அதிமேதாவி அங்குராசு!
கண்டாங்கி சேலை!பிரம்மாண்டமான வீடுகள், விமரிசையாக நடத்தப்படும் திருமணம், சீர்வரிசை, சுவைமிகுந்த உணவு, கனிவான விருந்தோம்பல், கண்கவர் கைவினைப் பொருட்கள் என்று செட்டிநாடு பகுதி சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.இந்தப் பட்டியலை தாண்டி, உடலை சுகமாக தழுவும் கைத்தறிச் சேலைகளுக்கும் புகழ்பெற்றது செட்டிநாடு. காரைக்குடியில் நெய்யப்படும் கண்டாங்கி சேலைகளுக்கு உரிய முக்கியத்துவம் உண்டு. கண் கவரும் இந்தவகை சேலைக்கு, புவிசார் குறியீடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது, செட்டிநாடு பகுதி நெசவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. ஆறு வருடப் போராட்டத்துக்கு பின் கிடைத்திருக்கும் வெற்றி.கண்டாங்கிச் சேலைக்கு புவிசார் குறியீடு கேட்டு, 2013ல் விண்ணப்பிக்கப்பட்டது. புது டில்லியில் ஆய்வு நடந்தது. ஆய்வுக்குப் பின் புவிசார் குறியீடு வழங்கும் அறிவிப்பு ஆணையாக வெளியிடப்பட்டுள்ளது.இந்த சேலை, 200 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. புடவையின் மேலும் கீழும் மனம் கவரும் கரைகளும், நடுவே, கண்ணைக் கவரும் குறுக்கு கோடுகள் மற்றும் கட்டங்களுடன் நெய்யப்படுவதுதான் கண்டாங்கிச் சேலையின் தனித்துவம். முற்காலத்தில், பட்டு நுாலில் மட்டுமே கண்டாங்கி நெய்யப்பட்டது.நகரத்தார் இனப் பெண்கள் பெரும்பாலும் பட்டில் நெய்த கண்டாங்கி சேலை தான் கட்டினர். பின், ரசனை மாறியது. சிலர், 'பட்டில் நெய்யும் அதே டிசைனை பருத்தியிலும் நெய்ய முடியுமா...' என கேட்டனர். அதன் விளைவு, பருத்தியில் வண்ண அணிவகுப்பு துவங்கியது.* கண்டாங்கி சேலையை பராமரிப்பது மிக எளிது* கட்டிக் கொள்ள சுகமாக இருக்கும்* பார்ப்பதற்கும் கண்ணியம் தரும்* எவ்வளவு கூட்டத்திலும் தனித்துத் தெரியும் * வெயில், குளிர் பருவங்களில் அணிய ஏற்றது * கோடையில் வியர்வையை அகற்றி உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் * குளிரில் போர்வை போல கதகதப்பைத் தரும் * நீண்ட நாள் உழைக்கும் * சாயம் போகாது.இந்த காரணங்களால் தான் கண்டாங்கி சேலை பிரபலமானது.இந்த சேலை நெசவுக்கு, தரையில் குழி தோண்டி அதற்குள் காலை விட்டு நெய்ய வசதியாக தறிகள் இருந்தன. ஆனால் மழைக்காலத்தில் குழிக்குள் தண்ணீர் நிரம்பி, நெசவு செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது, குழியெல்லாம் கிடையாது. தரை மேலேயே தறியை அமைத்து நெசவு செய்கின்றனர். காரைக்குடியில் மட்டுமே இவ்வகைச் சேலை நெய்யப்படுகிறது. அதற்குத்தான் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இனி போலிகளை தவிர்க்க முடியும். தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான காட்டன் சேலைகள் விசை தறியில் நெய்யப்படுபவை. அவற்றை, கைத்தறி என தவறான தகவலுடன் இரு மடங்கு விலையில் விற்கின்றனர். இனி ஏமாறத் தேவையில்லை. கண்டாங்கிச் சேலையில் இருக்கும் குறியீடு பார்த்து வாங்கலாம். இப்போது, 'இந்தியா காட்டன்' என்ற பிரத்யேகக் குறியீடு கொடுத்துவிட்டதால் போலிகளைக் காட்டி ஏமாற்ற முடியாது. கைத்தறி என்றால் சேலை கரையில் தறியில் கோர்வை போட்ட சிறு துளைகள் தெரியும். அதை வைத்து கண்டுபிடிக்கலாம்.கண்டாங்கி எத்தனை வருடம் ஆனாலும் சாயம் போகாது. அதற்கு காரணம், காரைக்குடி சம்பை ஊற்றுத் தண்ணீர். பருத்தி நுாலை அந்தத் தண்ணீரில் வேகவைத்துச் சாயம் ஏற்றுவதுதான் காரணம். சேலைக்கு கஞ்சி போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. அப்படியே துவைத்துக் கட்டினாலே போதும். எடுப்பான தோற்றம் கொடுக்கும்.அரக்கு, பச்சை, நீலம், மஞ்சள், மயில் கழுத்து நிறம் என பல வண்ணங்களில் கிடைக்கிறது. எந்த வண்ணத்தை எடுத்தாலும், தனித்துவ அழகுடன் மிளிரும். காலத்துக்கேற்ற வகையில் சுடிதார், துப்பட்டாவும் கூட கண்டாங்கி தயாரிப்பாக கிடைக்கின்றன. - என்றென்றும் அன்புடன், அங்குராசு.