கோபமும் சிரிப்பும்!
தேனி, நா.ச.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2011ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...ஆங்கில ஆசிரியையாக இருந்தார் விஜயா.பாடங்களை தெளிவாக நடத்துவார். தவறு செய்தால், அதிகமாக கோபப்படுவார்; வகுப்பே அமைதியாகிவிடும்.ஒருமுறை, கரும்பலகையில் எழுதியதை அழிக்கும், 'டஸ்டர்' என்ற அழிப்பான் தொலைந்து விட்டது. கணித பாடவேளையில், பக்கத்து வகுப்பிலிருந்து கடனாக வாங்கி வைத்திருந்தோம்.வகுப்பு முடிந்த பின், கடன் வாங்கியதை கொடுக்க மறந்து விட்டோம். அடுத்து, ஆங்கில வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பக்கத்து வகுப்பு மாணவி, எங்கள் வகுப்புக்கு வந்து, 'டஸ்டர் வேணும் மேம்...' என்று கேட்டாள்.அடுத்த நொடி கோபத்துடன், 'உங்க வகுப்புல ஒரு டஸ்டர் கூட இல்லையா... அப்போ எங்களுக்கு வேணாமா...' என்று திட்டினார்.நாங்கள் அமைதியாக இருந்தோம். இறுதியில், 'இனி இது போல் தவறை செய்ய கூடாது...' என்று அறிவுரைத்து, டஸ்டரை அந்த மாணவியிடம் கொடுத்தார்.அப்போது, 'மேம்... அது அவங்க டஸ்டர் தான்...' என்று வாயைத் திறந்தோம்.கோபம் மறந்தவர், 'இத முன்னாலயே சொல்ல மாட்டிங்களா...' என சிரித்தார். நாங்களும் சிரித்தோம்; பக்கத்து வகுப்பு மாணவியும் சிரித்தாள். இது அடங்க வெகுநேரமாயிற்று. அன்றிலிருந்து கோபத்தைக் குறைத்துக் கொண்டார்.இப்போது என் வயது, 19; கல்லுாரியில் இளங்கலை படிக்கிறேன்; அந்த நிகழ்வு நினைவுக்கு வரும் போதெல்லாம் சிரித்து விடுகிறேன்.- ச.பிரிய தர்ஷினி, தேனி.