உள்ளூர் செய்திகள்

கதாபாத்திரமாக மாறிய மாணவன்!

மதுரை சேதுபதி பள்ளி, இடைநிலை வகுப்பில், 1950ல், படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வகுப்பில், கிரி என்ற மாணவன் இருந்தான். அவனை, 'அறுந்த வாலா... வாடா இங்கே...' என்று தான் ஆசிரியர்கள் அழைப்பர். அந்த அளவுக்கு சேட்டை செய்வான். ஆசிரியர்களின், சைக்கிள் காற்றைப் பிடுங்கி விடுவது; ஆசிரியை ஒயர் கூடைக்குள், நத்தைக் கூடுகளைப் போடுவது; கரும்பலகையில், ஆசிரியைகளை கிண்டலடித்து எழுதுவது என்று ரகளைகளை பட்டியலிடலாம்.மாணவர்களுக்கும், அவனைக் கண்டால் மிகவும் பயம்; உடன் படித்த நாகவாச்சாரி என்ற மாணவனை, 'லேப்' அறைக்குள் வைத்து பூட்டி விட்டான். எலும்புக் கூடு இருந்த அந்த அறைக்குள் அடைபட்டவன், பயத்தில், காய்ச்சல் வந்து அவதிப்பட்டான். 10 நாட்கள் படுக்கையில் கிடந்தான். அதனால், கிரியிடம், யாரும் வம்பு வைத்துக் கொள்வதில்லை.பள்ளி ஆண்டு விழா வந்தது. 'நாடகம் போடுங்கள்...' என்று, எங்கள் வகுப்புக்கு தலைமை ஆசிரியர் சொல்லி விட்டார். வகுப்பு ஆசிரியரும், காந்திஜி பற்றிய வரலாற்று சம்பவங்களை தொகுத்து, ஒரு நாடகம் எழுதி விட்டார். காந்தி வேடத்திற்கு, கிரியை தேர்வு செய்தார். எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி! 'எள்ளளவும் பொறுப்பில்லாதவன், எப்படி காந்திஜி கதாபாத்திரத்திற்கு சரியாக வருவான்' என்று விவாதித்துக் கொண்டோம். ஆனால், ஆசிரியரிடம் கேட்பதற்கு பயம். ஒத்திகை, பூட்டிய அறையில் நடந்தன. விழா நாளும் வந்தது; நாடகம் ஆரம்பித்தது. ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. அவ்வளவு அற்புதமாக இருந்தது. சிறுவயது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தாய்ப்பாசம், புலால் உண்டு வாந்தி எடுத்தது, காபி அடித்து விட்டு, மனம் கேட்காமல் ஒப்புக் கொண்டது, வக்கீலுக்கு படித்தது, தென்னாப்ரிக்கா ரயில் நிலையத்தில் அவமானப்பட்டது, மன உறுதியுடன், மக்களை இணைத்து, 'அகிம்சையே என் போராட்ட வழி...' என போராடியது என்று, நாடகம் அசர வைத்தது. காந்திஜி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து, மகாத்மாவாகவே மாறியிருந்தான், கிரி. பாராட்டுகள் குவிந்தன; முதல் பரிசும் கிடைத்தது. அதன் பின் நடந்தது தான் பேரதிசயம்... முழுமையாக மாறி விட்டான் கிரி; மற்றவரை துன்புறுத்தும் குணம் மறைந்தது. அடுத்தவரை இழிவாக பார்ப்பதும் மாறிவிட்டது. சாந்தமாக, இனிய பண்புள்ளவனாக, அனைவரும் விரும்பும் வண்ணம் மாறி விட்டான். காந்திஜி என்ற கதாபாத்திரம் நிகழ்த்திய அற்புதம் அது; அந்த நினைவுகள் பசுமையாக இன்றும், நெஞ்சில் நிறைந்திருக்கிறது.- கே.வெங்கட்ராமன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !