அதிமேதாவி அங்குராசு!
பெரும் மனக்காரர்!உலக பெரும் பணக்காரர் பற்றியே தெரிந்து கொள்ள விரும்புவோம். பெரும் மனக்காரர் பற்றி அறிய யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.பெரும் மனதுடன் வாழ்ந்த பெரும் பணக்காரர் ஒருவரை பற்றி அறிவோம்.உலக பணக்காரர் பட்டியல், ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. அதில் போட்டிப்போட்டு, பலர் முன்னடைவும், பின்னடைவும் கண்டு வருகின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ், உலக பெரும் பணக்காரராக நீண்டகாலமாக முன்னிலை வகிக்கிறார்.தற்போதைய நிலையில் முதலிடத்தில் இருப்பவர் ஜெப் பெஸோஸ். இவரும் அமெரிக்காவை சேர்ந்தவர் தான். அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.ஆனால், உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையை பெற்றவர், ஜான் டி ராக்பெல்லர். அமெரிக்கா, நியூயார்க் நகரில், ரிச்சோர்டு பகுதியில், ஏழை விவசாயிக்கு, ஜூலை 8-, 1839ல் பிறந்தார்.சிறுவயதில், உருளைக்கிழங்கு காய வைத்து, கூலி வாங்கி வாழ்க்கையை துவங்கினார். வாலிப பருவத்தில், ஒரு வணிகவியல் கல்லுாரியில், மூன்று மாதங்கள் வியாபாரம் பற்றி பயிற்சி எடுத்துக் கொண்டார். பின், 16-ம் வயதில் பங்கு மார்க்கெட் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த, கிளார்க் என்பவருடன் இணைந்து பங்குச்சந்தையில் வியாபாரத்தை, 19ம் வயதில் துவங்கினார்.மேலும், பல தொழில்களை முயற்சித்து பார்த்தார். அவருக்கு, பெட்ரோலிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் கைகொடுத்தது. அமெரிக்காவில் எண்ணெய் இருக்கும் இடங்களை தேடி, எளிய முறையில் தோண்டியெடுத்து, 20ம் வயதில் விற்பனை செய்தார்.பின்னாளில், ஸ்டார்ண்டர்டு ஆயில் கம்பெனி என்ற நிறுவனத்தை நிறுவினார். இது, உலகின் மிகப் பெரிய பெட்ரோலிய நிறுவனங்களில் ஒன்றானது. மண்ணெண்ணெய்,பெட்ரோல் உற்பத்தி மற்றும் விற்பனை அவரை, செல்வத்தின் உச்சாணிக் கொம்புக்கு அழைத்துச் சென்றது. அன்று மின்சார பல்பு பயன்பாட்டிற்கு வராததால், எண்ணெய் வளமே உலகம் முழுதும் ஒளியை தந்தது. மோட்டார் வாகனங்களும், பெட்ரோலை அடிப்படையாக கொண்டு இயங்கின. இதனால், வளர்ச்சி உயர்ந்தது.கடும் உழைப்பால் பணம் சேர்ந்தது. புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. சுவாமி விவேகானந்தரின் ஆலோசனையால், 'ராக்பெல்லர் அறக்கட்டளை' என்ற அமைப்பை நிறுவினார். வருமானத்தில், 10ல் ஒரு பங்கை, நற்பணிகளுக்காக வழங்கினார் ராக்பெல்லர். உலகிலுள்ள பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி கழகங்களின் வளர்ச்சிக்கு பெரும்பணத்தை வாரி வழங்கினார்.பெரும் பணக்காரராக இருந்த போதும், மிக எளிமையாகவே வாழ்ந்தார். தனக்கென, கார் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. போக்குவரத்துக்கு வாடகை சாரட் வண்டியையே பயன்படுத்தினார்.ஒருநாள், அந்த சாரட் வண்டியோட்டி, 'ஐயா... தாங்கள் மிகப்பெரிய பணக்காரர் என்பதை அறிவேன். அப்படியிருந்தும் ஒரு கார் கூட வைத்து கொள்ளவில்லை. ஆனால், தங்கள் மகன் தினமும் விதம் விதமான கார்களில் சவாரி செய்கிறார். தாங்கள் ஏன் கார் வைத்து கொள்ளவில்லை...' என்று கேட்டார்.ராக்பெல்லர் சிறிது நேரம் மவுனமாக இருந்தார். பின், 'ஐயா... என் மகனின் தந்தையான நான் பெரும் பணக்காரன். அதனால், அவன் காரில் செல்கிறான். ஆனால், என் தந்தை ஏழை விவசாயி ஆயிற்றே... அந்த ஏழையின் மகனான நான் எப்படி கார் வாங்க முடியும்... அதனால் தான் தினமும் சாரட் வண்டியில் செல்கிறேன்...' என்றார்.வண்டி ஓட்டி மெய்சிலிர்த்துப் போனார். அத்தனை எளிமையாக வாழ்ந்தார் ராக்பெல்லர்.அமெரிக்காவில் செல்வ செழிப்பான குடும்பங்களில் ஒன்றாக, ராக்பெல்லர் வம்சம் இன்றும் விளங்குகிறது.வேண்டாமே செயற்கை!குழந்தைகள், குளிர்பானம் அருந்துகின்றனர் என கவலைப்படும் பெற்றோர், அந்த பழக்கம், தங்களிடமிருந்து தான் வந்தது என உணர்வதில்லை.பதப்படுத்தப்பட்ட சோடா குளிர் பானம் மற்றும் அது தொடர்புள்ள பழச்சாறுகளை தொடர்ந்து பருகும் பெண்களுக்கு, பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதயநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வுக்கு, 81 ஆயிரத்து 714 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இவர்கள், 50 வயதை கடந்தவர்கள்.உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளாமல், சோடா பானங்கள் அதுபோன்ற பழச்சாறு கலந்த பானங்களை பருகும் பெண்களை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவில்...* உடல் பருத்த பெண்களுக்கு தான் பாதிப்பு அதிகமாக இருக்கும்* மற்ற பெண்களை விட குளிர்பானம் பருகுவோரை பக்கவாதம் பாதிக்கும் * மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் கூடுமானவரை பதப் படுத்திய பானங்கள் பருகுவதை தவிர்ப்பது நல்லது. சுவைக்காக ரசாயனம் சேர்க்கப்படும் பானங்களையும் பருகக்கூடாது. எத்தகைய ரசாயனமும் கலக்காத தண்ணீர் பருகுவதே சிறப்பானது என்று அமெரிக்க இதய நோய் துறைக்கான அமைப்பு கூறியுள்ளது.தண்ணீர் என்பது உயிர் திரவம். அதை பாதுகாத்து பயன்படுத்துவோம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.