உள்ளூர் செய்திகள்

நெருப்புக்கோட்டை!

முன்னொரு காலத்தில், கந்தர்வபுரி நாட்டில், அவனீந்திரா என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு, இளந்தென்றல், இளங்குமரன், இளமாறன் என்று மூன்று பிள்ளைகள். அவனீந்திராவின் மூத்த சகோதரர் மகேந்திரவர்மர். அவர் மரகதபுரி நாட்டு மன்னர். அவருக்கு, திலோத்தம்மா, திலகவதி, திவ்யா அழகான மூன்று பெண்கள் இருந்தனர்.இவ்விரு சகோதரர்களின் ராஜ்யங்களும், இந்த மூலைக்கும், அந்த மூலைக்குமாக வெகுதூரத்தில் இருந்தன. ஆகவே, கந்தர்வபுரி மன்னரும், மரகதபுரி மன்னரும் நீண்ட நெடுங்காலமாகச் சந்திக்கவே இல்லை. அதேபோல, மன்னர்களுடைய குழந்தைகளும், ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை.அந்தக் காலத்தில், இப்போது போல ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத்துக்குச் சுலபமாகச் செல்ல முடியாது. அதற்கான சாலை வசதியோ, வாகன வசதியோ கிடையாது. நடுவிலே பகை மன்னர்களும், கானகங்களும், மலைகளும், நதிகளும் மற்றும் வேறு அபாயங்களும் நிறைந்திருக்கும். பயணம் மேற்கொள்ளுபவர்கள் உயிரோடு போய்ச் சேருவர் என்று சொல்ல முடியாது.மரகதபுரி மன்னர் மகேந்திரவர்மர் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். அவருடைய மூன்று மகள்களுக்கும் திருமணமாகவில்லை. ஆகியிருந்தால் அவர்களுடைய கணவன்மார்களின் உதவியும், பாதுகாப்பும் கிடைத்திருக்கும். அதுவுமில்லாத நிலையில், மரகதபுரியை ஆட்சி புரியும் தம் பெண்களுக்குப் பாதுகாப்பாக ஒரு ஏற்பாட்டைச் செய்ய முடிவு செய்தார். தம் தம்பி, கந்தர்வபுரி மன்னர் அவனீந்திராவின் உதவியை நாடுவதென்று தீர்மானித்தார்.வல்லமை மிக்க ஒரு தூதுவனை தம்பியிடம் செய்தியோடு அனுப்பினார்.'உன்னுடைய மூன்று பிள்ளைகளில் திறமைசாலியும், நாடாளும் தகுதியும் கொண்ட ஒருவனை உடனே இங்கு அனுப்பி வைக்கவும். எனக்கு பின் மரகதபுரியின் மணிமகுடத்தை தரித்து நாடாளும் பொறுப்பையும் அவன் ஏற்கவேண்டி இருக்கும்' என்று தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் மகேந்திரர்.வல்லவனான அத்தூதுவன், வழியில் எங்கும் சிக்காமல், கந்தர்வபுரி மன்னரிடம் கடிதத்தைச் சேர்ப்பித்தான்.அண்ணா அனுப்பி இருந்த செய்தியைப் படித்த மன்னர், நீண்ட நேரம் சிந்தனை செய்தார். பின், தம் மூன்று பிள்ளைகளையும் அழைத்து, மரகதபுரியிலிருந்து வந்த செய்தியைக் கூறினார்.''உங்க பெரியப்பாவை நீங்கள் பார்த்ததில்லை. அவருடைய மரகதபுரி வளங்கொழிக்கும் பரந்த தேசம். அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்குப் பின், அரியணை ஏற அவருக்கு ஆண் வாரிசு இல்லை; மூன்று பெண்கள்தான் அவருக்கு. வயதாகிவிட்டதால் இனி அதிக நாட்கள் வாழமாட்டார். ''தம் நாட்டின் அரசனாக்க என் பிள்ளைகளில் தகுதியுடைய ஒருவனை அனுப்பி வைக்கும்படி கேட்டிருக்கிறார். உங்கள் பெரியப்பாவின் ஆசையைப் பூர்த்தி செய்து மரகதபுரியின் மன்னராக உங்களில் யாருக்கு விருப்பம்?'' என்று கேட்டார்.''தந்தையே! இந்த அரிய வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் தக்க பாதுகாப்பு வசதிகளுடன் அனுப்பினால் நான் உடனே மரகதபுரிக்கு புறப்படுகிறேன்,'' என்றான் மூத்த மகன் இளந்தென்றல்.மன்னர் தம் மூத்த மகனின் பேச்சைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார்.''இளந்தென்றல்! நீ அபாயங்கள் நிறைந்த நெடுந்தூரப் பயணத்தை விரும்பி ஏற்றதைக் கண்டு மகிழ்கிறேன். நம் குதிரை லாயத்துக்குப் போய், அங்கு உனக்குப் பிடித்த குதிரையைத் தேர்ந்தெடுத்துக்கொள். பொக்கிஷ சாலைக்குப் போய், வழிப் பயணத்துக்குத் தேவையான பொருளை உன் விருப்பம்போல எடுத்துக் கொள். ''அதே போல, ஆயுதச்சாலைக்குப் போய் ஏற்ற ஆயுதங்களையும், பண்டக சாலைக்குப் போய் தேவையான உடைகளையும் எடுத்துக் கொள். மரகதபுரியின் மன்னராவதற்குப் பயணப்படு,'' என்றார்.தந்தை குறிப்பிட்டபடி எல்லா ஆயத்தங்களையும் தயார் செய்துவிட்டு, தந்தையை வணங்கி நின்றான் இளந்தென்றல்.தமையன் மகேந்திரவர்மருக்கு ஒரு அறிமுகக் கடிதம் எழுதி, அதில் தம் அரசு முத்திரையைப் பதித்து அவனிடம் கொடுத்தார்.''சக்ரவர்த்தியிடம் இந்தக் கடிதத்தைக் கொடு. கந்தர்வபுரியின் பட்டத்து இளவரசன் நீதான் என்பதை அறிந்து கொள்ள இது உதவும். அவர் உன்னைப் பார்த்ததில்லை; உனக்கும் அவரைத் தெரியாது. ஆகவே, நம் அரசு முத்திரையிட்ட இந்த அறிமுகக் கடிதம் ரொம்பவும் முக்கியம்,'' என்று கூறி மகனுக்கு விடை கொடுத்தார்.சகோதரர்களிடமும் விடை பெற்றுக்கொண்டு, தான் தேர்ந்தெடுத்த கம்பீரமான குதிரையில், கந்தர்வபுரியின் பட்டத்து இளவரசனான இளந்தென்றல், மரகதபுரியின் மன்னராகப் போகும் ஆசைக் கனவுகளுடன் புறப்பட்டான்.அவன் சென்றதும், அவனுடைய தகுதியையும், வீரத்தையும் பரீட்சை செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார் மன்னர். தம் மகனேயானாலும், அவனுடைய திறமையைச் சோதிக்க முடிவு செய்தார்.'கந்தர்வபுரி சிறிய ராஜ்யம்தான். ஆனால், மரகதபுரியோ பரந்த சாம்ராஜ்யம். அதன் சக்கரவர்த்தியாவது என்றால் மாபெரும் வீரனாகவும், திடசித்தம் உடையவனாகவும் இருக்க வேண்டும். ஆகவே, தம் மகன் எப்படிப்பட்டவன் என்பதை சோதித்து அறிய விரும்பினார்.இருட்டியதும், தம்முடைய ரகசிய அறைக்குச் சென்று, நகர சோதனைக்குப் போக மாறுவேடமணிந்தார். ரகசிய அறையிலிருந்து அரண்மனையை விட்டு வெளியேறவும், யாருமறியாதபடி மறுபடி திரும்பி வரவும் அவ்வறையில் ஒரு ரகசியச் சுரங்க வழியும் உண்டு.மன்னர் ஒரு பெரிய கரடியின் தோலைப் போர்த்திக் கொண்டு, சுரங்கப்பாதை வழியே அரண்மனையிலிருந்து காட்டுக்கு வந்தார்.அங்கு அவருடைய தேவைக்காக எப்போதுமே ஒரு கொட்டடியில் இரண்டு குதிரைகள் இருக்கும். அதைப் பராமரிக்கவும், ரகசிய வழிக்குக் காவலராகவும் நம்பிக்கைக்குகந்த ஒரு வீரன் இருப்பான். ரகசியங்களை காப்பதில் உயிரையும் கொடுக்கக்கூடிய உண்மை ஊழியன் அவன். சுரங்கப்பாதையிலிருந்து பெரிய கரடி வெளிப்பட்டதும் அவன் பயப்படவில்லை. அது மன்னரின் வேஷம் என்பதை அறிவான். கரடியை வணங்கி வரவேற்றான். கரடித் தோல் போர்த்திய மன்னர் ஒரு குதிரை மீது தாவி ஏறினார். அடுத்த வினாடி, அந்தக் குதிரை அடர்ந்த கானகத்தினுள்ளே காற்றெனப் புகுந்து ஓடியது. குறுக்கு வழியில் சென்று தம் மகனை சந்திப்பதே மன்னரின் நோக்கம்.தம் நாட்டின் சுற்றுப்புறங்களை அறிந்தவர் அவர். இத்தனை நேரம் அவன் எங்கு சென்றிருப்பான் என்பதையும் அவரால் ஊகிக்க முடிந்தது. பொழுது புலரும் வேளையில் காட்டாற்றின் குறுக்கேயுள்ள ஒரு மூங்கில் பாலத்தை அவன் கடக்க வேண்டும் என்ற முடிவோடு அப்பாலத்தில் அவனைச் சந்திக்க திட்டமிட்டுக் குறுக்குவழியில் அந்தக் காட்டாற்றை நோக்கி குதிரையை விரட்டினார் மன்னர்.பகலெல்லாம் பயணம் செய்து, இரவில் ஒரு இடத்தில் தங்கிக் களைப்பாறித் தூங்கி எழுந்து, கருக்கலில் மறுபடி தன் பயணத்தைத் துவங்கினான் இளவரசன். உல்லாசமாகச் சீட்டியத்தடிவாறு தன் குதிரையை மெல்ல நடத்தியபடி காட்டாற்றின் மூங்கில் பாலத்தை நெருங்கினான். இருள் புரியும் வேளை காலைக் கதிரவன் கிழக்கிலே பொன் வண்ண கதிரொளியால் பொலிவுறச் செய்து கொண்டிருந்தான். பூமித்தாய் தன் இருள் போர்வையை மெல்ல மெல்ல உதறி எழுந்து கொண்டிருந்த வேளை. இயற்கை, உறக்கம் நீங்கி விழித்துக் கொண்டதை, அறிவிப்பது போல, பறவைகள் பல்வேறு ஒலி எழுப்பியபடி தங்கள் கூடுகளிலிருந்து வெளிப்பட்டு உல்லாசமாக வானத்தில் வட்டமிட்டன.அப்போது, கவலையின்றி ஒய்யாரமாகப் போய்க்கொண்டிருந்த இளந்தென்றலின் குதிரை திடீரென, கனைத்தபடி நின்றது. தடுமாறிப் பின்னோக்கி நகர்ந்தது.நிலை கொள்ளாமல் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி ஆர்ப்பாட்டம் செய்தது. தன் குதிரையின், திடீர் நடத்தையினால் இளவரசன் தவித்துப் போனான். குதிரைக்கு என்ன ஆயிற்று, ஏன் இப்படி முன்னே போகாமல் சண்டித்தனம் செய்கிறது? என்று புரியாதவனாகத் தவித்தான்.நல்லவேளை, அதன் கடிவாளத்தையும், பிடரிமயிரையும் உறுதியாக பிடித்திருந்ததால் கீழே விழாமல் தப்பினான்.இளவரசன் மிரளும் குதிரையையும் சமாதானப்படுத்தினான். ஆனால், குதிரை நிதானப்படாமல், முன்னங்கால்களை உயர்த்தித் தரையில் மோதி ஆர்ப்பாட்டம் செய்தது. அதன் காரணம் இளவரசனுக்கு அப்போதுதான் புரிந்தது.- 1 தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !