அதிமேதாவி அங்குராசு!
எல்லை வினோதங்கள்!ஏழு நாடுகளின் நிலங்களோடு தொடர்புள்ளது, இந்திய எல்லை. அவை, ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் வங்கதேசம். இவை தவிர, தென்கிழக்கு எல்லைப் பகுதியாக இலங்கை, தென்மேற்கு எல்லைப் பகுதியாக, மாலத்தீவு ஆகியவை, கடல் பரப்பில் உள்ளன.இந்திய எல்லையில் உள்ள மிகப்பெரிய நாடு சீனா; மிகச் சிறிய நாடு பூடான். அண்டை நாடான வங்கதேசம், 4156 கி.மீ., துார எல்லையைக் கொண்டுள்ளது. மிக குறைந்த துாரம் எல்லை கொண்டது ஆப்கானிஸ்தான். இது, 106 கி.மீ., துாரமுள்ளது.இரட்டை நாடுள்ள கிராமம்!மியான்மர் எல்லையில் உள்ளது, லாங்வா கிராமம். நாகாலாந்து மாநில பகுதியில் உள்ளது. இந்த கிராமத்தில் சில வீடுகளின் குறுக்கே, இரு நாட்டு எல்லை கோடு உள்ளது. சில வீடுகளின் முன்பகுதி இந்தியாவிலும், பின்பகுதி மியான்மரிலும் உள்ளன. இந்த கிராமத்தில் பழங்குடியினர் அதிகம். பல இளைஞர்கள் மியான்மர் ராணுவத்தில் பணியாற்றுகின்றனர்.கடல் எல்லை!இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தீவு நாடு இலங்கை. எந்த நாட்டின் தரைப்பகுதியுடனும் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கிறது, பாக் ஜலசந்தி. தமிழகம் - இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம் இடையே உள்ள கடல் பகுதி இது. இந்திய பெருங்கடலில் வாங்காள விரிகுடா - மன்னார் வளைகுடா பகுதியில் உள்ளது. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, 1755 முதல் 1763 வரை, மதராஸ் பிரசிடென்சி என்ற சென்னை மாகாண கவர்னராக இருந்தவர் ராபர்ட் பாக். இவர் நினைவாகத் தான் இந்த பகுதி, பாக் ஜலசந்தி எனப்படுகிறது.நேபாள எல்லை!பீஹார், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்காளம், சிக்கிம், ஆகிய மாநில எல்லைகளுடன் தொடர்புடையது நேபாள நாடு. எல்லையில், சோனவுலி என்ற நகரம் உள்ளது; இது, உத்தரபிரதேச மாநிலம், மஹராஜ்கஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்டது. இந்தியா, நேபாள சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய பகுதி. புத்தர் பிறந்த இடமாக கருதப்படும் லும்பினிக்கு, புனித யாத்திரிகர்கள், இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த தடத்தில் இந்திய ரயில்கள் இயக்கப்படுகின்றன.வாகா எல்லை!இந்தியா - பாகிஸ்தானை பிரிப்பது ராட்கிளிப் கோடு. இங்குள்ள சிற்றுார் வாகா, 1947ல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது; கிழக்குப் பகுதி இந்தியாவுக்கு உட்பட்டது; மேற்கு பகுதி பாகிஸ்தானில் உள்ளது.இந்த எல்லை பகுதியில் தினமும் மாலை 5:௦௦ மணிக்கு, இரு நாட்டு வீரர்களும் நடத்தும் கொடி நிகழ்ச்சி மிகவும் புகழ் பெற்றது. இதற்கு, 'வாகா பார்டர் செரிமனி' என்று பெயர்; இந்த நிகழ்ச்சியைப் பார்க்க, ஆயிரக்கணக்கானோர் கூடுவர். இரு நாட்டு எல்லையிலும், பார்வையாளர்கள் குவிந்திருப்பர்.பாதுகாப்புப்படை!இந்திய எல்லைப் பகுதியை பாதுகாப்பது, பி.எஸ்.எப்., எனப்படும், எல்லைப்பாதுகாப்பு படை. இந்தியாவிற்குள் ஊடுருவலை முறியடிப்பது, எல்லையில் சட்ட விரோத செயல்களை தடுப்பது போன்ற செயல்கள் இதன் முக்கிய பணி. இந்த படை, 1965ல் துவங்கப்பட்டது. உலகில் மிகப்பெரிய எல்லை பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இதன் முதல் தலைமை இயக்குநராக கே.எப்.ரஸ்டம்ஜி பொறுப்பு வகித்தார்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.