பூ மாலை!
சிரபுஞ்சி நாட்டை, சந்திரஹாசன் என்ற அரசன் ஆண்டு வந்தான். பல நாடுகளில் இருந்து வரும், கற்றறிந்த அறிஞர்களை கவுரவித்து, அவர்கள் பெற்ற அனுபவங்களை, அரச சபையில் கூற சொல்லி, மக்கள், கல்வி அறிவு பெறச் செய்தான். அறிஞர்களின் சொற்பொழிவுகள் மூலம் நல்லஅறிவுத் திறமையை வளர்த்துக் கொண்டான். இவனது புகழ், அண்டை நாடுகளில் பரவியதோடு, பல நாட்டு அரசர்கள், அரசனைக் காண, சிரபுஞ்சிக்கு வந்தனர்.அண்டைய நாடான, தங்கபுரியை அழகி சுந்தரி என்னும் பெண் அரசி, ஆண்டு வந்தாள். தந்தையிடம் முறையாக, பயிற்சி பெற்று, தன் தந்தைக்குப் பின், ஆட்சிப் பொறுப்பை ஏற்று, திறமையாக ஆண்டு வந்தாள்; சந்திரஹாசனின் புகழை கேள்விப்பட்டு, அவன் அறிவுத் திறமையை சோதிக்க விரும்பினாள். தன் நாட்டு துாதுவனை அனுப்பி, அரசி அழகி சுந்தரியின் வருகையை தெரிவித்தாள்.ஒரு நல்ல நாளில், சில குதிரை வீரர்களுடன் சிரபுஞ்சிக்கு புறப்பட்டாள். செல்லும் வழியில், ஒரு பூந்தோட்டத்துக்குச் சென்று, தான் கொண்டு வந்த பூமாலையில் உள்ள நிறத்தில், பூக்களை பறித்து, ஒரு மாலையாக்கி, சந்திரஹாசனின் அரச சபைக்கு வந்தாள்.இவள் வருகையை, துாதுவர் மூலம் அறிந்த சந்திரஹாசன், சகல மரியாதைகளுடன் வரவேற்று, உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினான். அரசருக்கு, தன் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டாள். ''அரசே... தங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். என்னுடைய நாட்டில் இருந்து வரும் போது, இரண்டு மாலைகளை எடுத்து வந்துள்ளேன்... இந்த இரண்டு மாலைகளில், எது உண்மையான மாலை என்று கண்டுபிடிக்க வேண்டும்...'' என்றாள்.அவள் கையில் இருந்த, இரண்டு மாலைகளைப் பார்த்த அரசன் ஆச்சரியப்பட்டு, உற்றுப் பார்த்தான்; காரணம், இரண்டு மாலைகளும், ஒரே மாதிரியாக இருந்தன.இரண்டு மாலைகளுடன், அரண்மனைக்கு பக்கத்தில் இருந்த, பூந்தோட்டதுக்கு அரசியை அழைத்துச் சென்றான். அங்கே, சிறிது நேரம் அரசியுடன் பேசிக் கொண்டிருந்தான். பிறகு, அரச சபைக்கு வந்தனர்.''அரசியாரே... உங்கள் வலது கையில் உள்ள பூமாலை தான் நிஜப் பூக்களால் கட்டிய மாலை...'' என்று, முகத்தில் புன்னகையுடன் கூறினான்.சரியான பதிலால், மகிழ்ச்சி அடைந்து, அவனது புத்திக்கூர்மையைப் பாராட்டினாள். ''நிஜப் பூக்கள் உள்ள மாலையை, எப்படி கண்டு பிடித்தீர்...'' என்று கேட்டாள்.''அரசியாரே... உங்கள் கையில் இருந்த நிஜமாலையை தோட்டத்தில் இருந்த வண்டுகள் சுற்றி வந்தன.அதை வைத்து எளிதில் கண்டுபிடித்து விட்டேன்...'' என்றான்.அவனது அறிவுத் திறமையை பாராட்டினாள். அவள் கேட்ட பல கேள்விகளுக்கு, சிறப்பாக பதிலளித்தான் சந்திரஹாசன். ''உங்களை பற்றி கேள்விப்பட்டதை விட, நீங்கள் மிகுந்த புத்திசாலியாக இருக்கிறீர்...'' என்று கூறி, பாராட்டி, தன் நாட்டிற்கு புறப்பட்டாள். நிறைய பரிசுகள் கொடுத்து சிறப்பித்தான் சந்திரஹாசன். அறிவுள்ளவர்களைத் தேடி, பேரும், புகழும், செல்வமும், மக்களும் வருவர் என்பது புரியுதா குட்டீஸ்!