ஏமாற்றாதே!
சலவைத் தொழிலாளியிடம், கழுதை ஒன்று இருந்தது; அதற்கு தேவையான தீவனத்தை அவனால் தர இயலவில்லை; வயிறு நிறைய புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும், அந்த பகுதியில் இல்லை.கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான் தொழிலாளி.ஒருநாள் -காட்டு வழியே நடந்து சென்றான். அப்போது, இறந்த புலியைக் கண்டான்; ஒரு திட்டம் தீட்டினான்.அவன் மனதில், 'இறந்த புலியின் தோலை உரித்து, கழுதை மீது போர்த்தி, வயல்களில் மேய விடலாம். உண்மையாக புலி மேய்வதாக எண்ணி, எதுவும் பேசாமல் இருந்து விடுவர் மக்கள்; கழுதை வயிறார மேயும்' என எண்ணினான்.புலித்தோலை உரித்து, கழுதை மீது போர்த்தி, நன்கு விளைந்த வயல்களில் மேய விட்டான்.அவன் எண்ணியபடியே பயந்து ஓடினர் மக்கள். வயல்களில் மேய்ந்த கழுதையை விரட்ட யாருமில்லை. வயிறு நிறைய மேய்ந்து கொழுத்தது கழுதை.ஒருநாள் -வயலில் கழுதை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அந்தப் பக்கம் வந்த பெண் கழுதை ஒன்று, உரத்த குரலில் கத்தியது; அதைக் கேட்டதும், புலித்தோல் போர்த்தியபடி மேய்ந்த கழுதையும் உற்சாகத்துடன் கத்தியது.இதை கண்டதும் திரண்டனர் மக்கள். ஏமாற்றி வயலில் மேய்ந்ததாக கழுதையை தடியால் அடித்து விரட்டினர். குழந்தைகளே... குறுக்கு வழிகள் என்றுமே பலன் தாராது; யாரையும் ஏமாற்ற கூடாது.பொன்னையா ராஜேந்திரன்