உள்ளூர் செய்திகள்

தோல்வி!

''என்னடா கணேசா... கவலையா உட்கார்ந்துருக்க...''விசாரித்தார் ஆசிரியர் நல்லசிவம். ''ஓவிய போட்டியில், இம்முறையும் பரிசு கிடைக்கல... கஷ்டப்பட்டு பயிற்சி செய்து, ரொம்ப சிறப்பா வரைஞ்சேன் ஐயா...'' கணேசனின் குரல் தடுமாறியது; அருகிலிருந்த செல்வம், ஆறுதல் படுத்தும் வகையில் தட்டிக்கொடுத்தான். ''கவலைப்படாதே... கடைக்குப் போகணும்... உன் மிதிவண்டியை இரவல் தர்றியா...'' என கேட்டார் ஆசிரியர். சாவியை கொடுத்தான் கணேசன். ''கொஞ்சம் அவசரம்... வேகமாக போகுமா இந்த மதிவண்டி...'' ''வேகமா போணும்னா, இது சரிப்படாது... செல்வம் மிதிவண்டியை பயன்படுத்துங்க ஐயா...'' அவனது சாவியை வாங்கி கொடுத்தான் கணேசன். ''ஏன்... உன் வண்டியில் ஏதாவது பிரச்னையா...'' ''அதில், 'பிரேக்' சரியாக இல்லை... வேகமா போனா நிறுத்த முடியாது...'' என்றான்.புன்னகைத்த ஆசிரியர், ''எந்த அளவுக்கு, பிரேக் சிறப்பாக இருக்கோ, அந்த அளவுக்கு வேகமாக போகலாம்; பிரேக் இல்லைன்னா போகவே முடியாது... ''அது போலத்தான், வாழ்க்கையில, எவ்வளவு தடைகள் வருதோ, அதற்கேற்ப முயற்சியும் அதிகரிக்கும். தோல்வி இல்லைன்னா வளரவே மாட்டோம். தோல்வி மேலும் கற்க சொல்லித்தரும் வாய்ப்பு...'' என்றார் ஆசிரியர்.கணேசன் முகத்தில் புன்னகை பூத்தது. அன்புச் செல்வங்களே... வெற்றி, தோல்வியை இயல்பாக கொள்ளுங்கள். முயற்சி வென்றால், விதை மரமாகும்; வெல்லாவிட்டால் உரமாகும். - சாய் ஜயந்த்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !