உள்ளூர் செய்திகள்

புகையிலைக்கு பகை!

சிவகங்கை மாவட்டம், செக்ககுடி, புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில், 1983ல், 2ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! என் அண்ணன் சுதாகர், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். நண்பர்களுடன், கண்மாய்கரையில் திருட்டுத்தனமாக புகைப்பிடித்தார். அது, வகுப்பு ஆசிரியை பெல்லாவுக்கு தெரிய வந்தது. மறுகணமே தலைமை ஆசிரியை பிலோமினாளிடம் புகார் தெரிவித்தார்.அன்று மாலை வகுப்பு முடிந்து, வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். மைதானத்தில், என் அண்ணன், நண்பர்களுடன் முட்டிக்கால் போட்டு நின்றிருந்தார். தலைமை ஆசிரியை ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து வந்தார். அதை ஏற்றி உருகி வழியும், சூடான மெழுகை அவர்களின் காதின் மேல் விட்டார்.உருகிய மெழுகு பட்டதும் வலியால் துடித்தனர். ஒற்றைக்காதை பொத்தி அழுதபடி, 'இனிமேல் இப்படி செய்ய மாட்டோம்...' என மன்றாடினர்.'இது போன்ற செயல் தான், உயிருக்கே ஆபத்தாய் முடியும்! உயிர் மேல் ஆசை இல்லையென்றால், இந்த கெட்ட பழக்கத்தை தொடருங்கள்; ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள்...' என்றார். அவர் சொன்னவை என் காதுகளில் ஒலித்தபடியே இருக்கிறது. இப்போது, என் வயது, 45; வியாபாரம் செய்கிறேன். என் கடையில் புகையிலை பொருட்களை விற்பதில்லை என்ற உறுதியை கடைபிடிக்கிறேன். அதற்கு காரணமாக இருந்த தலைமை ஆசிரியையை, நன்றியுடன் வணங்குகிறேன். - சு.பிரபாகர், சிவகங்கை.தொடர்புக்கு: 91594 07208


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !