உள்ளூர் செய்திகள்

காக்கை நண்பன்!

புதுவை நந்தவனத்தில் அழகிய மரங்கள் பூத்துக் குலுங்கின. அங்கு சிட்டு குருவி, பச்சைக் கிளி மற்றும் குயில்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.ஒரு நாள் -அவ்வழியே பறந்து வந்தது காகம். நந்தவனத்தின் அழகை பார்த்து வியந்தது. குயிலின், 'குக்கூ...' என்ற இனிய குரலும், பச்சைக் கிளிகளின், 'கீச்... கீச்...' என்ற அழகிய ஓசையும், சிங்காரமாக பறந்து திரியும், சிட்டு குருவிகளின் சுறுசுறுப்பும் கவர்ந்தன.சிட்டு குருவியிடம், 'நானும், ஒரு மரத்தில் கூடு கட்டிக் கொள்கிறேன்; என்னையும், உங்களில் ஒருவனாக சேர்த்துக் கொள்ளுங்கள்...' என கேட்டது காகம்.'உனக்கு அழகிய குரல் வளம் இல்லை. உன் குரலை கேட்கவே கேவலமாக உள்ளது. உன்னை ஏற்க முடியாது...' என கூறி நகைத்தது.அடுத்த மரத்திலிருந்த பச்சைக் கிளியிடம் ஆசையை தெரிவித்தது காகம்.தாமதிக்காமல், 'என் அழகுக்கு, ஈடு யாரும் இல்லை...' என கூறி விரட்டியது.அடுத்து குயிலிடம் வந்தது காகம்.மிக வருத்தத்துடன், 'நண்பரே... நானும், உங்களை போன்ற பறவை இனம் தான்; ஆனால், இந்த நந்தவனத்தில் வாழ சிட்டுக்குருவியும், பச்சைக்கிளியும் எதிர்க்கின்றன... உங்களால் உதவ முடியுமா...' என, பரிதாபமாக கேட்டது.ஏளனமாக நகைத்தபடி, 'எங்களோடு சேர்ந்து வாழ நீ ஆசைப்படுவது வியப்பாக உள்ளது; என் இனிய குரலுக்கு, இந்த உலகமே அடிமை... உன் குரலை நினைத்துப் பார்... உடனே, ஓடி விடு...' என, கோபம் பொங்க கூறியது குயில்.மிகுந்த கவலையுடன் பறந்தது காகம்.சற்று நேரத்தில், நந்தவனத்தில், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.குயில், சிட்டுக்குருவி, பச்சைக் கிளிகளும் கூச்சலிட்டன.இதைக் கேட்டு, 'ஏதோ ஆபத்து நிகழ்ந்திருக்கிறது' என எண்ணியபடி நந்தவனத்தில் நுழைந்தது காகம்.நினைத்தது போலவே, பாம்புகள் சில மரத்தை சுற்றி வந்தன; கூட்டிலிருந்த முட்டைகளை விழுங்க முயன்றன.அதை கண்ட காகம், சிறகுகளை வேகமாக அசைத்து, பலமாக குரல் எழுப்பியது. உடனே, நந்தவனத்தை முற்றுகையிட்டது காக்கை கூட்டம். சில நிமிட போராட்டத்திற்கு பின், பாம்புகளை விரட்டியடித்தன காக்கைகள்.காகத்தின் வலிமையை அறிந்து, 'மன்னித்து விடு நண்பா... ஆபத்தில் உதவுவது தான் உண்மையான அழகு என்பதை நிரூபித்து விட்டாய்... உன்னை நண்பனாக அடைவதற்கு, பெரும் தவம் செய்திருக்க வேண்டும்.... எங்களுடன் இருந்து விடு...' என கூறின. மகிழ்ச்சியில் துள்ளியது காகம்.குழந்தைகளே... வெளிப்புற அழகு அழகல்ல; ஆபத்துக் காலத்தில் உதவுவது தான் உண்மையான அழகு!பூபதி பெரியசாமி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !