ஸ்டூல் கொண்டு வரவா?
அரசினர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தபோது, காலையில் வழக்கம் போல் வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ளாதவர்களை, வழிபாட்டுக் கூட்டம் முடிந்தவுடன் அனைவரின் முன்னிலையில் வைத்து, எங்கள் உதவி ஆசிரியர் அடிப்பார்.அன்றும் சில மாணவர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆகவே, அடிவாங்க காத்திருந்தனர். வழிபாட்டுக் கூட்டம் முடிந்தது. உதவி ஆசிரியர் சற்று குட்டையானவர்; சிறியவர்களை கன்னத்தில் ஆளுக்கு இரண்டு அடி கொடுத்தார். அதில் இரண்டு அண்ணன்கள் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், சற்று உயரமானவர்கள். எங்கள் ஆசிரியர் அவர்களை கன்னத்தில் அடிக்க குதித்தார்; எட்டவில்லை.உடனே அருகில் இருந்த மாணவன், 'சார்! நான் வேண்டுமானால், ஸ்டூல் கொண்டு வரவா சார்?' என கேட்டு, கோபத்தில் இருந்தவரையும், எங்களையும் சேர்த்து சிரிக்க வைத்துவிட்டான். அப்புறம் என்ன? அந்த மாணவன் புண்ணியத்தில் மற்றவர்கள் அடி வாங்காமல் தப்பினர்.ரா.சுதா, ஓடைப்பட்டி.