உள்ளூர் செய்திகள்

தேடி வந்த பரிசு!

''நேற்று ராத்திரி எங்கே போயிருந்த முகுந்தா... வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாயே...'' கேட்டான் செந்தில். ''அதை ஏன்டா கேக்குற... திடீர்னு அண்ணன் குழந்தைக்கு, உடம்பு சரியில்லாம மருத்துவரிடம் அழைத்து போக வேண்டியதாயிடுச்சு; போன வாரம் அம்மாவுக்கு, உடம்பு சரியில்ல...'' என்றான் முகுந்தன்.''நம்ம தெருவுல இருக்கிறவங்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது. அது ஏன்னு தெரியல; குழந்தைக்கு என்ன நோயாம்...'' அக்கறையுடன் விசாரித்தான், செந்தில்.''சுற்றுச்சூழல் சரியில்லாதது தான், காரணமுன்னு சொன்னாரு டாக்டர்...'' ''எங்க வீட்டுல வேலை செய்ற அம்மாவுக்கும், ரெண்டு நாளைக்கு முன் காய்ச்சல். வீட்டை சுத்தி குப்பை சேராம சுத்தமாக வெச்சுக்க சொல்லி இருக்கிறது சுகாதாரத்துறை... நாமதான் பாத்துக்கணும்...'' பொறுப்புடன் சொன்னான், செந்தில். அவன் அறிவியல் ஆசிரியர் மகன்; பட்டப் படிப்பை முடித்து வேலை தேடிவந்தான். அன்று மாலை குளக்கரையில் கூடினர் நண்பர்கள்.'என்ன செய்யணும்ன்னு சொல்லு...' என்றனர் நண்பர்கள். ''விழா நடத்துறதை போல சட்டை கசங்காம செய்ற வேலையில்ல; கூச்சப்படாமல் சேர்ந்து செயல்படணும்; இன்னும் சிலரையும் கூட சேத்துக்கணும்...'' என்றான் செந்தில். 'சேத்துக்கலாம்... விஷயத்த சொல்லு...' ''ஊர்ல, நாலு தெரு இருக்கு; எல்லாரும் அடிக்கடி உடல்நலம் சரியில்லை என, மருத்துவமனை போறாங்க; எல்லா தெருவையும் சுத்தி பார்த்தேன்...'''தெருவுல என்னத்த கண்டுப்பிடிச்ச...' கோரசாக கேட்டனர்.''சாக்கடை தண்ணீர் நடைபாதையில் ஓடுது; கண்ட இடங்களில் கிடக்குது குப்பை; சுற்றுச்சூழல் கெட்டு இருக்கு; நான் மட்டும் இதை சொல்லல; உடல் நலமில்லாம போகிற எல்லாரிடமும் மருத்துவர் இதைதான் சொல்லியிருக்காரு...''சுற்றுப்புறம் சுத்தமா இருந்தால் நோய் வராது; முதல்ல குப்பை குவிவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணும்; அது தான் நாளையில இருந்து நம்ம வேலை...'' திட்டமாக கூறினான் செந்தில்.''நல்ல யோசனை தான்; இதை பஞ்சாயத்து போர்டு செய்து கிட்டு இருக்கே...'' என்றான் பழனி.''பணியை ஒழுங்கா செய்திருந்தா, ராத்திரியில் இவ்வளவு கொசு கடிக்காதே...'' என்றான் முகுந்தன். ''உண்மை தான்... இந்த வேலையை எப்படி செய்யலாம்...'' என்றான் பார்த்திபன்.''வீடுகளில் இருக்கிற, மண்வெட்டி, கூடை, தொடப்பத்த வச்சு வேலையை துவங்கிடுவோம்...'' உறுதியாக சொன்னான், செந்தில். அதன்படி அதிகாலை, 5:00 மணிக்கு சாக்கடையை சுத்தம் செய்யும் பணியை துவங்கினர்.கோலம் போட தெருவுக்கு வந்த பெண்கள் இதை பார்த்து வியந்தனர். மக்கள் கவனம் மெல்ல மெல்ல பணி செய்த இளைஞர்கள் மீது திரும்பியது.'வேலை வெட்டி இல்லாத பசங்க...' சிலர் கிண்டல் அடித்து நகர்ந்தனர்.அதை காதில் வாங்காமல் சுறுசுறுப்பாக செயல்பட்டனர் இளைஞர்கள்.நல்ல நோக்கத்தில் நடந்த பணியில் பலரும் இணைந்தனர்; ஒரே வாரத்தில் தெரு சுத்தமானது; புதுப் பொலிவு பெற்றது. மோசமாக விமர்சித்தவர்கள் பாராட்டினர்; தெருவாசிகள் பொறுப்பாக குப்பை, கழிவு நீரை ஒழுங்குப்படுத்தினர். கிராமம், சுகாதாரத்தில் மேம்பட்டது; மக்கள் சுகமாக வாழ்ந்தனர். குழந்தைகளே... சுத்தமும், சுகாதாரமும் வீட்டிற்கும், நாட்டிற்கும் தேவை. பாவலர் மலரடியான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !