் முயல்! இ துவும் ஜப்பான் கடற்பகுதியில் கண்டறியப்பட்ட உயிரினம். ஒரு வகை கடல் நத்தை. இதன் அறிவியல் பெயர் ஜொரூன்னா பார்வா. சுருட்டிய பஞ்சு போன்ற தோற்றத்துடன் காணப்படும். முயல் காது போன்ற உணர் உறுப்புடன் இருப்பதால், கடல் முயல் என அழைக்கப்படுகிறது. பவளப்பாறைகள் உள்ள பகுதியில் அதிகம் காணப்படும். ஜப்பானியர் இதை, 'கோமாபு பிருந்தோ உமிஉஷி' என பெயரிட்டு அழைக்கின்றனர். இதன் பொருள், கருப்பு புள்ளிகள் உடைய வெல்வெட் நத்தை என்பதாகும். இது, 2 செ.மீ., நீளம் வரை வளர்கிறது. கடற்பாசி, புல் மற்றும் பிற இன நத்தைகளை உண்டு வாழ்கிறது. பிகாச்சு நத்தை! இது பாலிசெரிடே விலங்கின குடும்பத்தை சேர்ந்த கடல் நத்தை. ஜப்பானிய, 'டிவி' தொடரில் வரும் வினோத கதாபாத்திரமான, 'பிகாச்சு' உருவத்தை போல் இருப்பதால் அதே பெயரிலே அழைக்கப்படுகிறது. இந்த இனம் இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா முதல் இந்தோனேசியா வரை காணப்படுகிறது. வட அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடா, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியிலும் உள்ளது. காண்டாமிருகத்துக்கு உள்ளது போல் கொம்புடன் காணப்படும். ஒளி ஊடுருவும் ஆரஞ்சு நிற உடலை உடையது. உடலில் நீலநிறத் திட்டுகள் காணப்படும். வால் நுனி, செவுள்களின் பக்கவாட்டு பகுதியிலும் நீல நிற திட்டுகள் இருக்கும். இந்த உயிரினத்தின் வடிவமும், வண்ணமும் சிறுவர்களின் கற்பனை திறனை மேம்படுத்தும் விதமாக உள்ளது. ஓ டில்லா நத்தை, அழுகிய தாவரங்களையும், பூஞ்சணங்களையும் உண்கிறது. சூழலில் இறக்கும் பிற உயிரின உடலையும் உட்கொள்ளும். இதனால், சூழலியல் முக்கியத்துவம் உடையதாக கருதப்படுகிறது. ஆண், பெண் என இனப்பெருக்க உறுப்புகளை ஒரே உடலில் கொண்டுள்ளதால் இந்த நத்தை இனத்தில் பாலின வேறுபாடு இல்லை. வானவில் நத்தை! பி ரகாசமாக காட்சி தரும் இவை வண்ண கடல் நத்தை இனத்தை சேர்ந்தது. சிறுவர்களுக்கு கற்பனையை வளர்க்கும் விளையாட்டு பொருளான, 'பிட்ஜெட்' பொம்மை போல காட்சியளிக்கும். இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் மஞ்சள் நிறங்களுடன் காணப்படும். ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் கடல் பகுதியில் வெதுவெதுப்பான நீரில் அதிகம் வாழும் நெகிழ்வான உடலமைப்புள்ள மென்மை உயிரினம். கடல் தேவதை! இ தன் அறிவியல் பெயர் கிளியோன் லிமாசினா. ஓடற்ற கடல் நத்தை வகையை சேர்ந்தது. குளிர் மிகுந்த ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஒளி ஊடுருவும் வகையில் உடல் அமைப்பு உடையது. இறகுடன் அழகிய தேவதை போல் நீந்தும். காண்போரை கவரும். இது, 7-8 செ.மீ., நீளம் வரை வளரக்கூடிய உயிரினம். நீல கடல் டிராகன்! இ து, கிளாசிடே விலங்கின குடும்பத்தில் உள்ள ஓடற்ற கடல் நத்தை இனம். இதன் வயிற்றில் வாயு குமிழி போன்ற அமைப்பு உள்ளது. இதை பயன்படுத்தி தண்ணீரின் மேல் பகுதியில் தலைகீழாக மிதக்கும். இதன் உடல் பாகம் நீல வண்ணமுடன் இருக்கும். மிதக்கும் போது கடல் நீரில் கலந்து விட்டது போல் காட்சி தரும்.- காயத்ரி