ராட்சசியான அத்தை!
நான் தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாய்; குடும்பத் தலைவி.திருச்சியில் பிரபலமான பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களின் பள்ளி ஆண்டு விழா வந்தது. நாடகம், நாட்டியம், மாறுவேடப் போட்டி என்று ஆண்டுவிழா களை கட்டும். அந்த ஆண்டு விழாவில் நான் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டேன்.குஷ்டரோகப் பிச்சைக்காரியாக வேடம் போட்டேன். திரைத் துறை, ஒப்பனை கலைஞர் 16 வயது பெண்ணான என்னை, அவலட்சணமாக மாற்றிவிட்டார். என்னாலேயே என்னை அடையாளம் காண முடியவில்லை. நானா என்ற சந்தேகம் எழுந்தது. அந்த ஆண்டு மாறுவேடப் போட்டியில் எனக்கே முதல் பரிசு!மகிழ்ச்சியில் திளைத்த நான், வேடத்தைக் கலைக்காமல் என் அத்தையிடம் காட்ட விரும்பினேன். தோழியுடன் ஆட்டோவில் அத்தை வீட்டிற்குப் புறப்பட்டேன். நாலைந்து வீடுகள் முன்பாக இறங்கி அத்தையின் வீட்டிற்குள் நுழைந்து, 'அம்மா தாயே பசி உயிர் போகுது, ஏதாவது போடும்மா!' என்றேன்.வெளியே வந்த அத்தைக்கு என்னை அடையாளம் தெரியவில்ல. 'ஏம்மா பிச்சை கேட்கிறவ வீட்டிற்குள்ளேயே வந்துட்டயா... வெளியே போய் நில்லும்மா' என்று கூறினார்.நானும் துடுக்காக, 'ஏம்மா உங்கம்மா, அத்தைக்கு இந்த வியாதி வந்தா வெறுத்திடுவியா?' என்றவுடன் மிகவும் கோபமாக உள்பக்கம் திரும்பி மாமாவை அழைத்தார்.'எடுக்கிறது பிச்சை... பேசுற பேச்சைப் பாரு. போ... போ!' என்று விரட்டினார்.உள்ளிருந்து வந்த மாமாவிற்கும் அடையாளம் தெரியாமல், 20 ரூபாய் நோட்டை கொடுத்து வெளியே போக சொன்னார்.'மகாராசனா இருப்பே... உனக்கு போய் ஒரு ராட்சசியான பொண்டாட்டி' என்றேன்.இதைக் கேட்ட என் அத்தை கம்பால் என்னை அடிக்க வந்தார்.'நல்லா அடிங்க அத்தே' என்று கூறி என் ஒப்பனையைக் கலைத்தேன்.அத்தையும், மாமாவும் என் நடிப்பைப் பாராட்டி கட்டி அணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வை எண்ணி எண்ணிப் பார்க்க, மனம் இன்பம் கொண்டாடுகிறது!- இ.பசரியா, திருச்சி.