உள்ளூர் செய்திகள்

போட்டி!

இளைஞன் நிலவனை அழைத்த பூங்குன்றன், ''நீ என் பேரன் அல்ல. கொற்கை நாட்டு இளவரசன். குழந்தையாக இருந்த போது உன்னைக் கொல்லத் தாயாதிகள் முயற்சி செய்தனர். இதை அறிந்த அரசர் உன்னை என்னிடம் ஒப்படைத்தார்.''இளவரசன் என்ற உண்மை யாருக்கும் தெரியக் கூடாது. தெரிந்தால் இவன் உயிருக்கு ஆபத்து. இளைஞன் ஆனதும் உண்மையைச் சொல்லி இவனை என்னிடம் அனுப்பி வை,'' என்றார். உனக்கு இளவரசனுக்கு <உரிய எல்லாப் பயிற்சியும் தந்துள்ளேன்.''இந்த வாளையும், முத்திரை மோதிரத்தையும் உன் தந்தையிடம் காட்டு. உன்னை அவர் இளவரசனாக ஏற்றுக் கொள்வார். உடனே புறப்படு,'' என்றார்.தாய், தந்தையைப் பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் குதிரையில் அமர்ந்தான். கொற்கையை நோக்கிப் புறப்பட்டான். இரண்டு நாட்கள் பயணம் செய்த அவன், களைப்பு அடைந்தான்.வழியில் இருந்த சத்திரம் ஒன்றில் தங்கினான். அவனைப் போன்றே இளைஞன் ஒருவனும் அங்கே தங்கி இருந்தான்.இருவரும் நண்பர்கள் ஆயினர்.அந்த இளைஞன், ''நான் தையல் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளேன். பிழைப்புத் தேடி கொற்கை செல்கிறேன்,'' என்றான்.நிலவனும் தன்னைப் பற்றி அவனிடம் சொன்னான். ''தாய், தந்தையை நான் இதுவரை பார்த்தது இல்லை. இந்த வாளும், முத்திரை மோதிரமும்தான் இளவரசன் என்பதற்கு அடையாளம். விடிந்ததும் கொற்கை செல்லப் போகிறேன்,'' என்றான்.வஞ்சகனான அந்த இளைஞன் நிலவன் <உறங்குவதைப் பார்த்தான்.வாளையும், முத்திரை மோதிரத்தையும் எடுத்துக் கொண்டான். குதிரையில் அமர்ந்து கொற்கை வந்தான்.வாளையும், முத்திரை மோதிரத்தையும் அரசரிடம் தந்தான்.இளவரசர் வந்து விட்டார் என்று அரண்மனையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது.விழித்த நிலவன் வாளையும், முத்திரை மோதிரத்தையும் காணாது திகைத்தான். நண்பனின் வஞ்சகம் புரிந்தது. ஓட்டமும், நடையுமாக கொற்கை அரண்மனையை அடைந்தான். அங்கே அவன் நண்பன் இளவரசனாக வீற்றிருந்தான்.இதைப் பார்த்துப் பதறிய அவன், ''அரசே! நான்தான் உங்கள் உண்மையான மகன். இவன் தையல்காரன். சத்திரத்தில் என்னுடன் தங்கி இருந்தான். இவனிடம் எல்லாவற்றையும் சொன்னேன். ''வாளையும், முத்திரை மோதிரத்தையும் திருடிக் கொண்டு என் குதிரையில் வந்து விட்டான். உண்மையான இளவரசன் நான்தான். என்னை நம்புங்கள்,'' என்றான்.அவனை நம்பாத அரசர், ''மகனே! யார் இவன்? என்ன நடந்தது?'' என்று கேட்டார்.அதற்குப் போலி இளவரசன், ''தந்தையே! நண்பன் என்று நம்பி இவனிடம் எல்லா வற்றையும் சொன்னேன். இங்கே வந்து நான்தான் இளவரசன் என்று நாடகம் ஆடுகிறான்,'' என்றான்.''காவலர்களே! இவனை இழுத்துச் செல்லுங்கள்,'' என்று கட்டளை இட்டார் அரசர்.அங்கிருந்த அரசி,''இவனைப் பார்த்தால் என் மகனைப் போல உள்ளது,'' என்றாள்.''அரச வாளையும், முத்திரை மோதிரத் தையும் கொண்டு வந்தவன் இவன். உன் உணர்ச்சியை வைத்து நான் இளவரசனை மாற்ற முடியாது. இவன்தான் இளவரசன். அதில் எந்த மாற்றமும் இல்லை,'' என்று உறுதியுடன் சொன்னார் அரசர்.''தீர விசாரிப்பதே மெய் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்று கேட்டாள் அரசி.''எல்லாம் விசாரித்துத்தான் இவன் இளவரசன் என்று முடிவு செய்தேன்,'' என்றார் அரசர்.''இவர்கள் இருவருக்கும் ஒரு சோதனை வைக்க என்னை அனுமதியுங்கள். பிறகு உங்கள் விருப்பம் போல நடந்து கொள்ளுங் கள்,'' என்று கெஞ்சினாள் அரசி.''ஒரே ஒரு சோதனைதான்,'' என்றார் அரசர்.அரசியும் அதற்கு ஒப்புக்கொண்டாள்.''அம்மா! என்ன சோதனை?'' என்று அன்புடன் கேட்டான் போலி இளவரசன்.''உங்கள் இருவருக்கும் தனித்தனி அறை தருகிறேன். அதில் நீங்கள் எனக்குப் பட்டு ரவிக்கை தைக்க வேண்டும். யார் தைத்த ரவிக்கை அழகாக உள்ளதோ அவனே உண்மையான இளவரசன்,'' என்றாள்.''அம்மா! எளிய போட்டிதான் வைத்துள்ளீர். இதில் நான்தான் வெற்றி பெறுவேன்,'' என்றான் போலி இளவரசன்.இருவரும் தனித்தனி அறைக்குச் சென்றனர்.தான் தைத்த அழகான ரவிக்கையுடன் வந்தான் போலி இளவரசன்.''அம்மா! எப்படி என் திறமை?'' என்று ரவிக்கையை அவளிடம் காட்டினான்.வெறுங்கையுடன் வந்தான் நிலவன்.''நீ தைத்த ரவிக்கை எங்கே?'' என்று கேட்டாள் அரசி.''அம்மா! இளவரசன் நான். என்னிடம் வில் போட்டி, வாள் போட்டி, குதிரை ஏற்றம் போன்ற போட்டி வைத்திருக்கலாம். என் திறமையைக் காட்டி இருப்பேன். வாழ்நாளிலேயே நான் துணி தைத்தது இல்லையே... என்னால் எப்படி ரவிக்கை தைக்க முடியும்,'' என்று கண் கலங்கக் கேட்டான் இளவரசன் நிலவன்.அரசரைப் பார்த்த அரசி, ''என் உணர்ச்சி பொய்யாகவில்லை. இவன்தான் நம் மகன்.. இவன் சொன்னது போல அவன் தையல் காரன். உண்மையை அறியவே அப்படி ஒரு சோதனை வைத்தேன். தையல்காரனான அவன் அழகாக ரவிக்கை தைத்து உள்ளான்,'' என்றாள்.அவருக்கும் உண்மை புரிந்தது.'உண்மை வெளிப்பட்டு விட்டதே...' என்று நடுங்கினான் போலி இளவரசன்.அவனைச் சிறையில் அடைக்கக் கட்டளை இட்டார் அரசர்.நிலவனைக் கட்டித் தழுவிக் கொண்ட அரசர், ''மகனே! உன் அம்மா தீர விசாரித்ததால் உண்மை வெளிப்பட்டது. இல்லையேல் உன்னை நாங்கள் இழந்து இருப்போம்,'' என்றார்.குட்டீஸ்... எதையும் ஆராய்ந்து, தீர விசாரிப்பதே சிறந்தது!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !