உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி!

விநாயகரை வணங்கி, நற்செயல்களை ஆரம்பிப்பது, பக்தர்களிடம் வழக்கமாக உள்ளது. எந்த கோவிலிலும் முதலில் வரவேற்பது விநாயகர் தான். இவருக்கு பல பெயர்கள் உண்டு. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா, இந்தியா முழுதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா, மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜி ஆட்சி காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அவரது ஆட்சி பரப்பில் தேசிய மற்றும் கலாசார விழாவாகவும் இருந்துள்ளது. பின், மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறியது; வீடுகளிலும், பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்தனர்.சுதந்திரப் போராட்டக் காலத்தில் இது பிரபலமானது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர், பொதுமக்களும் இணையும் திருவிழாவாக மாற்றினார்.பின், மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலைகளை, பொது இடங்களில் வைத்து, வண்ணமிகு கொண்டாட்டங்கள் துவங்கின. ஏழைகளுக்கு ரூபாய் நோட்டு தானமாக வழங்கும் நிகழ்வும் இந்த விழாவில் இணைந்தது.தமிழகத்தில் பொது விழாவாக அறிமுகமானது விநாயகர் சதுர்த்தி; இப்போது குடும்ப விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. களிமண்ணில் தயாரித்த சிலைக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அருகம்புல் சாற்றி, வண்ணக்குடை வைத்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்களும் படைக்கப்படுகிறது. வாழை, திராட்சை, நாவல், விளாம் பழங்களை படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள். அறிவு, தெளிந்த ஞானம் அளித்து, எடுத்த செயல்களில் தடை வராவண்ணம் காத்தருள வேண்டியே இந்த படையல் நடக்கிறது. சதுார்த்திக்கு மறுநாள், புனர் பூஜை என்ற சிறுபூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து சிலைகளை, கடல், கிணறு, குளம், ஆறு மற்றும் ஏரியில் விடுவது வழக்கமாக உள்ளது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !