மின்னலின் தலைநகரம்!
வானில் மின்சாரத்தின் வெளிப்பாடே மின்னல். வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஒளிக்கீற்றாக பிரிந்து மறைந்து விடும். வளிமண்டலத்தில் தறிகெட்டு அலையும் மேகங்கள், மின்னுாட்டம் பெறுகின்றன. எதிர் மின்னுாட்டத்தால் அவை ஈர்க்கப்படும் போது, மின் பாய்ச்சல் ஏற்படுகிறது. அதையே மின்னல் என்பர். அமெரிக்கா, வெர்ஜினியா தேசிய பூங்கா தோட்ட பராமரிப்பாளராக பணிபுரிந்தவர், சல்லிவன். ஏழு முறை மின்னலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், பிழைத்து விட்டார். ஆச்சரியமாக இருக்கிறதா... மின்னல் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்...* பூமியில், வினாடிக்கு, 100 மின்னல் கீற்றுகள் பாய்கின்றன* கடலில் பாய்ந்தால், தண்ணீர் சூடாகும்; அருகே நிற்கும் படகுகள் பாழாகும். அந்த பகுதியில் மீன்களும் இறக்கும்* வானில் பாயும் மின்னலை, 160 கி.மீ., துாரத்திலிருந்து கூட பார்க்க இயலும். ஆனால், அவ்வளவு துாரம் கேட்காது, இடி* வீட்டிக்குள் இருப்பவர் மீது பாய்வது மிக அபூர்வம்; இதுவரை ஒருவர் மட்டுமே இறந்துள்ளார்* உலகம் முழுதும் ஆண்டுதோறும், 2.40 லட்சம் பேர் மின்னலால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 6,000 பேர் இறப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது* பாறை மீது, மின்னல் பாய்ந்தால் வெடித்துச் சிதறும்* மின்னல் பாய்ந்தால் தொலைபேசி, கணினி போன்ற மின்னணு கருவிகள் பழுதடையும்* ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஓர் ஆலயத்தில், 1769ல் பாய்ந்தது மின்னல்; அங்கு, குண்டு தயாரிக்க, 90 டன் வெடி பொருள் வைக்கப்பட்டிருந்தது. விளைவு, ஆலய உள் பகுதி மற்றும் சுற்று வட்டாரத்தில் வசித்த, 3,000 பேர் பலியாயினர்* ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரீஸ் நகரில் ஈபிள் கோபுர உச்சியில் மின்னல் பாய்ந்து, 1902ல் பாதிப்பு ஏற்பட்டது. பெரும் பொருட்செலவில் சீரமைக்கப்பட்டது* ஆஸ்திரேலியா, நியூசவுத்வேல்ஸ் பகுதியில், மழை பெய்தபோது, மரங்களின் அடியில் ஒதுங்கி நின்ற, 68 பசுக்கள் மின்னல் பாய்ந்து இறந்தன. இது, 2005ல் நடந்தது* கிழக்காசிய நாடான ஜப்பான் தீவுகளில், இடி, மின்னல் மிக இயல்பு* மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ பகுதியில், ஜூக்கா மலைத்தொடர் உள்ளது. இங்கு தான், மின்னல் பாய்ச்சல் மிக அதிகம்! ஒரு சதுர கி.மீ., பரப்புக்குள், 150 முறை ஒரே நாளில் பாய்ந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த பகுதியை, 'இடி, மின்னலின் தலைநகரம்' என, செல்லமாக அழைக்கின்றனர்.பாதுகாப்பு அறிவோம்...* மின்னலின் போது, உயர்ந்த மரம், மின்சாரம் மற்றும் அலைபேசி கோபுரங்களின் அடியில் ஒதுங்கக்கூடாது. இவற்றில் மின்னல் பாயும் அபாயம் அதிகம். உடனடியாக கட்டடங்களுக்குள் செல்ல வேண்டும் * வெட்ட வெளியில் நின்றால், கைகளால், காதுகளை இறுக மூடியபடி, குனிந்த நிலையில் தரையில் அமர்ந்து கொள்ளலாம்* நீர்நிலையில் குளிப்பவர், மீன் பிடிப்பவர், படகு சவாரி செய்பவர் உடனடியாக வெளியேற வேண்டும். குளிப்பது, கைகழுவது, துவைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் * வெட்ட வெளியில் உலோகப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது* இருசக்கர வாகனம், மிதிவண்டி பயணங்களை மேற்கொள்ளக் கூடாது* மின்சாரம் கடத்தும் ரேடியேட்டர், மின் அடுப்பு, ஹேர் டிரையர், ரேசர், உலோகக்குழாய், தண்ணீர் தொட்டி, தொலைபேசி அருகே இருக்க கூடாது. அலைபேசி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி இயக்கத்தை நிறுத்திவிடவும்.- செல்வகணபதி