நிலநடுக்கமும் நம்பிக்கையும்!
உலகில் திடமாகவும், நிலையாகவும் இருப்பது நிலம் மட்டுமே. காற்று வீசுகிறது; அலைகள் சுழல்கின்றன. ஆனால் நிலம் மட்டும் நிலையாகவும் திடமாகவும் நிற்கிறது. அது எப்போதும் இப்படி இருப்பதில்லை.உலகின் எங்கோ ஒரு பகுதியில் திடீரென அதிர்கிறது நிலம். அதனால், விரிசல் ஏற்படுகிறது. கட்டடங்கள் உடைந்து, இடிபாடுகளுள் சிக்கி உயிரினங்கள் மாய்கின்றன. சில நிமிடங்களில், எதுவுமே நடக்காதது போல் எல்லாம் அமைதி நிலைக்குத் திரும்பிவிடும்.நிலம் நடுங்குவதை ஆங்கிலத்தில் 'எர்த் க்வேக்' என்பர். இந்த ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில், 'நில நடுக்கம்' என பொருள். இது கடலுக்கடியிலும் நிகழும். அப்போது நீர் பரப்பு குலுங்கும். இதனால் நீண்ட அலை உருவாகி, நீண்ட துாரம் பயணித்து, நிலப்பகுதியை அடையும். அவ்வாறு வரும்போது நீர்ச்சுவர் போல் மாறி, நிலத்தைத் தாக்கும். இதனால் பெரும் சேதம் ஏற்படும். சாதாரண அலையை, 'ஓதம்' அல்லது 'ஏற்றவற்றம்' என அழைப்பர். ஆங்கிலத்தில், 'டைடல் வேவ்' என்பர்.கடலுக்கு அடியில் நிகழும் நடுக்கத்தால் தோன்றும் அலைக்கும், இதற்கும் தொடர்பில்லை. இதை குறிப்பிட புதிய சொல் தேவைப்பட்டது. கிழக்காசிய நாடான ஜப்பான் மொழியில், 'சுனாமி' என இதற்கு பெயர். அந்த சொல்லே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதை, 'துறைமுக அலை' என தமிழில் பொருள் கொள்ளலாம்.நிலநடுக்கம் பற்றி பார்ப்போம்...* ஐந்து நிமிட நேரமே நீடிக்கக்கூடியது* எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி ஏற்படும்* அளவிட முடியாத மனிதன், உயிரினங்கள் பலியாகும்.வேறு எந்த இயற்கைப் பேரிடரும், இத்தனை சிறிய காலத்தில் மிகப் பெரிய அழிவை தருவதில்லை. புவி தோன்றிய காலத்திலிருந்தே நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகிறது. பழங்காலத்திலே நிலநடுக்கம் பற்றி அறிந்திருந்தனர் மக்கள். துவக்கத்தில் கடவுளின் சினத்தால் ஏற்படுவதாக நம்பினர். தடுக்க பல சடங்கு முறைகளை உருவாக்கினர். கிரேக்கர்கள், 'பாசிடான்' என்ற கடல் கடவுளே, நிலநடுக்கத்திற்கும் காரணம் என நம்பினர். திரிசூலத்தை கடவுள் ஆட்டும்போது, நிலம் நடுங்குவதாகவும், கொந்தளிப்பதாகவும் நம்பினர். பல பழங்குடியினத்தவரும் இது போன்றே நம்பினர்.நெருப்புக் கடவுள்தான் இதற்குக் காரணம் என சில இனத்தவர் நம்பினர். அதற்கு காரணம், எரிமலைகளுக்கு அருகே நிலநடுக்கம் அதிகமாக நிகழ்வது தான். அமெரிக்கா அருகே ஹவாய் தீவில் வசித்த பழங்குடிகளின் நம்பிக்கை வித்தியாசமானது. நெருப்பை குறிக்கும் பெண் கடவுளின் பெயர் பீலீ. அவள் பெரிய எரிமைலையின் கீழ் வசிப்பதாகக் கருதினர். அவள் கோபமடையும் போதெல்லாம், காலை தரையில் ஓங்கி மிதிப்பதால் நிலநடுக்கம் ஏற்படுவதாக நம்பினர். அதற்கு ஏற்ப சடங்குகளை உருவாக்கினர். நம்பிக்கையால் கட்டுண்டு கிடந்தனர்.கிரேக்கர்களின் நம்பிக்கை சற்று வினோதமானது. கடவுளால் தோற்கடிக்கப்பட்டது ஒரு மிகப்பெரிய உருவமுள்ள மிருகம். அதை சங்கிலியால் பிணைத்து, எரிமலைக்கு அடியில் சிறை வைத்துள்ளார் கடவுள். அந்த மிருகம் சங்கிலியை அறுத்து தப்ப முற்படும்போது, நிலம் நடுங்குவதாக நம்பினர். இப்படி உலகம் முழுதும், பழங்குடி மக்களிடம் பல கதைகள் உலாவின.கி.மு., 384 முதல், 322 வரை வாழ்ந்தவர், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில். இவர்தான், நிலநடுக்கத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை முன்வைத்தார். உலகில் எல்லா பொருட்களுக்கும் ஓர் நிலையான இடம் உண்டு. திடப்பொருளான நிலம் கீழேயும், நீர் நிறைந்த பெருங்கடல் அதற்கு மேலாகவும், இவற்றின் மேல் காற்றும் இருக்கும். இம்மூன்றில், ஏதேனும் ஒன்று உரிய இடம் மாறினால், தனக்குரிய இடத்தை அடைய முயலும். அதாவது புவியைச் சேர்ந்த திடப்பொருள் வானிற்கு எடுத்துச் செல்லப் பட்டால், அது கீழே வந்துவிடும். அதுபோல காற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்டால், அதற்குரிய இடமான விண்ணிற்குச் செல்ல முயலும். பூமியின் அடியில் மிகப்பெரிய அளவில் காற்று அடைபட்டிருப்பதாகவும், இது விண்ணிற்கு செல்ல முற்படும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என்ற கருத்தை வெளியிட்டார் அரிஸ்டாடில். இந்த விளக்கம் நம்பும்படியாக இருந்தது. இதைவிட பொருத்தமான விளக்கம், பல நுாற்றாண்டுகளாக உலகில் பிறக்கவில்லை.எப்படி ஏற்படுகிறது! நிலநடுக்கம் என்பது பூகம்பம், பூமியதிர்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது. பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி சக்தி வெளியேற்றப்பட்டு, கண்டத்தட்டுகள் நகர்வதனால் ஏற்படுகிறது. பூமியின் மேற்பரப்பு பெரும் பாளங்களாக அமைந்துள்ளன. இவை, நகரும் கண்டத்தட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இந்த கண்டத்தட்டுகளில், ஏழு மிகப் பெரியதாகவும், 12 சிறிய தட்டுகளும் உள்ளன. இந்தப் பாளம், 80 கி.மீ., வரை தடிமன் கொண்டது. இதன் அடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமி சுழற்சி வேகத்தில் பாறைக் குழம்பு நகர்வதாலும், தட்டுகளின் மேலோட்டுப் பகுதி உராய்ந்து நகர்கின்றன. ஆண்டுக்கு, 1 செ.மீ. முதல், 13 செ.மீ. வரை நகர்வதாக அறிஞர்கள் கணித்துள்ளனர். இவற்றில் லேசான உராய்வு கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்த வல்லவை. நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தும் நிலநடுக்கம்; எரிமலை செயல்பாட்டையும் அதிகரிக்க செய்யும்.- கு.வை.பாலசுப்ரமணியன்