அதிமேதாவி அங்குராசு!
பாடும் வானம்பாடி...ஏரிகள் மாவட்டம் என புகழ் பெற்றது செங்கல்பட்டு. இங்குள்ள வேடந்தாங்கல் ஏரி பறவைகள் சரணாலயமாக உள்ளது. ஏரிக்குள் கொத்து கொத்தாக பறவைகள் காட்சி தரும். நாரை, அரிவாள் மூக்கன், வானில் வட்டமிடும் ரண்டிவாயன்கள், ஊசிவால் வாத்து, நீரில் குஞ்சுகளுடன் வலம் வரும் நீர்க்கோழிகள். ஏரிக்குள் இருக்கும் பறவைகளை துல்லியமாக காண, இங்கு காட்சி கோபுரம் உள்ளது. தொலைநோக்கி கருவியும் கிடைக்கும். பறவைகள் பாடுவதை, பறப்பதை, நீந்துவதை, கூடு அமைப்பதை மனம் குளிர பார்க்கலாம். குஞ்சுகளுடன் குலாவுவதை ரசிக்கலாம். மஞ்சள் மூக்கு நாரை என்ற பறவை தான் இங்கு அதிகம் வரும். இதை ஆங்கிலத்தில், 'பெயின்டட் ஸ்டார்க்' என்பர். சங்க காலத்தில் வாழ்ந்த சத்திமுத்த புலவர் எழுதிய, 'நாரை விடு துாது' கவிதையில், 'நாராய் நாராய் செங்கால் நாராய்... பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன, பவளக் கூர்வாய் செங்கால் நாராய்...' என்ற குறிப்பு உள்ளது. நாரையின் கால்கள் சிவப்பு நிறத்திலும், அலகு, பனங்கிழங்கு போல் இருப்பதையும் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிட்டு உள்ளது போல், மஞ்சள் மூக்கு நாரை உள்ளதை காணலாம். பறவை வரத்து காலத்தில் பனங்கிழங்கும், வேடந்தாங்கலில் அதிகம் கிடைக்கிறது. தமிழகத்தின் வடகோடியில் வேடந்தாங்கலும், தென் கோடியில் கூந்தங்குளமும் உள்ளன. இரண்டு சரணாலயங்களிலும் இந்த வகை நாரைகள் வரத்து அதிகம். வடகிழக்கு பருவமழை துவங்கும்போது கூடமைத்து குஞ்சு பொரிக்கும். பறவைகள் தங்க வசதியாக, வேடந்தாங்கல் ஏரிக்குள், செங்கடம்பு, நீர்க்கருவை, சமுத்திர பாலை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. பறவைகளுக்கு உணவாகும் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. நீர் உயிரினங்களான தவளை, நத்தை, ஆமைகளும் அதிக அளவில் உள்ளன.இங்கு நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, நீர்க்காகம், முக்குளிப்பான், சிறகி போன்ற பறவைகளை காணலாம். வித்தியாசமாக தோன்றும் அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், பாம்புதாராவை ரசித்து மகிழலாம். சாம்பல் நாரை, மடையான் என்ற குருட்டு கொக்குகள் எப்போதும் விளையாடிக்கொண்டிருக்கும். தமிழக நீர்ப்பறவைகள் அனைத்தையும் இங்கு முழுமையாக பார்க்க முடியும். இதுவே, வேடந்தாங்கல் சரணாலயத்தின் சிறப்பை உணர்த்தும்.வட அமெரிக்க நாடான கனடா, உலகின் வடமுனை அருகே சைபீரியா, அண்டை நாடுகளான வங்கதேசம், பர்மா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கல் மற்றும் அதன் அருகே கரிக்கிலி ஏரிக்கு வலசை வருகின்றன. குளிரை தவிர்க்க ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, தட்டைவாயன், பச்சைக்காலி மற்றும் பவளக்காலி பறவைகள் வந்து தங்கி செல்லும்.பழங்காலத்தில் பறவை வேட்டையாட இங்கு எந்த தடையும் இல்லை. அப்போது, வேடர்கள் அதிகம் தங்கிய ஊர் வேடந்தாங்கல். ஆனால், இன்று நிலைமை வேறு. இங்கு வசிக்கும் மக்கள், பறவைகளை பாதுகாக்கின்றனர். அதற்கு காரணம் உள்ளது. வேடந்தாங்கல் ஏரி நீரில் பல நுாறு ஏக்கர் நிலம் பாசனம் நடக்கிறது. ஏரிக்குள் பல்லாயிரம் பறவைகள் தங்குவதால் அவற்றின் எச்சம் ஏரி நீரில் விழுகிறது. இது, ஊட்டச்சத்துள்ள இயற்கை உரமாகிறது. பாசனத்துக்கு பாய்ச்சும் போது பயிர்கள் செழிக்கின்றன. மகசூல் பன்மடங்கு பெருகுகிறது. இயற்கை உயிரினமான பறவை வாழ்வுக்கும், வேளாண் உணவு உற்பத்திக்கும் சங்கிலி போல் தொடர்பிருப்பதை நிரூபிக்கும் பகுதியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில், செங்கல்பட்டு கலெக்டராக இருந்தவர் லியேனெல் பிளேஸ். இவரது பணி காலத்தில் தான் பறவைகளை பாதுகாப்பது துவங்கப்பட்டது. சரணாலயமாக, 1936ல் அறிவிக்கப்பட்டது. பறவைகளை பாதுகாக்க நிதியும் ஒதுக்கப்பட்டது. வேட்டையாட தடை விதிக்கப்பட்டது. தற்போது, தமிழக வனத்துறை பராமரிக்கிறது. பல்லுயிரினங்கள் வாழும் சூழலே, உயிர்கோளம் என்கிறது, 'யுனிசெப்' என்ற சர்வதேச அமைப்பு. அதில் ஒன்றுதான் வேடந்தாங்கல். இது போன்ற உயிரின சூழலை பாதுகாத்தால் நலமுடன் வாழலாம்.உயிரினச்சூழல்!வேடந்தாங்கலுக்கு, 400 ஆண்டுக்கு முன்பிருந்தே பறவைகள் வருகின்றன. தற்போது, சர்வதே முக்கியத்துவம் பெற்ற, 'ராம்சார்' என்ற பல்லுயிரின சூழல் என்ற தகுதி பெற்றுள்ளது. சூழலை பாதுகாக்க வசதியாக, சரணாலயம் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பறவைகள் வசிக்கும் ஏரி, முதன்மையான உயிரினச்சூழல். அடுத்துள்ளது, இரை தேடி பறக்கும் பகுதி. தொடர்ந்துள்ளது, சூழல் பாதுகாப்பு மண்டலம். இந்த பகுதிகளில், தொழில் மற்றும் மனித செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு உள்ளது. வேடந்தாங்கல், நாட்டின் முதல் பறவை சரணாலயம்; 74 ஏக்கர் பரப்பளவு உடையது. ஆண்டுக்கு, 40 ஆயிரம் பறவைகள் வரும். அக்டோபர் முதல் மார்ச் வரை பருவ காலம். பறவைகளை நெருங்கி செல்ல முடியாது. பைனாகுலர் கருவி உதவியால் பார்க்கலாம். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் உயிரினங்கள் பற்றிய அறிவை இங்கு பெறலாம். - என்றென்றும் அன்புடன், அங்குராசு.