ஒற்றை கண்ணன்!
முன்னொரு காலத்தில், ஒரு லட்சாதிபதி இருந்தார்; வசதிகள் இருந்தும், சந்தோஷம் கிடைக்கவில்லை.'லட்சாதிபதியாக இருக்கிறோமே... சந்தோஷமாக இருக்க வேண்டியது தானே! எதற்காக, எப்போது பார்த்தாலும் முகத்தை தொங்கப் போட்டபடியே உட்கார்ந்திருக்கிறீர்கள்...' என்று, அவர் மனைவி கேட்டாள்.'நம்மிடம் 1 லட்ச ரூபாய் இருந்து என்ன பயன்... அடுத்த வீட்டுக்காரனிடம், 2 லட்ச ரூபாய் இருக்கிறதே... எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்...' என்றார். 'அடுத்த வீட்டுக்காரரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கட்டும்... அதனால், நமக்கென்ன கஷ்டம்... நம்மிடம் உள்ள பணத்தை அவர் பிடுங்கி விடவில்லையே...''உனக்கு ஒன்றும் தெரியாது; அவனிடம் நிறையப் பணம் இருக்கும் வரை, எனக்கு நிம்மதியே இருக்காது...' 'இத்தனை பொறாமை வேண்டாம்...' என்று கூறினாள் மனைவி. லட்சாதிபதிக்கு பாடம் கற்றுக் கொடுக்க தீர்மானித்தார் கடவுள். ஒரு நாள் - அவர் முன் தோன்றி, 'நீ ஆசைப்படும், மூன்று காரியங்கள் நிறைவேறும்; ஆனால், உனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை போல, இரண்டு மடங்கு, அடுத்த வீட்டுக்காரனுக்கு கிடைக்கும்...' என்று கூறி மறைந்தார் கடவுள். இந்த வரத்தை நீண்ட நாட்களாக பயன்படுத்தவில்லை லட்சாதிபதி. அடுத்த வீட்டுக்காரனுக்கு, இரண்டு மடங்கு கிடைக்கும் என்றால், பார்த்துக் கொண்டிருக்க முடியுமா... எனவே அந்த வரத்தை கிடப்பில் போட்டார். மனைவி விடவில்லை. 'கடவுள் தான் வரம் கொடுத்து விட்டாரே... நாம் கோடீஸ்வரராக வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்களேன்...' என நச்சரித்தபடியே இருந்தாள்.இதை பொறுக்க முடியாமல், 'எனக்கு 1 கோடி ரூபாய் வேண்டும்...' என்று வேண்டினார் லட்சாதிபதி. அடுத்த கணமே கண் முன், 1 கோடி ரூபாய் நோட்டுக்கள் விழுந்தன. சரியாக இருக்கிறதா என்று, எண்ணிப் பார்ப்பதற்கு முன், 'இரண்டு கோடி ரூபாயா...' என்ற மகிழ்ச்சி ஆரவாரம், பக்கத்து வீட்டில் கேட்டது.லட்சாதிபதிக்கு பொறாமை தாங்கவில்லை; உடனே, 'எனக்கு ஒரு கண் தெரியாமல் போக வேண்டும்...' என்றார். அடுத்த நிமிடம், 'ஐயோ... என் இரண்டு கண்களிலும் பார்வை போய் விட்டதே...' என்ற அழுகுரல் பக்கத்து வீட்டில் கேட்டது. லட்சாதிபதிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.ஆனால், ஒற்றைக் கண்ணுடன் வாழ்வது மிகவும் கஷ்டமாக இருந்தது.ஊரார், 'ஒற்றைக் கண்ணன்...' என கேலி செய்தனர்.கடவுள் கொடுத்த மூன்றாவது வரத்தை கேட்க முடிவு செய்தார். உரிய ஆயத்தங்களுடன், 'எனக்கு இன்னொரு கண் பார்வை வரட்டும்...' என்று வேண்டினார்.அவரிடமிருந்து போன ஒரு கண் பார்வை திரும்ப வந்தது; அதேசமயம், பக்கத்து வீட்டுக்காரனுக்கு, இரண்டு கண்களிலும் பார்வை வந்து விட்டது.பொறாமையால், பைத்தியக்காரர் ஆனார் லட்சாதிபதி.குழந்தைகளே... பொறாமை குணம் எவ்வளவு தீமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.